பழம்பாசி வயல் நிலங்களில் காணப்படும் சிறிய செடியாகும். இதனை நிலத்துத்தி என்றும் அழைப்பர். பழம்பாசியினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாததாகும். பழம்பாசி இலைகள் இதய வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களை உடையதாகும். இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில். இது இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய் தீவுகள், புதிய பிரான்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. அனைத்து வகை நிலங்களிலும் வளரக் கூடிய இத்தாவரம் தமிழகமெங்கும் தரிசு நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் தானாகவே வளரக் கூடியதாகும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
தாவர விவரம்
மூலிகையின் பெயர் | பழம்பாசி |
தாவரப்பெயர் | SIDA CARDIFOLIA |
தாவரக்குடும்பம் | MALUACEAE |
பயன் தரும் பாகங்கள் | சமூலம் |
பழம்பாசி மருத்துவ குணங்கள்
உடல் சூடு குறைய
பழம்பாசி செடியின் இலையை நன்கு அரைத்து அதனைத் தலையில் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, முகம் அழகு பெறும். மேலும் இது உடலின் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
கட்டிகள் மறைய
பழம்பாசி இலையுடன் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து அதனை குழப்பி கட்டிகள் மீது வைத்து கட்டி வர அவை பழுத்து உடையும்.
மூலச் சூடு நீங்க
பழம்பாசி இலை 20 கிராம் அளவில் எடுத்து நன்கு அறிந்து கொள்ளவும். இதனை அரை லிட்டர் பாலில் சேர்த்து வேக வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து மூன்று வேளை சாப்பிடலாம்.
இதனை 20 மில்லி லிட்டர் அளவில் குழந்தைகளுக்கு காலை மாலை என இரு வேளை கொடுத்து வர இரத்த கழிச்சல், சீதக் கழிச்சல், ஆசனம் வெளித்தள்ளல் ஆகியன நீங்கும்.
குளியல் பொடி
அதிகளவு வெப்பத்தினால் நமது சருமங்களில் சுருக்கங்கள் மற்றும் தளர்வுகள் உண்டாகும். இதனால் தலைவலி ஏற்பட்டு பல இன்னல்களும் ஏற்படலாம். இதனை சரி செய்ய பழம்பாசி பெரிதும் உதவுகிறது.
பழம்பாசி இலைகளை நீர் ஊற்றி நன்கு அரைத்து கெட்டியான பதத்தில் தலையில் நன்கு அழுத்தி தேய்க்கவும். சிறிது நேரம் ஊறவைத்து பின் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் உடல் வெப்பம் தனிந்து புத்துணர்ச்சி பெறும். மேலும் முகத்தில் உள்ள அசதி, களைப்பு, சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும்.
பழம்பாசி இலையின் பயன்கள்
பழம்பாசி இலையானது மூலநோய், சர்க்கரை நோய், உடல் சூடு, சிறுநீரில் விந்து வெளியேறல், வெள்ளைப்படுதல் போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது.
பழம்பாசி இலை கிராமங்களில் அதிக அளவில் பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைப்படுதல் என்பது இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகும். இது இனப்பெருக்க உறுப்புகளின் வலியே திரவம் வருதல் , பூஞ்சை தொற்று, கருப்பை, சிறுநீர்ப்பை பாதிப்புகளால் ஏற்படலாம்.
இதற்கு ஒரு கைப்பிடி அளவு பழம்பாசி இலைகள், சிறிது சீரகம் எடுத்து அதனுடன் தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மேலும் நிழலில் காய வைத்த பழம்பாசி இலை, லேசாக வறுத்த சீரகம், வெந்தயம் ஆகியவற்றை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை நன்கு இடித்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம். இதனை ஆண் பெண் இருபாலரும் சாப்பிடலாம்.
ஊளைச்சதை நீங்க
பழம்பாசி இலையை நன்கு உலர வைத்து பொடியாக்கவும். இதனை தினமும் நீர் அல்லது மோரில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர ஊளைச்சதை கரையும்.
மேலும் இதனால் உண்டாகும் இரத்த அழுத்த பாதிப்பு, இரத்த சோகை, நரம்புத்தளர்ச்சி, சுவாசக் கோளாறுகள் போன்றவற்றை சரி செய்யவும் பழம்பாசி மூலிகைப்பொடி சிறந்ததாகும்.
ஆயுர்வேதம்.காம்