வெங்காய இலையமுது (ஆனியன் சாலடு)
தனக்கென்றே உரித்தான காரமும், மணமும் கொண்ட வெங்காயம் இல்லாமல் எந்தவொரு சாலடும் நிறைவுறுவதில்லை. எந்த நாளும் கிடைக்கின்றவெங்காயம் சாலடுகளுக்குத் தனிக் கவர்ச்சியையும், ருசியையும் தருகிறது.
முற்றிலும் பெரிய வெங்காயத்தையே கொண்டு செய்யப்படும் கீழ்கண்ட சாலடுகள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இவற்றில் உப்பும், சர்க்கரையும், மிக மிகக் குறைந்த அளவிலேயே சேர்வதால் இதை எவரும் விரும்பி உண்ணலாம். இந்த சாலடுகள் செய்வதற்கு எளிது.காண்பதற்கு இனிது நாவிற்கு விருந்து.
வெங்காயத்தை நறுக்கும் போது விடுகின்ற கண்ணீரைப் பொருட்படுத்தாது செய்து முடித்தால், அதற்கான சிறந்த வெகுமதியை அடைவீர்கள்.
ஆனியன் டொமாட்டோ (onion tomato)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
பொடியாக நறுக்கிய தக்காளி _ 2
மிளகாய்த் தூள் _ சிறிதளவு
உப்பு _ சிறிதளவு
வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக சேர்த்து கலந்து அதன் மேல் சிறிதளவு மிளகாய் தூள், உப்பு இரண்டையும் தூவி விடவேண்டும். ஆனியன் டொமாட்டோ இரண்டே நிமிடங்களில் தயார்.
ஆனியன் குய்க்கி (Onion Quicky)
தாளுடன் கூடிய நறுக்கிய வெங்காயம் _ 2
முளைகட்டிய பாசிப் பயறு _ 1/4 கப்
பச்சை மிளகாய் _ 1
எலுமிச்சம் பழம் _ 1/4
வெங்காயத்துடன் முளைகட்டிய பாசிப்பயறு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைப் பழச்சாறு ஓரிரு துளி விட்டுப்பரிமாறினால் சுவை அலாதியாக இருக்கும்.
ஆனியன் பிரவுன் சென்னா (Onion Brown Chenna)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
வேகவைத்த கொண்டக் கடலை _ 1/2 கப்
மிளகாய் தூள் _ ருசிக்கேற்ப
1/2 மூடி _ எலுமிச்சைச்சாறு
உப்பு _ சிறிதளவு
வெங்காயம், கொண்டைக் கடலை இரண்டையும் சீரான பக்குவத்தில் கிளறி, அதன் மீது மிளகாய்த் தூள் உப்பைத் தூவி எலுமிச்சை சாற்றைப் பிழிய வேண்டும். இதுவே ஆனியன் பிரவுன் சென்னா.
ஆனியன் குக்கும்பர்
தாளுடன் கூடிய நறுக்கிய வெங்காயம் _ 2
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் _ 1 (கப்)
துருவிய தேங்காய்ப்பூ _ 1/4 கப்
மிளகாய் தூள் _ சிறிதளவு
எலுமிச்சைச் சாறு _ அரைமூடி
தேங்காய்ப்பூ, வெங்காயம், வெள்ளரி இவற்றைக் கலந்து, அதன் மீது மிளகாய்த்து தூள், சீரகம் சேர்த்து, எலுமிச்சை சாற்றினைப் பிழிய வேண்டும்.
இந்த ஆனியன் குக்கும்பர் கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான விருந்து.
ஆனியன் க்ரீன் பீஸ் (Onion Green Peas)
நறுக்கிய வெங்காயம் _ 2
வேகவைத்த பச்சைப் பட்டாணி _ 1/4 கப்
பொடியாக நறுக்கிய காரட் _ 1/4 கப்
பச்சை மிளகாய் _ 1
உப்பு, மிளகு, சீரகம் _ சிறிதளவு
வெங்காயம், காரட் பட்டாணி. மிளகாய் இவற்றை நன்றாகக் கலந்து அதன் மீது, உப்பையும், வாசனைப் பொருட்களையும் தூவி விட வேண்டும். இந்த சாலட் கலவையைப் பார்த்தாலே பசி தீர்ந்துவிடும்.
ஆனியன் _ காலிபிளவர் (Onion cauliflower)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
நறுக்கிய காலி பிளவர் _ 1/2 கப்
உப்பு, மிளகாய்த்தூள் _ சிறிதளவு
எலுமிச்சை சாறு _ அரை மூடி
வெங்காயம், காலிபிளவர் இரண்டையும் கலந்து, அதன் மீது உப்பு, மிளகாய்த் தூள் தூவிவிடவேண்டும். இதன் மீது எலுமிச்சைச் சாற்றினையும் பிழிந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
ஆனியன் கேப்ஸிகம் (Onion Capsicum)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
நறுக்கிய பெங்களுர் பச்சை மிளகாய் _ 1
உப்பு, மிளகு பவுடர் _ சிறிதளவு
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் கலந்து, அதில் உப்பு, மிளகு பவுடரை தூவினால் சாலட் சுவையாக, நாக்கில் நீர் வரவழைக்கும்.
ஆனியன் க்ரீட் (Onion Greet)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
நன்கு நறுக்கிய கொத்தமல்லி தழை _ 1/4 கப்
சீரகம், மிளகு, மிளகாய் தூள் _ தே.கேற்ப
உப்பு _ தே.கேற்ப
எலுமிச்சம்பழம் _ 1/4 மூடி
வெங்காயத்துடன், கொத்தமல்லித் தழையைச் சேர்த்து உப்பு, மிளகாதூள், மிளகு, சீரகம் இவற்றை அதனுடன் கலக்க வேண்டும். கடைசியாக சாலடை எடுத்துக் கொள்வதற்குச் சிறிது நேரத்திற்கு முன் எலுமிச்சைச் சாற்றினைப்பிழிந்து சாப்பிட்டால் மேலை நாட்டுப் பக்குவங்கள் தோற்றுப் போய்விடும்.
ஆனியன் காக்டெயில் (Onion Cocktail)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் _ 1/4 கப்
முளைகட்டிய பாசிப்பயறு _ 1/4 கப்
நீளமான பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ 1
உப்பு, வாசனைப் பொருட்கள் _ தே.அளவு
வெங்காயம், கோஸ், முளைகட்டிய பாசிப்பயறு இவற்றுடன், பச்சை மிளகாய், உப்பு, வாசனைப் பொருட்கள் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான புரதச்சத்து அப்படியே கிடைக்கும்.
ஆனியன் பகார் (Onion Bahar)
பொடியாக நறுக்கிய வெங்காயம் _ 2
வேகவைத்து நன்கு உதிர்த்த உருளைகிழங்கு _ 3
காரட் துருவல் _ 1/4 கப்
பீட்ரூட் துருவல் _ 1/4 கப்
கோஸ் _ 1/4 கப்
நறுக்கிய மிளகாய், இஞ்சி _ 1/4 கப்
உப்பு _ தே.அளவு
சீனி கலந்த தயிர் _ 3டேபிள்ஸ்பூன்
மேற்குறிப்பிட்ட காய்கறிகளுடன், இஞ்சி, மிளகாய், உப்பு இவற்றைக் கலந்து, சீனி கலந்த தயிரை பரிமாறுவதற்கு சற்று முன்னதாக ஊற்றி கொடுத்தால் சாப்பிட்டவர்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.