இப்போது எல்லாம் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன் பலனாக, பணம் செலவானாலும் சுகாதாரமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் சமையலுக்கு ஏதாவது ஒரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தினால் போதும் என்ற எண்ணம் பெண்களிடம் இருந்தது.
ஆனால், இப்போது விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை; ஆலீவ் எண்ணெய்யை பயன்படுத்துவோம் என்ற எண்ணம் பரவி உள்ளது.
ஆலீவ் எண்ணெய்யானது, உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. அதாவது இளமஞ்சள் நிறத்தில் இருந்து இளம்பச்சை நிறம் வரையில் 12 வகையான ஆலீவ் வகைகள் உள்ளன.
ஆலீவ் இலைகள் அந்த காலத்தில் இருந்தே அமைதியின் சின்னமாகவும், புகழுக்குரியதாகவும், வளத்திற்குரியதாகவும் கருதப்பட்டு வருகிறது. கிரேக்க மன்னர்கள், அரசவைக்கு வரும்போது, தங்கள் தலையில் ஆலீவ் இலையினால் ஆன வளையத்தை சூடிக் கொண்டுதான் வருவார்களாம். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலில், ஆலீவ் இலையால் ஆன வளையத்தைதான் சூடுவார்கள். அதன்பின்னர்தான் பரிசு வழங்குவார்களாம். இப்போதும் கூட ஒலிம்பிக்கில் இந்த வழக்கம் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஆலீவ், மருத்துவத்திலும் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆலீவ் பழங்களில் இருந்து ஆலீவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை, பிரட்களில் தடவி சாப்பிட்டால் அதன் சுவை கூடும். இதேபோல், சாலட் மற்றும் சமையல்களில் இந்த எண்ணெய் சுவை மற்றும் மணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்காலத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் எலும்பு மெலிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆலீவ் எண்ணெய் அருமருந்து என்றால், அது மிகையாகாது. இந்த நோய்கள் ஏற்படாமல் ஆலீவ் எண்ணெய் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலீவ் எண்ணெய்யில் ஓலிக் அமிலம் என்றொரு அமிலம் அதிகளவில் காணப்படுகிறது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த அமிலம், இது மிக அரிய மூளை சீர்குலைவு நோயான ஏஎல்டி (அட்ரினோ லுகோடி ஸ்ட்ராபி) குணப்படுத்துகிறது. அதாவது மூளையில் இருக்கும் நீண்ட வெள்ளை பகுப்பொருளை (மைலின்), நீண்ட கொழுப்பு சங்கிலித் தொடரை உருவாக்கி சீர்குலைக்கிறது இந்நோய். ஆனால், அவ்வாறு ஏற்படாமல் ஆலீவ் எண்ணெய் உடலை பாதுகாக்கிறது.
ஆலீவில் இருக்கும் மற்றொரு விசேஷம், கெட்ட கொழுப்பை மட்டும் தேடிப்பிடித்து கரைக்கும் சக்தி. அதாவது, உடலில் 2 வகை கொழுப்புகள் உள்ளன. ஒன்று நல்லது. மற்றொன்று கெட்டது. கெட்டதை நீக்கினால் நலமுடன் வாழ முடியும். இதற்கான சக்தி ஆலீவில் நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பை மட்டும் கரைக்கும் அரிய வரத்தை இது பெற்றுள்ளது. இதனால் ரத்தக் கொதிப்பு குறையும், மாரடைப்பு பாதிப்பு மறையும்.
இவற்றை தவிர ஆலீவ் எண்ணெய் விட்டமின் ஏ, இ மற்றும் நோயெதிர்ப்பு சக்திகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஆலீவ் எண்ணெயில் இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், அதை தேர்ந்தெடுத்து வாங்கும் விதத்தில்தான், அவை நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதாவது எல்லாமே பணம் என்று ஆகிவிட்ட நிலையில், ஆலீவ் எண்ணெய் உற்பத்தியிலும், பிசினஸ் மூளை விளையாடுகிறது. ஆலீவ் பழங்களில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் முதல்கட்ட எண்ணெய், விர்ஜின் ஆலீவ் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதில்தான் வளமான சத்துக்கள் நிறைந்திருக்கும். இது சற்று அடர்ந்த நிறத்துடனும், கசடுகளுடனும் இருக்கும். சில இடங்களில் இதையும் சற்று சுத்தப்படுத்தி விற்கிறார்கள். விர்ஜின் ஆலீவ் எண்ணெய் விலை சற்று அதிகம்.
ஆலீவ் பழங்களில் இருந்து 2வது, 3வது கட்டமாக பிழிந்தெடுக்கப்படும் எண்ணெயில் இந்த சத்துக்குள் பெருமளவில் இருக்காது. அதாவது அவை வெறும் சக்கை எண்ணெய்தான். இதுபோன்ற எண்ணெய் சற்று விலை குறைவாக விற்கப்படுகிறது.
விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக, சக்கை எண்ணெய்யை வாங்கி ஏமாறாதீர்கள். விர்ஜின் ஆயில் என்று அச்சிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து, வாங்கிக் கொள்ளுங்கள்.
அதேசமயம், ஆலீவ் எண்ணெய்யை ஒன்றரை ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை குளிர்ச்சியான, இருட்டான, வெப்பமில்லாத இடத்தில் வைக்க வேண்டும். வறுப்பதற்கு தவிர மற்ற எல்லா பயன்பாட்டுக்கும் ஆலீவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஏனெனில், 350 டிகிரிக்கு மேல் ஆலீவ் எண்ணெய்யை சூடுபடுத்தினால், அதன் சத்துக்கள் எல்லாம் மறைந்துவிடும்.