குழந்தையை வளர்க்க கத்துக்குங்க..

Spread the love

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று சொன்னால் மக்கட்பேறு உட்பட 16 செல்வங்களைப் பெற்று சிறந்த வாழ்வு வாழ வேண்டும் என்று அர்த்தம். இதை பலர் 16 குழந்தைகளைப் பெற்றெடுக்கச் சொல்கிறார்கள் என்று தவறாக நினைப்பதுண்டு. ஒரு சிலரோ, ‘5 பெற்றால் அரசனும் ஆண்டியாவான். இதில் 16 பெற்றால் எப்படி பெருவாழ்வு வாழ முடியும்’ என்று கிண்டலடிப்பார்கள். கடந்த இரண்டு தலைமுறைகளாக இந்த ‘16 பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்ற பிரச்னை இல்லை. நாமிருவர் நமக்கு மூவர்; நாமிருவர் நமக்கிருவர்; நாமிருவர் நமக்கொருவர் என்றாகி விட்டது. மக்கள் தொகை இன்னும் பெருகி விட்டால், ‘நாமே இருவர், நமக்கெதுக்கு ஒருவர்’ என்றாகி விடும்.

குழந்தைகள் என்றால் அவர்கள் இன்பத்தின் வடிவம். ஒரு மழலையின் சிரிப்பை பார்த்தால் எல்லா கஷ்டங்களும் மறந்து போகும். மழலையின் பேச்சைக் கேட்டால் எல்லா துன்பங்களும் பறந்து போகும். குழந்தைகள் தெய்வத்தின் வடிவம். நாம் அதைக் கொண்டாடும் விதத்தில் கொண்டாடினால் கூடுதல் இன்பம். தற்போதெல்லாம் பேருக்கு ஏதோ ஒரு குழந்தை பெற்றெடுப்பது என்ற நிலைமை ஆகிவிட்டது. அதை வளர்ப்பதற்குள் பல பெற்றோர் பாடாய்ப்படுகிறார்கள்.

குழந்தையை அன்பும், அரவணைப்போடும் ஆதரவாய் வளர்ப்பதற்கு பதிலாக, அதற்கு சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கவலையில் ஆலாய்ப் பறக்கிறார்கள். குழந்தையை வளர்க்க, அதற்கான கல்விச் செலவுகளை பூர்த்தி செய்ய பணம் பிரதானம்தான். ஆனால், பணம் மட்டுமே பிரதானம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

‘நம்மதான் டாக்டர் ஆக முடியல.. இன்ஜினியர் ஆக முடியல..’ என்று பல பெற்றோர் தங்கள் ஆசைகளை குழந்தைகள் மேல் திணித்து ‘ரிங் மாஸ்டர்’ போல செயல்படுகிறார்கள். ‘உனக்காகத்தான்டா நான் இவ்வளவு கஷ்டப்படுறேன். நீ இப்படி பண்றியேடா..’ என்று புலம்பல் வேறு. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அது கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்தது. தற்போது அப்படி இல்லை. குழந்தைகளை பெற்றோர் கண்டித்தால், ‘உன் நல்லதுக்குதானேடா சொல்றாங்க..’ என்று தாத்தா, பாட்டி சமாதானப்படுத்துவார்கள். பெற்றோர் தண்டித்தால், தாத்தா, பாட்டி தடுக்க வருவார்கள். இந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது. சரி.. விஷயத்துக்கு வருவோம்.

குழந்தைகளுக்காக பெற்றோர் சர்வபரித் தியாகம் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தை வளர்ப்புக்காக பெற்றோர் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஒன்றை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கக்கூடிய பெரிய சொத்தே, தினமும் அவர்களுக்காக ஒதுக்கும் நேரம்தான். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் இப்படி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது அருகிப் போய்விட்டது என்று கூறுவதை விட அற்றுப்போய்விட்டது என்றே சொல்லலாம்.

அதிக மார்க் எடுக்கணும், அதிகமா சம்பாதிக்கணும் என்று சொல்லிச் சொல்லி, குழந்தைகளிடமிருந்து ‘ரோபோ’க்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்காலச் சமூகத்துக்கு ஆற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கித்தர வேண்டுமே தவிர, இயந்திரத்தனமான ரோபோக்களை அல்ல.

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு, அவர்களோடு நேசமாக உரையாடுவதைவிட்டு விட்டு, அவர்கள் கேட்டதை எல்லாம்.. செல்போன், டி.வி, லேப்டாப், வீடியோகேம்ஸ் போன்ற மின்னணு சாதனங்களை வாங்கிக் கொடுக்கிறோம். அந்த மின்னணு சாதனங்கள் குழந்தைகளைச் சமூகத்திடமிருந்து பிரிக்கிறது. மற்றவர்களை, அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மை குறைகிறது என்றால் அது மிகையில்லை.

ஒரு குழந்தையின் உடல், மனநிலைகளில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள்தான் பெற்றோர். குழந்தையின் முதல் கற்றல், பெற்றோர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. பெற்றோர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றனர். பெற்றோரின் உடை, உணவு, பேச்சு, நடத்தை என எல்லாவற்றையுமே குழந்தைகள் ‘இமிடேட்’ செய்கின்றனர். அதனால் பெற்றோரின் பேச்சில், செயலில் மிகுந்த கவனம் தேவை. குழந்தை எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறோமோ பெற்றோரும் அப்படியே முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைக்கு, பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். குழந்தை சொல்லுவதைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கு 80 சதவிகிதம் பதில் அளிக்க முயற்சிக்க வேண்டும். அது பேச ஆரம்பிப்பதற்கு முன்பே நடுவில் குறுக்கிட்டு உரையாடலைத் தடுக்கக் கூடாது. அப்படி குறுக்கிட்டால், குழந்தை நம்மிடம் எதையுமே சொல்லாது.

குழந்தைகளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால், மனதளவில் அவர்கள் முடங்கிவிடுவார்கள். எப்போதும் உற்சாக வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில், ஒரு குழந்தையை மட்டும் எப்போதும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசிக்கொண்டிருப்பது மிகமிகத் தவறு. புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அந்தக் குழந்தையை மட்டும் அல்லாமல், மற்ற குழந்தைகளையும் மனத்தளவில் பாதிக்கும். இவற்றை எல்லாம் கடைப்பிடித்து பாருங்கள். நீங்களும் சிறந்த பெற்றோர் ஆவீர்கள்.

விஞ்ஞான வளர்ச்சியை, நவீன தொழில்நுட்பத்தை நம் பிள்ளைகளிடம் இருந்து நம்மால் பறிக்க முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், யூ ட்யூப் போன்றவை, இளைய தலைமுறையின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், அனுபவங்களையும், படங்களையும் பகிர்வதற்குரிய தளங்களாக இருக்கின்றன. பெற்றோர்கள் அதை முழுவதுமாக தடுக்க முடியாதே தவிர, உபயோகத்தை வரையறைப்படுத்தலாம். பெண் குழந்தைகள் என்றால், அவர்களைப் பற்றிய பர்சனல் டேட்டா, படங்கள் போன்றவற்றைப் பகிர்வதில் கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துவதுடன், அவர்களின் ப்ரைவஸி செட்டிங்கை உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும். சமூக வலைதளங்களை ஒரேயடியாக ஒதுக்க முடியாத இந்நாளில், அதைப் பயன்படுத்துவதற்கான வரம்பை உருவாக்க கண்டிப்பாகப் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடான வழிகாட்டுதலும் தேவை.


Spread the love