உடலுக்கு பக்கபலம் பாஸ்பரஸ்

Spread the love

கால்சியமும் பாஸ்பரஸும் இணைந்து கால்சியம் பாஸ்பேட்டாக எலும்பில் படிந்துள்ளன. எலும்புகள் மட்டுமல்ல, பற்களும் வலிமையாக ஆரோக்கியமாக இருக்க கால்சியமும், பாஸ்பரஸும் தேவை.

உடலில் உள்ள பாஸ்பரஸில் கிட்டத்தட்ட 80%, எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. உடலில் செல்களில் முக்கியமாக இருப்பது பாஸ்பரஸ். உடல் சக்தியை சேமிக்கவும் தேவையான போது வெளிக்கொணர்வதற்கும் பாஸ்பரஸ் உதவுகிறது. நமது மரபணுக்களை – டி.என்.ஏ, ஆர்.என்.ஏ  முதலியவற்றை உருவாக்கவும் பாஸ்பரஸ் உதவுகிறது. கார்போஹைடிரேட், கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்சிதை மாற்றத்திற்கு பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாஸ்பரஸ் தேவைகள்

நமது உடலில் சராசரியாக 680 கிராம் பாஸ்பரஸ் உள்ளது. தினசரி தேவை 700 லிருந்து 800 மி.கி. அதிகபட்ச வரம்பு 4000 மி.கி. பாஸ்பரஸ் நாம் உண்ணும் உணவுகளிலிருந்தே கிடைக்கும்.

பாஸ்பரஸ் உள்ள உணவுகள்

பால், சீஸ், கொட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், பேரீச்சை, சோயா, கேரட், கொய்யாப்பழம், மாமிசம், மீன், முட்டை முதலியவை.

பாஸ்பரஸ் குறைந்தால்

உடல் எடை குறையும். எலும்புகளும் பற்களும் பலவீனமாகும். தைராய்டு கோளாறுகள் அல்லது சிறுநீரக கோளாறுகள், உடலில் பாஸ்பரஸ் பற்றாக்குறை ஏற்பட இதர காரணங்கள். ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவில் ஏற்படும் கேடோ அசிடோசிஸ், மதுபானங்கள் அருந்துதல், தீக்காயங்கள் முதலியன. இத்தகைய வியாதிகளிலிருந்து மீள உடல் அதிக அளவு பாஸ்பரஸை உபயோகிப்பதால், திடீர் குறைபாடுகள் ஏற்படலாம்.

தசை பலவீனம், எலும்பு பலவீனம் மற்றும் முறிவுகள் பாஸ்பரஸ் குறைவின் அறிகுறிகள்.

பாஸ்பரஸை பெற எளிய வழி – ஆடை நீக்கப்பட்ட பாலை குடிப்பது. தவிர எளிமையான சைவ உணவில் கூட (குறிப்பாக தானிய உணவுகளிலிருந்து) நமக்கு தேவையான பாஸ்பரஸ் கிடைப்பதால், பாஸ்பரஸ் குறைபாடு அபூர்வம்.

பாஸ்பரஸ் அதிகமானால்..

இந்த நிலை அபூர்வமாக ஏற்படும். சிறுநீரக பாதிப்புகள் இருந்தால் தேவைக்கு அதிகமான பாஸ்பரஸை சிறுநீராக வெளியேற்ற முடியாமல் போய், அவை ரத்தத்தில் தங்கி விடும். இதனால் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளைத்தாக்கு, மாரடைப்பு ஏற்படலாம்.


Spread the love