எலும்புத் தேய்மானம்எளிதாக எதிர்கொள்ளலாம்!

Spread the love

உடலின் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  உடல் இயக்கமின்றி இருக்கும்போது இரத்த செல்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப்பற்றாக்குறை ஏற்படும்.  இதுவே எலும்புகளின் தேய்மானத்திற்கு முக்கிய காரணமாகிறது.

பொதுவாகவே, உடலின் வளர்ச்சிக்கேற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் உண்டாகிறது.  எலும்புகளின் அடிக்கட்டமைப்பைப் புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் நடந்துகொண்டே இருப்பதால் கால்சியம் சத்து அதிகமாகவே தேவைப்படுகிறது.

இச்சத்துக்கள் பால், பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. ஒருவரின் வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்திற்கொண்டு சரியான உணவு முறையைக் கடைபிடிப்பது எலும்பின் தேய்மானத்தைத் தவிர்க்க உதவும்.

குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சியின் காரணமாக உடல்வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  இவை தானாகவே சரியாகிவிடும்.  அவர்களுக்கு கை,கால்  ஆகியவற்றில் வலி ஏற்படும்போது வெதுவெதுப்பான ஒற்றடம் கொடுத்தால் போதும்.

நல்லெண்ணையை வெது வெதுப்பாக உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் காலையில் இளம் வெய்யிலில் படும்படி செய்து அதன் பிறகு வெது வெதுப்பான நீரில் குளிப்பாட்டி அன்று பூண்டு இரசம்,கறிவேப்பிலைத் துவையல், சுட்ட அப்பளம் முதலியவற்றை சாப்பிடச் செய்து, உடலிலுள்ள வைட்டமின் “D” சத்து குறையாமல் எலும்புகளை வலுப்படுத்திக்கொள்ளும், நம் முன்னோர் செய்த முறைகளை நாமும் பின்பற்றலாமே!.

எலும்பு

உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளது.  இவ்வனைத்து எலும்புகளும் நமது அன்றாட வாழ்க்கைக்கு தத்தமதான செயல்களை சிறப்புடன் செய்து வருகிறது.

இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாக்க, நாம் எடுத்துக்கொள்ளும், உணவுமுறைகளும், வாழ்க்கைமுறைகளும் மிக முக்கியமான ஒன்றாகும்.  இந்த மொத்த எலும்புகளும் உடலில் உள்ள பகுதிகளுக்கேற்ப தங்களை வடிவமைத்துக்கொண்டு நமக்கு உடற்கட்டமைப்பைத் தருகின்றன.

மனிதர்களைப் பொறுத்தவரை எலும்பு மற்றும் பற்கள் உடம்பிலுள்ள மிகவும் உறுதியான பகுதிகளாகும். மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் சில நுண்ணுறுப்புகளை போன்ற உறுப்புகள் எலும்புகளால் மிகவும் அசாதாரணமான நிலையில் பாதுகாக்கப்படுகிறது. 

இப்படி பாதுகாக்கும் எலும்புகள் எதிர்பாரா விபத்துக்களின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவ உலகில் “பிராக்சர்” (Fracture) என்கிறார்கள். இதற்காக நவீனமுறையில், தரமான சிகிச்சையளிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்குக் கொண்டுவர இயலும்.

எலும்புத் தேய்மானம்

ஒரு மனிதன் கிட்டத்தட்ட 30 முதல் 35 வயது வரை பொருத்தமற்ற வகையில் அமர்ந்து வேலையைப் பார்க்கும்போது இதன் பாதிப்புகளை அதிகமாக உணர்வதில்லை.  ஆனால், 40 முதல் 50 வயதை நெருங்கும் பொழுது இதன் காரணமாக அவர்கள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

தண்டுவட எலும்புகள், கீழிடுப்பு எலும்புகள், கெண்டைக்கால் மூட்டுகள், பாத இணைப்புகள், கழுத்து போன்ற பகுதிகள் போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டு வலிகளால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

நாட்பட நாட்பட, பல காரணங்களால் எலும்புகள் தமது சக்தியை இழக்கத் தொடங்கிவிடுகின்றன. இதை மருத்துவர்கள் எலும்புத் தேய்மானமென்று பொதுவாகக் கூறிவிடுகிறார்கள். இது பெரும்பாலும் பெண்களை மிகவும் அவதிக்குள்ளாக்குகிறது.  சராசரியாகப் பெண்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் இந்நோயின் தாக்கம் ஏற்படத் தொடங்கும் பிறகு, மெதுவாக அதிகரித்து பின் தீவிரமாகத் தாக்கி பல பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்.

சில அலுவலகங்களில் சிக்கனத்தைக் கடைபிடிப்பதாக நினைத்துக்கொண்டு கைகளை வைப்பதற்குக்கூட இடமில்லாத நிலையில் இருக்கைகளைப் பயன்படுத்துவார்கள் 10 அல்லது 15 நிமிடங்கள் உட்கார்ந்து செல்லும் பார்வையாளர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். 

ஆனால், நாள் முழுவது உட்கார்ந்து வேலை செய்யும் அலுவலர்களுக்கு இவ்விதம் மிகவும் கடினமானதாக உணர்வார்கள்.

மணிக்கணக்கில் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து பணி செய்பவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பத்து நிமிடங்கள் நிற்பது, நடப்பது, ஓய்வறைக்கு செல்வது என கால்களும், இடுப்பும் இளைப்பாறும் படி செய்து கொள்ள வேண்டும்.

இடுப்புவலியும், முதுகுவலியும் அதிகமாக இருப்பவர்கள், முதுகுக்கும், இருக்கைக்கும் இடையில் சிறிய தலையணை ஒன்றை வைத்து அமரவேண்டும்.  இதனால் அமர்வதற்கு இதமாக இருப்பதுடன் இடுப்புவலியும் சற்று குறையும். 

பாதிப்புகள் ஏற்ப்பட்ட பிறகு அதை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடி ஓடுவதை விட முன்னெச்சரிக்கையாக அவ்வாறு நிகழாமல் தற்காத்துக்கொள்வது தான் விவேகமான வழியாகும்.

ராஜேஸ்வரி ஸ்ரீதர்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love