பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் என்பது இரத்த ஓட்டமானது மூளைக்கு செல்வது தடைபட்டால், நின்று விட்டால் அந்த இடத்தில் உள்ள மூளை செல்கள் மரணித்து விடும். பக்க வாதம் ஏற்பட்டு விட்டால் அது மனிதனின் முழு உடலையும் பாதிக்கச் செய்து விடும். பக்கவாதம் & ஸ்ட்ரோக் ஏற்பட்ட உடனே வேகமாக தீர்வு காண முயல வேண்டும்.
அமெரிக்க அரசின் பக்கவாதம் மற்றும் நரம்பியல் நோய்களுக்கான தேசிய நிறுவனமானது பக்க வாதத்தின் அறிகுறி தென்பட்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை முன்னிறுத்திக் கூறுகிறது.
இதன் மூலம் பக்கவாதம் பாதிப்பு அறிகுறி தெரிந்த நபர், நீண்ட காலத்திற்கு பக்கவாதத்தினால் அவதிப்படுவதையும், மரணம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலும் என்று கூறுகிறது. நீங்கள் காணும் நபர் பக்கவாதத்தினால் தான் துடிக்கிறார் என்று உறுதியாக தெரிய இயலவில்லை எனினும் பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற, விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காவது அவசர மருத்துவ வாகனத்தை அழைப்பதற்கு நீங்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டும்.
பக்க வாதம் அறிகுறியினால் பாதிக்கப்பட்டவர், இரத்தம் கட்டியாவதை தடுக்கும் மருந்தை 4 முதல் 5 மணி நேரத்திற்குள் உட்கொள்ளச் செய்யும் பொழுது அவரை நீண்ட கால பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று இதயம் மற்றும் பக்கவாதம் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன. ஒரு சில பக்கவாதங்கள் அறுவைச் சிகிச்சை செய்யத் தேவைப்படுகின்றன.
பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை தெளிவாக உணர்ந்து கொள்வது என்பது வாழ்வுக்கும் இறப்புக்கும் உள்ள வேறுபாடாக புரிந்து கொள்ளலாம்.
வேகமாக செயல்படுங்கள்
பக்கவாத அறிகுறிகள் பெரும்பாலும் முன்கூட்டி அறிவித்தோ, எச்சரித்தோ ஏற்படுவதில்லை. திடீரென்று பக்கவாதம் ஏற்படுவது தான் மிகவும் துயரமான விஷயம். பாஸ்ட் (FAST – Face. Arms. Speech. Time) என்ற சொற்பதத்தை வைத்து பொதுவான பக்கவாத அறிகுறிகளை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று தேசிய பக்கவாத, நரம்பியல் நிறுவனம் வழிகாட்டுகிறது.
1. தலையை தொங்க விட்டுக் கொண்டு ஒருவர் சீரற்ற விதமாக முகக் கோணலுடன் சிரிக்க நேரிட்டால் அது பக்கவாதத்தின் முதல் எச்சரிக்கைக் குறியாகும்.
2. தோள்கள் இரண்டும் மரத்துப் போன அல்லது வலுவிழந்தது தெரிந்தால், பாதிக்கப்பட்டவரை கைகளை உயரத் தூக்கச் சொல்லிப் பாருங்கள். தோள்கள் கீழே தொங்கி விட்டால் அல்லது சம நிலையற்று மாறுபாடாகத் தெரிந்தால் அது பக்க வாதத்தின் அறிகுறி தான்.
3. பேசுவதற்கு சிரமம் ஏற்படும். பாதிக்கப்பட்டவரை ஒரு சில சொற்களைக் கூறி மீண்டும் திருப்பிப் பேசச் சொல்லி பல முறை சோதிக்க வேண்டும். வாய் குழறிய, தெளிவற்ற பேச்சுக்களாக இருந்தால் அது பக்கவாதத்தின் அறிகுறியே தான்.
4. ஏற்கனவே ஒரு முறை பக்கவாதத்தின் பாதிப்பை உணர்ந்திருந்தால், வேகமாக செயல்பட வேண்டியது அவசியம். மேலும் சில பக்கவாதத்திற்குரிய அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பார்வையின் சிரமம் (ஒரு கண்ணிலோ அல்லது இரண்டிலுமோ), மூட்டுகள் மரத்துப் போதல் (உணர்வே இல்லாதது), பொதுவாக ஏதாவது ஒரு பக்க மூட்டில் உடல் முழுவதும் களைத்துக் காணப்படுதல், நடப்பதற்கு சிரமப்படுதல்.
பக்கவாத அறிகுறிகள் பெண்களிடம் எவ்வாறு இருக்கும்?
பெண்கள் பக்கவாதத்தில் பாதிப்பு அடைவதும் திடீரெனத் தான் அமையும். முன்கூட்டியே தெரிந்து கொள்ள இயலாது. தடுமாற்றம், பொதுவான உடல் பலகீனம், மூச்சு விடுதலில் சிரமம், குறைவாக மூச்சு விடுதல், குழப்பமான, சரியாக பதில் அல்லது பொறுப்பை உணர இயலாத நிலை, திடீரென நடை, உடை பாவனைகளில் தோன்றும் மாற்றம், எரிச்சல், கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல், வலி, விரல்களை இறுக்க பற்றுதல், விக்கல் போன்றவைகள் பெண்களிடம் தோன்றும்.
மேற்கூறிய அறிகுறிகளில் எது தோன்றினாலும் இது பக்கவாத அறிகுறி தான் என்பதை எப்படி முடிவெடுப்பது?
பாதிப்புற்ற நபரின் முகம் தொங்கிய நிலையில் இருக்கிறது. ஆனால் அவரால், சிரமம் இன்றி நடக்க, பேச இயலுகிறது எனில் அவரது கை, கால்களில் எவ்வித பலகீனமும் இல்லை என்று தான் கூற வேண்டும். இது போன்ற தருணங்களில், சில நேரங்களில் பக்கவாத அறிகுறியாக மாறுவதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கலாம் என்பதால் உடனே வேகமான மருத்துவ ஆலோசனை/சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
பக்கவாத அறிகுறிகள் தெரிந்து கொண்ட பின்பு முதல் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் ஒரு சில மருந்துகளை பாதிக்கப்பட்டவருக்கு உட்கொள்ளச் செய்வதனால் மொத்தத்தில் பக்கவாதம் அல்லது மரணம் ஏற்படாமல் தடுக்க இயலுகிறது.
ஸ்ட்ரோக் என்றழைக்கப்படும் பக்கவாதம் மூன்று வகைகளாக கூறப்படுகிறது.
1. இரத்தத் திட்டுகள் சேதமுறுவதனால் தோன்றும் ஹெமரோஜிக் ஸ்ட்ரோக்
2. இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக தோன்றும் கெமிக் ஸ்ட்ரோக்
3. மினி ஸ்ட்ரோக் என்ற தற்காலிகமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக தோன்றும் ஸ்ட்ரோக்.
மினி ஸ்ட்ரோக்கானது மிகப் பெரிய நிரந்தரமான பாதிப்பிற்குக் காரணமாக அமைவதில்லை. எனினும் பக்கவாதம் ஏற்படுவதற்குரிய அறிகுறிகளை அதிகரிக்கக் கூடியதாகும். மேற்கூறிய ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு குணம் பெற்றவர்களுக்கு கீழ்க்கண்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
உடல் பலகீனம் மற்றும் உடலியக்கக் கோளாறுகள், உணர்வுகளில் மாற்றம், நினைவுத் திறன், கவனம் அல்லது மன நிலை குறைதல், மன அழுத்தம், உடல் அசதி, கண் பார்வைக் குறைபாடுகள், நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரிதல்.
ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படலாம் என்று உணர்ந்த மனிதர்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்கலாம்?
ஏற்கனவே இது விஷயமாக நாம் சிகிச்சை எடுத்து வந்திருப்பின் எப்பொழுது வந்தது, மருத்துவ சிகிச்சைகளின் விபரம், மருந்து சீட்டுகள், சிகிச்சையளித்த மருத்துவர், மருத்துவமனை பற்றிய எழுத்துப் பூர்வமான தகவல்கள் கைவசம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவசர காலத்தில் நாம் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் பெயர், முகவரி மற்றும் அவரது தொலைபேசி எண்கள், பக்கவாத அறிகுறிகள் தோன்றினால், உடனே செய்ய வேண்டியது என்ன என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதை எவ்வாறு தடுக்கலாம்?
அதிக அளவு பசுமையான காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். கோழி, இறைச்சி மற்றும் மட்டன் சாப்பிடுவதற்குப் பதிலாக மீன் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். தோல் நீக்கிய தானிய வகை உணவுகள், உப்பு, சோடியம், சர்க்கரை போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைக்க வேண்டும்.
உடற்பயிற்சிகளை தினசரி அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். பீடி, சிகரெட், மது போன்றவற்றை தவிருங்கள்.
வேறு இதர மருத்துவ காரணிகளால் ஸ்ட்ரோக் ஏற்பட சந்தர்ப்பங்கள் ஏற்படுமா என்பதை மருத்துவரை அணுகி தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
பா. முருகன்