ஆரஞ்சை உண்டால் நோய் வர அஞ்சும்

Spread the love

ஆரஞ்சுப் பழங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியா கண்டத்தில் சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே தோன்றியதாக கருதப்படுகிறது. பின்னர் அது உலகின் பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. 9ம் நூற்றாண்டில்தான் ஆரஞ்சு, ஐரோப்பிய நாடுகளுக்கு போர்த்துகீசியர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தீவுகளில் 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ்தான் முதல் முறையாக ஆரஞ்சு மரங்களை விதை மூலமாக உண்டாக்கினார். அவை, பின்னர் பலராலும் அமெரிக்கா முழுவதும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க மாநிலங்களான ஃப்ளோரிடா, கலிபோர்னியா இரண்டும் ஆரஞ்சு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

19ம் நூற்றாண்டு வரை ஆரஞ்சுப் பழங்கள், பணக்காரர்களின் பழமாகவே இருந்துள்ளது. செல்வந்தர்களின் வீட்டுத் திருமணங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களில் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. 20ம் நூற்றாண்டில் தான், மரங்களாக பயிரிடப்பட்டதன் விளைவாக அனைவரும் சாப்பிடும் வண்ணம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இன்று அமெரிக்கா, பிரேஸில், மெக்சிகோ, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகள் உலகளவில் அதிக ஆரஞ்சுப் பழங்களை உற்பத்தி செய்து உலகம் முழுக்க வினியோகம் செய்கின்றன.

அமெரிக்கர்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்டது ஆரஞ்சு. அமெரிக்கர்கள், ஆரஞ்சு தான் சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு எனவும், காலை சிற்றுண்டிக்கு ஏற்றது எனவும் நம்புகின்றனர். உடல் ஆரோக்கியம் பேண, ஆரஞ்சு ஒன்றே போதும் என அவர்கள் எண்ணுகின்றனர். எனவேதான் அவர்கள் ஆரஞ்சு பழங்களை அனேக உணவு தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றனர்.

கேக், சாலட், க்ரீம், ஜாம், ஜெல்லி என அமெரிக்கர்களின் உணவு அனைத்திலும் ஆரஞ்சு இடம் பெற்றுள்ளது.

ஆரஞ்சுப் பழம் வட்ட வடிவமாக உள்ளும் புறமும் ஒரே ஆரஞ்சு நிறத்தில் 2&4 அங்குல சுற்றளவு கொண்டவை. ஆரஞ்சு, மரங்களில் கொத்துக் கொத்தாக காய்க்கக் கூடிய பழ வகையாகும். ஆரஞ்சில் இரண்ட வகை உண்டு. ஒன்று இனிப்பு வகை – Sweet Oranges மற்றது கசப்பு சுவையுடையவை. இதற்கு Citrus Sinensis என்ற தாவரவியல் பெயர் உண்டு.

இனிப்பு ஆரஞ்சுகள் பலப்பல ரகங்களில் கிடைக்கின்றன. ஜாஃபா, நேவல் லாவன்சா என பெயர் கொண்டவை. இவை சிறிய ரகமாகவும் அதிக வாசனை உடைய தோல்களை உடையவையாக இருக்கும். உள்ளே சுளை சுளையாக எளிதாக பிரிக்க முடியும். நல்ல சுவையும், அதிக பழச்சாறும் கொண்டவை.

இரண்டாம் வகையான கசப்பு ஆரஞ்சுகள், ஜாம் மார்மலேட் போன்றவை தயாரிப்பிலும், மதுபானங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை சற்றே கசப்பாக இருப்பதால், பழமாக உண்ண உகந்தவையல்ல. இவற்றை ‘நார்த்தை’ என நாம் அழைக்கிறோம்.

நார்த்தம் பழங்களில் அதிக தடியான தோல்களைக் கொண்ட ரகமும் உள்ளன. மெல்லிய தோல்களைக் கொண்ட ரகங்களும் உள்ளன. இவை பெரிய நிறுவனங்களில் ஜூஸ், ஜாம் போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதை நாம், ஊறுகாய் போன்றும் செய்து பயன்படுத்துகிறோம்.

வைட்டமின் சி&யை உடல் சேமித்து வைத்து பயன்படுத்திட முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி நல்ல வண்ணம் இருக்க வைட்டமின் சி இன்றியமையாதது. எனவே, அன்றாடம் வைட்டமின் சி அதிகம் அடங்கிய பழங்களையும், காய்கறிகளையும் உண்பது அத்தியாவசியமாகிறது. அப்போதுதான் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும். ஆரஞ்சுப் பழங்களை அன்றாட உணவில் ஒரு பகுதியாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும். ரத்த அழுத்தம், இதய தாக்கு, இதய படபடப்பு போன்றவை குறையும். இந்த கோளாறுகளால் வரும் மரண ஆபத்தையும் தவிர்க்க முடியும்.

எந்த வகை உணவாக பழமாக இருப்பினும் சிலருக்கு அது ஒவ்வாமை எனும் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதேபோல ஆரஞ்சுப் பழங்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மீன், நண்டு, இறால், பன்றி இறைச்சி, கோழி, முட்டை, பால், சோளம், நிலக்கடலை, ஸ்ட்ராபெரி போன்றவை சிலருக்கு ஒத்துக் கொள்ளும். சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதே போலத்தான் சிலருக்கு ஆரஞ்சும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றது. ஆரஞ்சு ஏற்படுத்தும் அலர்ஜி உணர்வுகள் கண் அரிப்பு, மூக்கு ஒழுகுதல், அரிப்பு, தும்மல், இளைப்பு, வயிற்று உபாதைகள், சோர்வு போன்றவையாகும்.

இவை எங்கோ ஒருவருக்கு எப்போதோ ஏற்படலாம். அவருக்கே இது சில காலம் கழித்து சரியாகி ஒவ்வாமையை ஏற்படுத்தாமலும் போகலாம்.

ஆரஞ்சுப் பழங்கள் குறுக்கு வாட்டில் அல்லது நீளவாட்டில் வெட்டி பின்னர் உரித்தால் தோலை எளிதாக நீக்கிவிட முடியும். பிற பழங்களைப் போல் ஆரஞ்சையும் சிறிது சூடுபடுத்தி பிழிந்தால் அதிக சாற்றை தரும். எனவே, லேசாக சுடுநீரில் போட்டு பிழிவது நல்ல பலனைத் தரும். பிற உணவுகளிலும், உணவு தாயாரிப்பிலும் ஆரஞ்சு பழச்சாறை பயன்படுத்திட நல்ல சுவையையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

ஆரஞ்சுப் பழங்கள் விளையும் இடங்களைப் பொறுத்தும், தன்மையைப் பொறுத்தும் பலப்பல சுவைகளில், நிறங்களில், தன்மையில் கிடைக்கின்றன. சீன ரகங்களான க்ளெமென்டைன் (Clementine), மாண்டரின் (Mandarine) எனவும், ஜப்பானிய ரகம் சத்சுமா (Stsuma) எனவும் இந்திய ரகம் நாக்பூர் (Nagpur) எனவும், தமிழக ரகம் கொடை (Kodai)எனவும் அழைக்கப்படுகிறது.

நன்மைகள்:

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள சுண்ணாம்பு சத்து (Calcium) பாலில் இருப்பதை விட அதிகம். ஒரு 8 அவுன்ஸ் கிளாஸ் பாலில் 293 மி.கிராமும் அதே அளவு ஆரஞ்சு சாறில் 350 மி.கிராமும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இவற்றில் உடல் 91 மி.கிராம் சுண்ணாம்பு சத்தை மட்டுமே பாலில் இருந்து ஈத்துக் கொள்கிறது. அதே நேரம் 130 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தை ஆரஞ்சு சாறில் இருந்து ஈர்த்துக் கொள்கிறது. ஆரஞ்சு பழத்தில் 50 மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் ஒருநாள் தேவையில் மூன்றில் இரண்டு பங்காகும்.

ஆரஞ்சு பழச்சாறில் எப்போதும் செயற்கை நிறமிகள் (Colour) பயன்படுத்தப்படுவதில்லை. ஆரஞ்சுகளில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே, அவை உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றிட உதவுகின்றது. ஆரஞ்சு பழச்சாற்றை குளிர்ச்சியூட்டும் போது அதிக ஆரஞ்சு நிறமாக மாறுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இத்தகையை பெருமைகளையும் பயன்களையும் கொண்ட ஆரஞ்சுப் பழங்களை நாமும் அன்றாட உணவில் ஓர் அங்கமாக்கி கொண்டால் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும், பிற நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவிடும்.


Spread the love
error: Content is protected !!