நீங்கள் எப்போதாவது முதியவர்களை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா. அவர்களது அன்றாடம் குறித்து சிந்தித்து பார்த்தீர்களா. உங்களது வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தால், அவர்களுடன் கதைபேசி கலாய்த்து விட்டு, அடுத்த வேளைக்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடும். நீங்கள் இளமைப்பருவத்தில் இருக்கும் போது, முதுமைப்பருவத்திலிருக்கும் உங்கள் தாத்தா பாட்டிகள் அனுபவிக்கும் விஷயங்களைப் பற்றி கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா. அப்படி நீங்கள் முதியவர்களிடம் பேசிப்பார்த்தால், நிறைய கதைகள் கிடைக்கும், கூடவே உண்மையும் கிடைக்கும்.
யூத்புல்லாகவும் கலர்புல்லாக வாழ்க்கையை அனுபத்திருக்கின்ற அனைவரையும் அடைகின்ற மற்றுமொரு பருவம் தான் முதுமை. இந்த முதுமை பருவமானது, வாழ்க்கையின் இரண்டாம் பாதி என்று கூறலாம்.இந்த முதுமை பருவம் வந்தாலே, சரியாக பசிப்பதில்லை. பேசுவதற்கு ஆட்களில்லை. சரியாக துாக்கம் வருவதில்லை. கை, கால்களில் அவ்வப்போது, வரும் மூட்டு வலியால் உயிர் போகிறது. இதுக்கு என்னதான் தீர்வு என்று மருத்துவமனைகளின் முன்பு நிற்கும், முதியோரின் வரிசை அதிகரித்து வருகின்றது.
ஒரு முதியவரிடம், இளைஞர் ஒருவர் தாத்தா முதுமைப்பருவம்னா என்ன கேட்டிருக்கிறார். வயசாகி விடுறதுதான் என்று பதிலளித்துள்ளார். வயசுதான ஆகுது அப்புறம் ஏன் நீங்கள் நடக்க கஷ்டப்படுறீங்க. எழுந்திருக்க கஷ்டப்படுறீங்கன்னு, மீண்டும் அந்த இளைஞர் முதியவரிடம் கேட்டுள்ளார். இதற்கு, நான் வார்த்தைகளில் பதில் சொல்லி விடலாம் தம்பி. ஆனா,உண்மையான கஷ்டம் உங்களுக்கு எப்போ தெரியும்னா. என்னைய மாதிரி உங்களுக்கும் வயசாகும் போதுதான் என்று சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறார். முதுமைப் பருவம்னா இப்போது புரியுமே உங்களுக்கு.
முதுமைப் பருவத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும். அவற்றில் இருந்து எப்படியெல்லாம் விடுபட முடியும் என்பது குறித்து இனி காண்போம்.
முதுமைப் பருவத்தில் இருப்போர் சரியான நேரத்திற்கு உணவு, சீரான உடற்பயிற்சி, உடல்நலம் குறித்த அக்கறை போன்றவை இருந்தால், பெரும்பாலான உடல்நலம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.
வயசான காலத்தில் இருக்கும் தாத்தா பாட்டிகள் நம்மை அதிகமாக தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்துவார்கள். ஆனால், தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் அவர்களே கோட்டை விட்டு விடுவர். முதியவர்கள் சரியான நேரத்திற்கு தண்ணீர் அருந்தாமல் இருப்பதால், சிறுநீரகம், உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பாகங்கள் பழுதடைந்து, அதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மை பெரும்பாலான முதியோருக்கு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் போதுதான் தெரிகின்றது. வீட்டில் இருக்கும் தனது மகனோ, மகளோ சொல்கின்ற அறிவுரையை எல்லாம், வேலை பிசியிலும், அலட்சியமாகவும் இருந்து விட்டு, முதிய பருவத்தில் மருத்துவமனைகளே கதியென்று கிடைக்கின்றனர்.இதெல்லாம், வயசான காலத்துலதான் தெரியுது என்று பெருசுகள் சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வயசான பெரியவர்களில், மருந்து மாத்திரைகள் சாப்பிடாதவர்கள் மிகமிகக் குறைவு. பெரும்பாலான முதியவர்கள், ரத்தக் கொதிப்பு பிரச்னை, சர்க்கரை நோய், இதய நோய், மலச்சிக்கல், மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு, மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.
நோய்களின் பிடியில், சிக்கிக் கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு அவர்கள் உட்கொள்ளும், மருந்துகளால் கூட பக்க விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது.எந்த பிரச்னைகளாக இருந்தாலும், அதற்கு முதலாவதாக முற்றுப் புள்ளி போட வேண்டுமென்றால், அது தண்ணீரால் மட்டுமே முடியும். ஆகவே, தண்ணீரை அதிகப்படியான அளவில் அருந்துவது நல்லது.
இளம் வயதில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தாக உணர்வைக்காட்டிலும், முதியவர்களுக்கு ஏற்படுகின்ற தாக உணர்வு மந்தமாகத்தான் இருக்கும். இதனால், வீட்டில் உள்ள முதியவர்கள் தண்ணீர் அருந்தாமல் இருந்து விடுகின்றனர். முதுமையில் இருப்பவர்களுக்கு தாகம் ஏற்படாது என்கிற உண்மையை அறிந்த நீங்கள் தான். அவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் அருந்தும்படி அறிவுறுத்த வேண்டும்.
வயதான காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இதனால், முதியவர்கள் அவ்வப்போது, பப்பாளிப்பழம், மாதுளைப்பழம், உள்ளிட்ட சத்தான பழங்களை சாப்பிட்டு வர வேண்டும். சத்தான பழங்களை உட்கொண்டு வரும்போது, முதியவயதில் ஏற்படும் உடல்நலப்பிரச்னைகளில் விடுபட முடியும்.வயோதிகம் வந்து விட்டால், நீங்கள் பழங்களை நண்பர்களாக்கிக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
வயதான காலத்தில் செறிக்கும் வகையில் பழங்களை உண்பதுடன், அதிக வைட்டமின், புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறுடன் செய்த ஏதாவது ஒரு கூட்டினை உண்டு வரலாம்.
முதுமைப் பருவத்தில் இருப்போர், கொழுப்பு உணவுகளை குறைத்து விட வேண்டும். முதுமைப் பருவத்தில், எலும்புத் தசைகள் தேய்மானம் அடைந்து குறைந்து போவதாலும், புரத சேமிப்பானது குறைந்து விடுவதாலும், மிகவும் ஒல்லியாகவே காட்சியளிப்பார்கள்.
அத்தகைய உடல்வாகில் இருந்து மீண்டு, வளமான உடல்நலம் பெறுவதற்கு, முட்டையின் வெண்கரு, முளை கட்டிய பயறு வகைகள், சத்து மாவு என்று பல்வேறு வகையான சத்தான உணவுப் பொருட்களை, அடிக்கடி உட்கொள்வது மிகவும் முக்கியம்.