பப்பாளி ஒரு எளிமையான, எங்கும் கிடைக்கும் பழம். கிராம மக்கள் அதிகம் உண்ணும் பழம். குறைந்த விலை, விரைவில் விளைந்து பழம் தரும் மரம் பப்பாளி. வளமான மண் கிடைத்தால் நன்றாக வளரும். வளமில்லாத மண்ணிலும் வளரும். தென்னை மரம் போல் உயரமாக வளரும் பப்பாளி மரம் 12 மீட்டர் வரை வளரும். பனை மரம் போல் இலைகள் அடர்ந்திருக்கும். பப்பாளி மரம் உறுதியில்லாதது. மரத்தண்டு 25 செ.மீ. சுற்றளவு இருக்கும். பப்பாளி மரத்தில் ஆண், பெண் வகை மரங்கள் உண்டு. ஆண் மரம் காய்க்காது. வெறும் பாளையில் பூக்கள் மலரும். மகரந்த சேர்க்கை மூலமாக ஆண் மரத்தின் மகரந்தம் பெண் மரத்தில் சேர்ந்து, அதனால் பெண் மரம் காய்க்கும். ஒரே காம்பில் பல பூக்கள் உருவாகி, பிஞ்சு பிடித்து காய்த்து பழுக்கும்.
பப்பாளிப்பழம் ‘சூடு நிறைந்தது – கருச்சிதைவை உண்டாக்கும்’ என்று பலர் நினைப்பதால் இந்தப் பழம் இன்றைய நாகரிக மக்களிடையே பரவவில்லை. பப்பாளியின் இலை, காய், பழம், பால் இவைகள் மருந்தாக பயன்படுகின்றன.
பப்பாளிப் பழம் தாதுப்பொருட்களும், விட்டமின்களும் நிறைந்தது. கலோரிகள் குறைவு. 100 கிராம் பப்பாளியில் 32 தான் கலோரிகளின் அளவு.
பப்பாளி பிறந்த இடம் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவை சேர்ந்த ஹவாய் தீவுகள், ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் விளைகின்றது.
பப்பாளியின் எல்லா பாகங்களிலும் பால் போன்ற திரவம் இருக்கும். இதில் பாப்பைன் என்ற செரிமான பொருள் இருக்கின்றது.
பப்பாளியின் பயன்கள்
Bமேலை நாடுகளில் காலை உணவில் பப்பாளி சேர்த்துக் கொள்கிறார்கள். தவிர ஆட்டுக்கறி, மாட்டுக்கறி போன்ற மாமிசங்களை சமைக்கும் போது பப்பாளியையும் சேர்த்து வேக வைக்கிறார்கள். ஏனெனில் மாமிசம் எளிதில் ஜீரணமாக பப்பாளி உதவுகின்றது. எளிதில் வேகாத ஆட்டு மாமிசம் போன்றவற்றை பப்பாளி துண்டுகள் சீக்கிரம் வேக வைக்கும். மொத்த மாமிசத்தில் எட்டிலொரு பங்கு பப்பாளி துண்டுகள் போட்டால் போதும்.
பப்பாளி குடற்பூச்சிகளை அழிக்கும். பப்பாளிப்பால் ஒரு கரண்டியும் அரை டீஸ்பூன் சிற்றாமணக்கெண்ணையுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க, நான்கைந்து முறை பேதியாகும். அத்துடன் குடல்பூச்சிகள் வெளியேறிவிடும். பப்பாளிக்காயும் அனைத்து வயிற்றுப்பூச்சிளையும் அகற்றி விடும்.
வளரும் குழந்தைகளுக்கு, அதுவும் குறிப்பாக பலவீனமான குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தையும், வாழைப்பழத்தையும் மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
தினமும் ஒரு சிறுதுண்டு பப்பாளிப்பழம், அதனுடன் ஒரு டம்ளர் காய்ச்சிய பால் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
பப்பாளிக்காயின் தோலை நீக்கி, துண்டுகள் செய்து பருப்புச் சேர்த்து கூட்டாகவோ, சாம்பாரிலோ சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.
உடல் கட்டிகளுக்கு பப்பாளி இலையை மை போல் அரைத்து கட்டிகள் மேல் பற்றுப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
பப்பாளி இலை மேல் வேப்பம் எண்ணெய்யை தடவி அதை தணலில் காட்டி, வாட்டி, புண்ணின் மேல் வைத்து கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும். தவிர உடலில் எங்காவது வீக்கம் இருந்தால் அதன் மேல் வாட்டிய இலையை வைத்து கட்டி வீக்கம் வாடி விடும்.
பப்பாளிப்பால் ‘மண்டைக்கரப்பான்’ எனும் தொல்லை தரும் வியாதிக்கு மருந்தாக வைத்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
பெண்களின் மாதவிலக்கில் தடை இருந்தால் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் நீங்கும்.
கை கால் வலிக்கு பப்பாளி இலையை அரைத்து கை கால் குடைச்சலுக்கு பற்று போட்டு வெந்நீரில் கழுவ, வலி குடைச்சல் தணியும்.
பெண்களின் அழகு சாதனங்களில் உதவும் பழம் பப்பாளி. காய்களின் பால் போன்ற ஜுஸ், தோலில் உள்ள பரு, மரு, கரும்புள்ளிகள் இவற்றை நீக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தினமும் பப்பாளிப் பழத்தை குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெந்நீரால் கழுவ முகம் பொலிவடையும்.
எச்சரிக்கை
கருவுற்ற பெண்கள் பப்பாளிப்பழத்தை சாப்பிடக்கூடாது.
பப்பாளி சூப்
தேவை
பப்பாளிகாய்-200கி
தண்ணீர்-200மி.லி
தக்காளி-1
வெங்காயம்-1
பூண்டு,இஞ்சி-சிறிது
கொத்தமல்லி-சிறிது
கறிவேப்பிலை, புதினா-சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள்-சிறிது
உப்பு-தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பப்பாளிக் காயை தோல் சீவி நறுக்கி கொட்டை நீக்கி தண்ணீரில் கலந்து வேகவைக்கவும். கொதி நிலையில் பிற காய்கறி கீரைகளைச் சேர்த்து வேக வைத்து மசித்து வடிகட்டவும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.
பப்பாளி ஜுஸ்
தேவை
பப்பாளி சிறியது-1
எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்
சீனி-தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ்-சிறிது
புதினா இலை-5
செய்முறை
பப்பாளியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சம் ஜுஸ், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்.