உணவைச் சமைக்கும் பொழுது பொரித்தல், வதக்குதல், வறுத்தல் போன்ற வேலைகளுக்கு சமையல் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. சமையலுக்குப் பயன்படும் எண்ணெய்கள் பல வகைகள் உள்ளன. கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் எண்ணெய், கனோலா எண்ணெய், சோயா பீன் எண்ணெய், பசுவின் நெய் என்று இவை அத்தனையும் சமையல் அறையில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணெய்கள் ஆகும்.
மீன் மற்றும் ஒரு சில பறவைகளிலிருந்தும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமையல் எண்ணெயில் தாவர எண்ணெய்கள் அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் இருப்பதால் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு சற்றே திட நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் தாவர எண்ணெய்கள் அல்லது பருப்பு, விதைகள் மூலம் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பதப்படுத்தப்பட்டு, வேதியியல் வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயாக பயன்பாடுகளுக்கு வருகிறது.
ஆலிவ் எண்ணெய் சாதாரண வகை மற்றும் சுத்தகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் என்று இரண்டு வகையில் சந்தைப்படுத்தப்படுகிறது. சாதாரண ஆலிவ் எஎண்ணெயில் அதிக அளவு அமிலத் தன்மை உள்ளது. இது நல்ல சுவை கொண்ட விரிஜின் எண்ணெய் ஆகும். 3.3 சதவீதத்திற்குக் கீழே உள்ள அமிலத் தன்மை அளவு கொண்டது.
3.3 சதவீதத்திற்கு மேல் அமிலத் தன்மை அளவு கொண்ட எண்ணெய் மாதர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதுடன் அத்தகைய அமிலத் தன்மையை சரிக்கட்ட எண்ணெயை சுத்திகரிப்பு செய்வது அவசியமாகும். விர்ஜின் ஆயிலின் மணம், நிறம் மற்றும் இதர பண்புகள் இரசாயன சுத்திகரிப்பின் மூலம் சரி செய்யப்பட வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் சுமார் 6000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கி.மு.2000 ஆண்டில் சிரியா மற்றும் கிரேக்கத்திலிருந்து எகிப்து போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. கிருஸ்துவ தேவாலயங்களில் புனிதப்படுத்துதல், Ordainty Priest, ஆலய சுத்தம் மற்றும் பல வித சமய சடங்குகளுக்கு ஆலிவ் எண்ணெயைத் தான் தேவாலயங்கள் நம்பி இருந்தன.
இஸ்லாம் சமயமும் ஆலிவ் மரத்தை புனிதமானதாவும், மரியாதை தரும் மரமாகவும் மதிப்பு தந்து வந்துள்ளனர். உணவில் சேர்த்துக் கொள்வதற்கும் உடலில் வெளிப் பூச்சுக்கும் அவர்கள் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினர். பண்டைய கிரேக்கர்கள் ஆலிவ் எண்ணெயை மிகவும் மதித்துப் போற்றினர்.
அதிகாரத்திற்கும் செல்வச் செழிப்புக்கும் உரிய ஒன்றாக ஆலிவ் மரத்தை கருதினர் என்பதுடன் இதனுடைய மருத்துவ குணங்களிலும் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தனர். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சமையலுக்கு பயன்படுத்தியதோடு மட்டுமன்றி சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயனபடுத்தத் துவங்கினர்.
அத்லட்டிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் பொழுது தங்கள் உடல் வனப்பிற்கு உடலில் அப்போதைய நேரத்தில் ஆலிவ் எண்ணெயை பூசிக் கொண்டனர்.
எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பு என்றும் அதிலும் ஒற்றை மற்றும் பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் என்றும் உட்பிரிவு உள்ளன. உடல் நலத்திற்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மனிதனுக்கு சம அளவில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களைத் தான் குறிப்பாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், கார்ன் ஆயில் எனப்படும் சோள எண்ணெய், பாமாயில் போன்றவைகளைத் தான் சமையலில் அதிகளவு பயன்படுத்துகிறோம்.
இதன் மூலம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் மனிதனின் உடலில் சுமார் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
பா. முருகன்