நான் பார்த்து வளர்ந்த பிள்ளை நான் சொன்ன சொல்லைத் தட்ட மாட்டான் என்று கூறிய நீங்கள் உங்கள் மகனோ/ மகளோ பருவ வயது என்று கூறப்படும் விடலைப் பருவ வயதில் வந்த பிறகு திகைத்துப் போயிருப்பீர்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை தடுமாற்றம் செய்ய வைக்கும் வயது விடலைப் பருவம். அந்த வயதில் அவர்களின் எண்ணங்களுக்கு, கேள்விக்கு உதாசீனப் படுத்தாது, மிரட்டாமல் ஒரு நண்பனாக நடந்து கொண்டு நல்வழிப் படுத்த வேண்டும்.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அப்பா, அம்மா, வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் பணி நிமித்தமாக குடும்பத்தில் இணைந்து, மகிழ்ச்சியாக அளவளாவும் நேரம் குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கும் இடைவெளி அதிகரித்து புரிதல் இன்மையை அதிகரித்து விட்டது. அதனால் அவர்களுடன் நல்ல ஒரு புரிதல் உணர்வு, நல்லுறவு ஏற்பட வலுப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழே நாங்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம்.
பகல் உணவு பருவ வயது உள்ள உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுங்கள்.
மகன்/மகளின் விருப்பத்திற்குரிய விஷயங்களில் (அது வளர்ப்புப் பிராணியாக இருக்கட்டும் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கட்டும்) நீங்கள் ஆர்வம் செலுத்துங்கள்.
மகன்/மகளின் விருப்பத்திற்குரிய திரைப்படங்களை பார்க்கும் பொழுது, அவர்களுடன் சேர்ந்து படம் பாருங்கள். ஆனால், உங்களுடைய கருத்துக்களைக் கூறுவதை தவிர்த்து விடுங்கள்.
அவர்களின் நண்பர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுங்கள். ஆனால், அவர்களை உங்கள் நண்பர்களாக மாற்ற முயற்சிக்காதீர்கள்.
குழந்தைகளை நீங்கள் ஏதும் பேச்சால் அல்லது செய்கையில் காயப்படுத்தி இருந்தால், திறந்த மனதுடன் உடனே அவர்களிடன் மன்னிப்புக் கேளுங்கள்.
அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் வெளியிடங்களில் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளான விளையாட்டுப் போட்டி, நாடகங்களில் நடித்தல், சமூக சேவை இயக்கங்கள் போன்றவற்றில் நீங்களும் உடன் சென்று கலந்து கொள்ளுங்கள்.
உங்கள் குடும்ப விஷயங்கள் மற்றும் முடிவுகளில் பருவ வயது குழந்தைகளது கருத்துக்கள் என்ன என்று கேட்பது நல்லது.
அவர்களுக்கு உண்மையிலேயே முக்கியமானதாகவும், அர்த்த முள்ள ஒன்றாக ஒரு செயலைச் செய்யும் பொழுது அவர்களைப் பாராட்டுங்கள்.
வாரம் ஒரு முறை, ஒரு குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுடன் விசேஷமாக கழிக்க ஒதுக்கும் படி திட்டமிடவும். எதிர்பாராத விதமாக தவிர்க்க முடியாத பட்சத்தில் வேறு ஒரு நேரத்தை மாற்றிக் கொள்வதற்கும் நினைவில் வைக்கவும்.
சிறிய விஷயமாக இருந்தாலும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் உறுதிகளை நிறைவேற்றுங்கள். நிறைவேற்ற முயற்சியுங்கள்.
தினசரி வீட்டில்/அலுவலகத்தில் நடந்த விஷயங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களும் தாங்கள் கண்ட/ அனுபவித்த அன்றைய நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அவர்கள் ஒரு செயலில் இறங்கி, அவர்களது முயற்சியானது தோல்வியைத் தழுவி இருந்தாலும், அவர்களது முயற்சியை பாராட்டுவதுடன், தைரியம் தருவதும் அவசியம். இதனால் அவர்கள் வெற்றிக்குச் செல்லும் பாதையை நோக்கி மீண்டும் பயணிக்க வைக்கும்.
தங்களுக்கு விருப்பமான உணவை அவர்கள் தயாரிக்கும் பொழுது சமையலில் அவர்களுக்கு உதவுங்கள்.
குழந்தைகள் செய்யும் ஒரு சில வேலைகளை நன்றாகச் செய்யும் பொழுது, உங்கள் பங்காக அவர்களுக்கு நீங்களும் உதவி செய்யுங்கள்.
குழந்தைகளின் நல்ல செயல்களை, சாதனைகளை அவர்களது நண்பர்கள், உறவினர்கள் முன்பு புகழ்ந்து பேசுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன் மட்டுமல்லாமல் மேலும் நல்ல செயல்களை அவர்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை, ஆசையைத் தூண்டும்.