முதுமையில் நீரிழிவு

Spread the love

முதுமையை யார் விரும்புவார்கள்?

                முதுமை தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதால் அதை ஏற்றுக் கொள்கிறோம். முதுமையை தவிர்ப்பது, தள்ளிப்போடுவது போன்ற பல விஷயங்களில் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. மனிதன் உலகில் தோன்றியதிலிருந்து, முதுமை, இறப்பை தவிர்க்க “காய கல்பங்களை” நாடி அலைவது இன்னும் குறையவில்லை!

                உலகம் முழுவதும் மனிதனின் ஆயுள் இப்போது நீடித்துவிட்டது. முதுமையின் தாக்கம் 65 வயதுக்கு மேல் தான் அநேகருக்கு தெரிகிறது.

                வயது ஏற, ஏற, உடல் நலிவடையும் மனதும் சோர்வடையும். உங்களுக்கு தெரியும், நாம் உண்ணும் உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியூட்ட பயன்படுத்தப்படுகிறது. எல்லா அவயங்களும், குறிப்பாக ஜீரண மண்டல உறுப்புகள், தளர்ந்து விடுவதால் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் சரிவர நடப்பதில்லை.

                உடலில் குளுக்கோஸை ஏற்றுக் கொள்ளும் திறன் குறைந்து விடுகிறது. நடுவயதை தாண்டியவர்களுக்கு, இந்த நிலையில் நீரிழிவு நோய் நிரந்தர விருந்தாளியாய் நுழைந்து விடும். சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி வயது அதிகரிக்கும் போது, ரத்தத்தின் சர்க்கரை அளவும் சிறிது அதிகரிக்கும். தவிர சிறுநீரகமும் சரியாக, முழுமையாக சர்க்கரையை (குளுக்கோஸ்) வடிகட்டாது.

                நடுத்தர வயதில் அல்லது முதுமையில் வருவது சாதாரணமாக டைப்-2 வகை நீரிழிவு தான். நீரிழிவு வந்தாலும் அதன் அறிகுறிகள் தெரிவதில்லை. எனவே வயதானவர்கள் அடிக்கடி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பட்டினியிலிருந்து ரத்தம் எடுத்து பரிசோதித்து பார்த்தால், சர்க்கரை அளவு 126 மி.கி/டெ.லி. க்கு மேல் இருக்கக் கூடாது. தவிர எப்போது ரத்தம் பரிசோதித்தாலும் (Random test) சர்க்கரை 200 மி.கி/டெ.லி அளவை தாண்டக் கூடாது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் சர்க்கரையின் அளவு 140 மி.கி/டெ.லி க்கு அதிகமாக இருக்கக் கூடாது.

                வயதானவர்களுக்கு சிறுநீரை மட்டும், சர்க்கரைக்காக பரிசோதித்தால் போதாது. ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது தான் சரியான வழி. ஏனென்றால் முதுமையில் சிறுநீரகத்தின் பணி செய்யும் ஆற்றல் குறையும். ரத்தத்திலிருந்து முழுமையாக வடிகட்டாது. எனவே ரத்தத்தில் சிறிதளவு சர்க்கரை இருந்தாலேயே, அது சிறுநீரில் வந்துவிடும். சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கிராமை தாண்டினாலேயே சிறுநீரில் வந்துவிடும். இதை Renal Threshold என்பார்கள். முதியவர்களுக்கு இன்னும் சீக்கிரமாகவே சிறுநீரில் சர்க்கரை வரும். எனவே ரத்தத்தை பரிசோதித்தால் தான் உண்மை அளவு தெரியும்.

                முதியோர்களுக்கு ஏற்படும் நீரிழிவு பாதிப்பு, ஒருவருக்கொருவர் மாறும். வயது, பொது ஆரோக்கியம், உடல் வாகு இவற்றைப் பொருத்து, சிலருக்கு இதயம், சிறுநீரகம் பழுதடைதல், கண் நோய்கள் ஏற்படும். சிலருக்கு வழக்கமான நீரிழிவு அறிகுறிகளான அதிக தாகம், அடங்காத பசி, அடிக்கடி சிறுநீர் பிரிதல் ஏற்படும்.

                வாலிப நீரிழிவு நோயாளிகளை விட, வயதான நீரிழிவு நோயாளிகளுக்கு Hypoglycemia – தாழ்நிலை சர்க்கரை அதிகமாக ஏற்படும். அதிக வியர்வை நரம்புத் தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படப்படப்பு, குழப்பம் இவை அறிகுறிகள். அதிக உடற்பயிற்சி, அதிக இன்சுலின், சில மருந்துகள், வாந்தி, பேதி, பட்டினி இருப்பது போன்றவை காரணமாகலாம். அறிகுறிகள் தெரிந்தவுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளுக்கோஸ் போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். தாழ்நிலை சர்க்கரை அபாயகரமானது. அதுவும் வயதானவர்களை மிகவும் பாதிக்கும். டாக்டரிடம் செல்வது அவசியம்.

                வயதானவர்களுக்கு, மற்றவர்களை போல், வீரியமிகுந்த நீரிழிவு மருந்துகளை கொடுப்பது இயலாது. எனவே அறிகுறிகளை குறைத்து, இதயம் மற்றும் இதர உறுப்புகளுக்கு பாதிப்பு இல்லாத, பக்க விளைவுகள் இல்லாத குறைந்த மருந்துகளே கொடுக்கப்படும்.

                மற்றபடி நீரிழிவை கட்டுப்படுத்தினாலேயே, முதியோர்கள் அதிக நாள் வாழ முடியும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love