மூலிகை சமையல் பாகல்

Spread the love

பாகற்காய் எல்லோருக்கும் தெரிந்த ஒரு கொடி வகையைச் சேர்ந்த காயாகும். இதன் இலை, காய் முதலியன மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். பாகற்காயில் பல வகைகள் இருந்தாலும் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது ‘மீதி பாகற்காய்‘ எனப்படும் குட்டை வகையும், நீளமான பாகற்காயும் ஆகும். பாகற்காயின் தாவரப் பெயர் Mimordica Charantia என்பதாகும்.

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்

பாகற்காய் நீரிழிவுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. மூலநோய், கல்லீரல் பாதிப்புகள், மூட்டு வியாதி போன்ற நோய்கள் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள விலகும். பல ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில் பாகற்காயில் இன்சுலீன் என்ற வேதிப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட புரதம் – பி.இன்சுலீன் – ஆங்கில மருந்து டோல்புடாமைட்டுக்கு (Tolbutamide) இணையானது. ஆய்வுகளின் படி டயாபடீஸில் பாகற்காய் சாறு இன்சுலீன் போல் வேலை செய்கிறது. இந்த இன்சுலீன் கணையத்தை புதுப்பிக்கிறது. இன்சுலீனை உற்பத்தி செய்யும் பீடா செல்களை குணப்படுத்தி உயிர்பிக்கிறது. நம் உடல், கார்போ-ஹைடிரேட் கிடைக்காத போது, அமினோ அமிலங்களிலிருந்து குளுகோஸை, கல்லீரல், சிறுநீரகங்களிலிருந்து எடுத்துக் கொள்ளும் இதை குளுகோனியோ ஜெனிசஸ் என்பார்கள். பாகற்காயில் உள்ள ‘சாரன்டின்’ என்ற பொருள் இந்த குளுகோனியே ஜெனிசஸை தடுக்கிறது. வயிற்றிலிருந்து குளுகோஸை எடுப்பதையும் குறைக்கிறது.

சிறுவர்களுக்கு வயிற்றில் பூச்சிகள் அதிகரித்து இரவு வேளையில் ஆசன துவாரத்தில் அரிப்பு எடுக்கும். இதற்கு பாகற்காய் இலையை கொண்டு வந்து சுத்தம் செய்து அம்மியில் வைத்து சாறு எடுத்து காலை வேலையில் அரை டம்ளர் அளவு உள்ளுக்கு கொடுத்து வந்தால் அப்பூச்சிகள் ஓரிரு நாட்களில் வெளியேறிவிடும்.

சமையல் குறிப்புகள்

பாகற்காய் ஜீஸ்

தேவையான பொருட்கள்

பாகற்காய் (மீடியம் சைஸ்)     – 2

மிளகு பொடி   – 1/4 டீஸ்பூன்

சீரகப் பொடி   – 1/4 டீஸ்பூன்

உப்பு   – சிறிது

எலுமிச்சம் பழம்          – 1/4 ஒரு பழத்தில்

செய்முறை: பாகற்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜீஸில் மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு எலுமிச்சம் பழ சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

பாகற்காய் சூப்

தேவையான பொருட்கள்

பாகற்காய் (மீடியம் சைஸ்)     – 1

துவரம் பருப்பு (வேகவைத்ததது)         – 1/4 கப்

சிறிய வெங்காயம்      – 3 நறுக்கியது

தக்காளி           – 1 நறுக்கியது

பச்சை மிளகாய்          – 2 நீளவாக்கில் நறுக்கியது

கார்ன் ஃப்ளார்            – 2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், சோம்பு, மிளகு, பட்டை எல்லாம் சிறிது.

செய்முறை: ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு, மிளகு, பட்டை போட்டு தாளித்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் பாகற்காயையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வதக்கி வேகவைத்த துவரம் பருப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு, இரண்டு சத்தம் வரும் வரை விடவும். பின் திறந்து கார்ன்ஃப்ளார் மாவை சிறிது நீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மீதி பாகற்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

மீதி பாகற்காய்             – 1/4 கிலோகிராம்

உரித்த பூண்டு – 10 பல்

உரித்த சிறிய வெங்காயம்      – 10

தக்காளி            – 1 நறுக்கியது

கறிவேப்பிலை             – சிறிது

சாம்பார் பொடி        – 3 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – சிறிது

உப்பு                         – தேவைக்கேற்ப

நல்லெண்ணெய்           – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க            – கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு.

செய்முறை: ஒரு இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். மீதி பாகற்காயை இரண்டு பாதியாக நறுக்கவும். நறுக்கிய பாகற்காயையும் அதில் போட்டு நன்கு வதக்கி, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்கு வேக விடவும். நன்கு எண்ணெய் பிரிந்து வதங்கியதும் இறக்கவும்.   


Spread the love