மூட்டுக்களை முடமாக்கும் உடல் பருமன்

Spread the love

உடல் பருமன் கால் மூட்டுகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கும். வாழ்நாள் முழுவதும் நம் உடல் எடையைத் தூக்கி சுமப்பது இந்த மூட்டுகள்தான். உடல் நகர்வைச் சாத்தியப்படுத்துவதும், எளிமைப்படுத்ததும் நமது மூட்டுகள்தான்.

அதிகப்படியான எடையுடன் இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்னும் மோசமான நோய் தாக்கக்கூடும். இந்த நோயால் மூட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து போகும். பிறகு உடல் நகர்வை முழுவதுமாகத் துண்டித்து, கடும் வலியை உண்டாக்கும்.

தொடை, கால் ஆகிய இரண்டு தனித்தனி உடல் உறுப்புகளை இணைக்கும் பாகம் மூட்டுதான். கால் மூட்டு எலும்பு தான் அசைந்து கொடுப்பதன் மூலம் உடல் நகர்வைச் சாத்தியப்படுத்துகிறது. மூட்டு என்ற உறுப்பு இல்லாமல் நம்மால் நடக்கவோ, ஓடவோ, குனியவோ, உட்காரவோகூட முடியாது.

மூட்டு எலும்பைச் சுற்றிலும் இருக்கும் தசைகள் மகத்தான ஒரு காரியத்தைச் சத்தம் போடாமல் செய்துவருகின்றன. ஓர் எலும்பு மற்றொரு எலும்புடன் உரசிக் காயப்படாமல் காப்பாற்றுவது இந்தத் தசைகள்தான். மூட்டுப் பகுதியின் ஆரோக்கியம் என்பது தசைகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே. அதிக எடையைத் தாங்கும்போது மூட்டை சுற்றியிருக்கும் தசைகள்தான் பெருத்த சேதம் அடைகின்றன. ஒருவரின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்தால், அவருடைய மூட்டு அதைவிட பன்மடங்கு அழுத்தத்தைத் தாங்க வேண்டி வரும். அதுவே அவர் ஒரு கிலோ எடை குறையும்போது 4 கிலோ அளவுக்கு, அவருடைய மூட்டின் மீதான அழுத்தம் குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் முதுமையின் பிரச்சினையாக இருந்து வந்த ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், இன்றைக்கு வாலிபர்களையும் வாட்டிக் கொண்டிருக்கிறது. உடற்பயிற்சி, விளையாட்டு, சரிவிகித உணவு போன்றவற்றைக் கைவிட்டதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் வாலிபர்கள், மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். பெரும்பாலான நேரம் தவறான அமரும் நிலையும், உடல் அசைவின் முக்கியத்துவமும் அவர்களுக்குப் புரிவதில்லை. நடப்பது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற நல்ல பழக்கங்களும் அவர்களிடம் இல்லை. ஆபீசில் இருந்து வீடு திரும்பியதும், சோபாவில் அமர்ந்து கொண்டு ரிமோட்டை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மாற்றி மாற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பொழுதைக் கழிக்கின்றனர். இதன் விளைவாக உடல் பருமன் பிரச்சினையால் நகர்ப்புற இந்தியாவில் பலரும் அவதிப்படுகிறார்கள்.

அதிக எடை கொண்ட உடல், மூட்டின் மீது கடுமையான அழுத்தத்தைச் செலுத்துகிறது. ஆண்களைவிட பெண்களே ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாகக் கால்சியம், வைட்டமின் டி போதாமைதான் இதற்குக் காரணம். அதேநேரம் உடல் பருமன் தொடங்கி, வயோதிகம், பாலினம், புகைப் பழக்கம், மரபணு எனப் பல்வேறு காரணங்களால் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் தாக்குவது உண்டு.


Spread the love