பஞ்ச கர்மா

Spread the love

பஞ்ச கர்மா ஆயுர்வேத மருத்துவத்தின் சிகிச்சை முறைகளில் முக்கியமானதொன்று. இன்றைய உலகம் அதிவேக உலகம். வாழ்க்கை வசதிகள் பெருகி மனிதன் மகிழ்ச்சியாக வாழ, பல வழிகள் இருக்கும் காலம் இது. மனிதனின் ஆயுள் நீடிக்கப்பட்டாலும் புதுப் புது வீரியமிக்க வியாதிகள் மனிதனை வாட்டுகின்றன. நீரிழிவு போன்ற ‘பாரம்பரிய’ நோய்களிலிருந்து மனிதன் இன்னும் விடுபடவில்லை. வியாதிகள் வருமுன் காப்பது நல்லது. இந்த வகையில் ஆயுர்வேதம் சிறந்த வைத்திய முறையாகும்.

வசதிகளும், செழிப்பும் பெருகினாலும் அதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. உணவு உற்பத்தியை பெருக்க உபயோகிக்கும் மருந்துகள், செயற்கை உரங்கள், மாறிய உணவு முறைகள், உழைப்பின்மை, சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், தீய பழக்க வழக்கங்கள் இவற்றால் மனித உடலின் கழிவுப் பொருட்களும், நச்சுப் பொருட்களும் தேங்கி விடுகின்றன. இதனால் இளமையில் முதுமை, மனச் சோர்வு, பலவீனம், புற்றுநோய்கள், நீரிழிவு போன்றவற்றால் மனித உடல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையை மாற்றும் சிகிச்சை பஞ்ச கர்மாவாகும்.

பஞ்ச என்றால் ஜந்து, கர்மா என்றால் முறைகள் – செயல்பாடுகள் பஞ்ச கர்மா ஜந்து வழிகளால் உடலில் உள்ள கழிவு நச்சுகளை இயற்கை முறையில் உடலின் துவாரங்கள் வழியே வெளியேற்றுகிறது.

பஞ்சகர்மா ஆரம்பிக்குமுன், முன்னேற்பாடாக “பூர்வகர்மா” சிகிச்சை தரப்படும்.

பூர்வகர்மா

ஸ்நேஹனா:

உடலில் எண்ணை ‘பசையை’ ஏற்றுவது. உடலை மிருதுவாக்கும். இது 3 லிருந்து 7 நாட்களுக்கு கொடுக்கப்படும். உடலில் எண்ணை பசை ஏற ஏற உடல் வறட்சி நீங்கி, நல்ல பசி உண்டாகும். எண்ணை பசையால் மலம் சுலபமாக வெளியேறும். திரவ உணவு கொடுக்கப்படும் ஸ்நேஹனா தனிச்சிகிச்சையாகவும் சில நோய்களுக்கு, பயன்படுகிறது.

ஸ்நேஹன முறையில் உள்ளுக்குள் கொடுக்கும் நெய் போன்றவை தவிர உடல் வெளியே ‘மசாஜ்’ ஜும் செய்யப்படும். உத்வர்த்தனம் என்ற முறையில் மூலிகை பொடிகளால், உடலின் கீழிருந்து மேலாக மசாஜ், செய்யப்படும். ஸ்நேஹனா சிகிச்சையின் போது நோயாளியை கண்காணிப்பது அவசியம்.

ஸ்வேதனம்:-

இது வியர்வை உண்டாக்கும் சிகிச்சை. இருமல், தலைவலி, பாரிசவாயு, மூட்டுவலி, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்றது. உடலுக்கு பலவழிகளில் ‘சூடு’ கொடுக்கப்படும் மொத்தம் 23 வகைகளில் 13 சூட்டாலும் 10 முறைகள் சூடில்லாமலும் இந்த சிகிச்சை செய்யப்படும் வெளிச்சூட்டை கொடுக்காமல் உடலில் வியர்வை வர, உடற்பயிற்சிகள், உடலை சுற்றி கம்பளியால் மூடுவது, பசி, வெய்யில் போன்றவை கையாளப்படும்.

பஞ்ச கர்மா ஜந்து கட்டங்களுடையது.

பஞ்சகர்மா. அவை

வமனம்

விரேசனம்

தைல வஸ்தி 

கஷாய வஸ்தி 

நஸ்யம்.

வமனம்:-

பாதிக்கப்பட்ட தோஷங்கள் வாய் வழி வெளியேற, வாந்தி உண்டாக்கப்படும் சிகிச்சை முறை வமனம். நோயாளிகளுக்கு மூலிகை மருந்தை கொடுத்து வாந்தி உண்டாக்கப்படும். இந்த சிகிச்சை கவனமாக, மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வமன சிகிச்சை லகுவான சிறிதளவு திரவ உணவுக்குப்பின் மேற்கொள்ளப்படும். பழைய மருந்து உபயோகித்தல் அளவுகளில் குறைவு

விரேசனம்:-

பேதி உண்டாக்கும் மூலிகை மருந்துகளை கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வது விரேசனம். வயிற்றிலுள்ள வாதம், பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களையும் சுத்தப்படுத்தும் சிகிச்சை இது. பேதியை உண்டாக்க மூலிகைப் பொடி (அ) கஷாயம் பயன் படுகின்றன. விரேசன சிகிச்சையை, ஸ்நேஹனா மற்றும் ஸ்வேதனா சிகிச்சை செய்த பிறகு தான் மேற் கொள்ள வேண்டும் என்கிறார் வாகபட்டர். விரேசனம் இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது.

எண்ணெயால் செய்யப்படும் விரேசனம் -பொடியினால் செய்யப்படும் விரேசனம்:- விரேசன சிகிச்சைக்குப் பின், நோயாளி லகுவான ஆகாரம் உண்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வஸ்தி: இது ‘எனிமா’ வை குறிக்கும் சொல், சரகர் வஸ்தி, வாத நோய்களை முழுமையாக குணமாக்க வஸ்தி சிகிச்சை தேவை என்கிறார். மருந்துகள் நோயாளியின் ஆசன துவாரம் பழியே செலுத்தப்படுகின்றன. இது இருவகைப்படும்.

கஷாய வஸ்தி 

தைல வஸ்தி (அன்னுவாசன வஸ்தி) நிரூகவஸ்தி

நஸ்யம்:-

நாசித் துவாரங்களின் வழியாக மருந்து செலுத்தும் சிகிச்சை ‘நஸ்யம்’ எனப்படுகிறது. இதை ‘சிரோ விரேசனம்’ என்றும் சொல்வார்கள் நாசித்து வாரங்கள் சிரசின் கதவுகள் எனப்படுவதால், இவை மூலம் செலுத்தப்படும் மருந்துகள் தலையில் பரவி, அங்குள்ள தோஷகுறைகளை சமன் செய்யும், மூக்கு, கண், காது நோய்கள், தலைவலி, திக்குவாய், போன்றவற்றுக்கு பலனளிக்கும்.

மேற்சொன்ன தவிர, சில ஆயுர்வேத நூல்கள் கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சையும் பஞ்சகர்மாவில் சேர்த்து கூறுகின்றன.

பிராணாயாமம் – மூச்சைகட்டுப்படுத்தும் கலை

நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.

கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி நல்ல ஆசானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்பாடு. உடலின் எல்லா வித அவயங்களும் சரியாக இயங்க தேவைப்படும் பிராண வாயுவை தருவது மூச்சு.

‘பிராணா (அ) பிராணன்’ என்ற வார்த்தை பல பொருள் கொண்டது பிராணன் என்றால் உயிர் – உயிர்சத்தி, காற்று, வாயு, பிரபஞ்ச சத்தி, சுவாசம், மூச்சு என்று பல பொருள் கூறலாம்.

நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில் “அல்வியோலி” (Alveoli) என்ற சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன. ரத்தக்குழாய்களுக்கும், அல்வியோலிக்கும் நடுவே உள்ள ‘தடை சுவர்’ ஒரு மைக்ரான் தடிமன் தான்! ஒரு மைக்ரான் ஒரு சென்டி மீட்டரின் 10,000 த்தில் ஒரு பகுதி (1/10,000)! நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை (Oxygen) ரத்த தந்துகிகளின் (மெல்லிய ரத்தக் குழாய்கள்) சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு (Carbon – di – oxide) காற்றுப்பைகளுக்கு சென்று, நாம் மூச்சு விடும் போது, மூக்கு வழியே வெளியேறுகிறது நுரையீரலில் ரத்த தந்துகிகளுக்கும், காற்றுப் பைகளுக்கும் காற்றுப் பரிமாணம் இவ்வாறு நடக்கிறது.

பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. இந்த பிராண வாயுவை நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம். பிராண சக்தியின் உடலின் இயக்கம், அறிவு, ஆன்மீக வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது. பிராணன் தான் ஜீவாத்மாவையும், பிரகிருதியையும் இணைக்கிறது. பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.

யோசித்துப் பார்த்தால் வாயு (காற்றின்) வின் அசாதாரண சக்தி புரியும். நாம் இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களை டி.வி. மூலம் பார்க்க முடிவது எவ்வாறு? கண்ணுக்கு தெரியாமல் காற்றின் மூலம் பரவி வரும் மின்னனுக்கள் மூலமாக டி.வி., ரேடியோ மூலம் எங்கேயோ நடக்கும் நிகழ்வுகளை வீட்டிலிருந்தே பார்க்கிறோம், கேட்கிறோம்.

மனித சரீரத்தில் பிராணன் சுவாசத்தை குறிக்கிறது. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியை கட்டுப்படுத்தியது போல் தான். மூச்சை கட்டுப்படுத்தினால் முனிவராகலாம்!

பிராணாயாமத்தை அறிந்து கொள்ளும் முன்பு, நாம் சொல் வழக்கில் “பஞ்சப் பிராணன்” என்று கூறும் ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.

1. பிராண வாயு

இருக்குமிடம் – தலை

பணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.

2.         உதான வாயு

இருக்குமிடம் – கழுத்து, தொண்டை

பணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.

3.         வியான வாயு

இருக்குமிடம் – மார்பு

பணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.

4.         சமான வாயு

இருக்குமிடம் – தொப்புள்

பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

5.         அபான வாயு

இருக்குமிடம் – அடிவயிறு

பணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.


Spread the love