நிம்மதியான நாடு…

Spread the love

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு என பேடு நீங்கி பிறத்தல் அரிது & அவ்வை மூதாட்டியின் அற்புத வரிகள் இவை. ஆனாலும் என்ன உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். நம் நாட்டில்  ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 சதவீதம் தற்கொலைகள். இதில் 40 சதவீதம் பேர் ஆண்கள். 60 சதவீதம் பேர் பெண்கள்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், கடன் தொல்லை, காதல் தோல்வி என தற்கொலைக்கு சமூக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நமது முன் மூளைப் பகுதி, மூளையின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மனம், எண்ணம், எழுச்சி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைந்து மனிதனை வாழ வைக்கிறது.

இந்த ஒருங்கிணைந்த மூளைச் செயல்பாட்டில் சுற்றுச்சூழல் தாக்கமும், உடல் உள்ளுணர்வு தாக்கமும் எல்லை மீறும் போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. அது தீவிரமடையும் போது ஒருவரது மனம் அவசர முடிவு எடுத்து, தற்கொலை அரங்கேறி விடுகிறது.

தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்புக் கோளாறுகளும். அடுத்ததாக மதுப் பழக்கம், போதைப் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்டவையும் தற்கொலையைத் தூண்டுகின்றன.

தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டு தோறும் உலகத் தற்கொலை தடுப்பு நாளை அனுசரித்து வருகின்றன.

சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. தனிமைப்பட்டு இருப்பவர்களிடம் தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும் போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் உள்ளம் வாடினேன் என்றார் வள்ளலார். ஓரறிவு உள்ள தாவரத்தின் வாட்டத்துக்கே, அவர் உள்ளம் உருகுகிறார். ஆறறிவு உள்ள மனிதனின் வாட்டத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? இதற்காக நாம் காசு, பணம் செலவழிக்க வேண்டாம். மற்றவர்கள் பிரச்சனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லத் தெரிகிறதோ இல்லையோ ஆறுதல் சொல்லத் தயங்கக் கூடாது.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.. வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை..’ என்ற கண்ணதாசனின் வரிகளைச் சொல்லி, வாடி நிற்பவர்களை எல்லாம் ஆற்றுப்படுத்த வேண்டும்.

தங்கள் நலன் கருதி,

ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.


Spread the love