ஆக்ஸிடோசினும் ஆன்டிபயாடிக்கும்

Spread the love

”வணிகமுறை கறவை பண்ணைகளில் கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் (கெமிக்கல்) அடங்கிய அடர் தீவனத்தையும், ஆக்ஸிடோசின் ஹார்மோன் ஊசியையும் போட்டு பாலை கறப்பதாகவும், ஆகவே கலப்பினப் பசுவின் பால் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்றும் சொல்கிறார்களே உண்மையா?” எனும் கேள்வி ஐ ஃபோன் பயன்படுத்தும் யுவன் யுவதிகளிடையே கூட உள்ளது என்பதை சமூக வலைதளங்கள், தொலக்காட்சி விவாதங்கள் மூலமாக காணமுடிகிறது. எனவே தான் இந்த விளக்கக் கட்டுரை அவசியமாகிறது.

பால் என்றால் என்ன?

’ஆக்ஸிடோசின் பால்’ ‘ஆன்டிபயாடிக் பால்’ என்பதெல்லாம் தவறான சொல் பிரயோகங்களாகும். அப்படியரு பால் இயற்கையில் இல்லவே இல்லை. பால் என்பது பாலூட்டிகளில் (மனிதன் உள்ளிட்ட) பெண் பாலினத்தால் பிரசவத்திற்கு பின்னர் மடியில் சுரக்கப்படும் ஒரு வெள்ளை நிறச் சுரப்பாகும். இப்பாலில் கன்றுக் குட்டிக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்புச்சக்தியும் மிகுந்து காணப்படும். பிறந்த கன்றுக் குட்டியானது தாயை சார்ந்து வாழும் முதல் சில மாதங்களுக்குத் தேவையான உணவை இப்பாலின் மூலமே பெறுகிறது. அடிப்படையில் பால் என்பது தாய் தன் சேய்க்கு வழங்கும் ஒரு ”வெண்கொடையே” ஆகும். எனவே தான் ஒவ்வொரு பாலூட்டியின் பெண் இனத்திலும் பால் சுரக்கப்படுவதை இயற்கை உறுதி செய்துள்ளது.

பால் உருவாக்கத்தின் அறிவியல் தான் என்ன?

பசுவின் மடியில் பால் எவ்வாறு உருவாகிறது? தீவனத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு பாலில் உள்ள சர்க்கரை (லாக்டோஸ்), புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களாக மாற்றப் படுகிறது? பாலில் ஊட்டச்சத்துக்களுடன் ஊட்டச்சத்துக்கள் அல்லாத வளர்ச்சிதைமாற்ற சேர்மங்களும்  வேறு சில உயிர்வேதிய சேர்மங்களும் கலந்திருப்பதற்கு காரணமென்ன?

பச்சை புற்கள், தீவன பயிர்கள், அடர் தீவனங்கள் போன்றவற்றை பசு உட்கொண்டு அவற்றிலுள்ள சத்துக்களை செரித்து, உட்கிரகித்து, ரத்த ஓட்டத்தில் கலந்து, மடி திசுவை அடைந்து, அங்கு வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு மீண்டும் ஊட்டச்சத்துக்களாக மீள் உருவாக்கம் பெற்று பாலாக மடியில் ஊற்றெடுக்கிறது. இவற்றோடு ஊட்டச்சத்துக்களல்லாத இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களும், வேறு சில உயிர்வேதிய சேர்மங்களும் பாலில் கழிவுப் பொருள்களாக வெளியேற்றப் படுகிறது. ஆரோக்கியமான பசுவால் இயற்கையாக சுரக்கப்படும் பாலில் இந்த வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களின் அளவு மிக மிக குறைவாகவே இருக்கும். இதை தடுக்க முடியாது. இது ஓர் உடற்செயலியல் இயற்கோட்பாடாகும். இவற்றால் நுகர்வோர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை.

ஆன்டிபயாடிக்ஸ்  அடங்கியுள்ள அடர் தீவனமும், சிகிச்சை நாட்களில் செலுத்தப்படும் மருந்துகளும் பாலில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

நாம் பசுவின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பாற்றல், இன்னும் வேறு சில காரணங்களுக்காக ஆன்டிபயாடிக்ஸ் உள்ளிட்ட தீவன சேர்க்கைச் சேர்மங்களை  அடர் தீவனங்களில் ‘அளவுக்கதிகமாக’ தொடர்ந்து சேர்க்கும்போதும், நோயுற்ற நேரத்தில் சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தும் போதும் அவையனைத்தும் தத்தமது பணிகளை முடித்தவுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்குப் பின் பசுவின் உடலிலிருந்து இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களாக  மாற்றப்பட்டு கழிவுப் பொருள்களாக பாலிலும், சிறுநீரிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெளியேற்றப் படுகிறது. இன்னும் சரியாக சொல்லப் போனால் அந்தக் கழிவுப் பொருள்களில் சிறிதளவேனும் விலங்குகளின் கொழுப்பிலும், எழும்பு மஞ்ஞையிலும், தசையிலும், இன்னும் வேறு சில இடங்களிலும் கூட நிரந்தரமாக படிந்து விட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் தான் நுகர்வோர்கள் இயல்பை விட அதிகமான இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பாலை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் ‘இந்த’ பாலை தான் ஆபத்து நிறைந்ததாக கருதுகிறார்கள். அவர்களின் பயம் நியாயமானதே! அவற்றை புறம்தள்ள முடியாது! 

ஆன்டிபயாடிக்ஸ் உள்ளிட்ட மூலச்சேர்மங்களும், அவற்றின் வளர்ச்சிதைமாற்ற சேர்மங்களும் ஒரே மாதிரியான விளைவுகளை கொண்டிருக்குமா?

இயல்பை விட அதிகளவில் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பாலை உட்கொண்டால் விபரீத விளைவுகளை நுகர்வோர்கள் சந்திக்கக் நேரிடுமா?  பயப்பட வேண்டாம்! ஏனென்றால் இந்த இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் என்பவை இதனுடைய மூலச்சேர்மம் கொண்டுள்ள பண்புகளையும், விளைவுகளையும் அப்படியே பெற்றிருப்பதில்லை. இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஆகவே மூலச்சேர்மத்தால் ஏற்படும் விளைவுகளை அதன் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களுக்கும் அப்படியே பொருத்தி பார்க்க தேவையில்லை. ஆனால் நம்மில் பெரும்பாலோர் ‘இவ்விரண்டும்’ ஒரே மாதிரியான விளைவுகளை கொண்டுள்ளதாக நினைத்து அதீத பயம் கொள்கிறோம். அதையே மற்றவர்களுக்கும் கடத்துகிறோம். அது தவறு. 

அப்படியென்றால் ’அனுமதிக்கப்பட்ட அளவை விட’ அதிகமாக இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களைக் கொண்டிருக்கும் பாலை உட்கொள்வதால் நமக்கு எந்தவொரு உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லையா?

அப்படியில்லை. கண்டிப்பாக தொந்தரவுகள் இருக்கும். குறிப்பாக பால் மறவா குழந்தைகளுக்கும், ’கிளாஸ் கிளாஸாய்’ நாலரைப் பால் அருந்தும் ‘மெட்ரிக்’ பள்ளி சிறார்களுக்கும் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் அதன் பொருட்டு ‘அந்த’ பாலை ஒதுக்கித் தள்ளும் அளவிற்கு அதன் ‘தொந்தரவுகள்’ பருவமடைந்த வாலிபர்களிடத்தில் காணப்படவில்லை என்பதே வாழ்வியல் நிதர்சனம்.

நாம் உட்கொள்ளும் ’அந்த’ அதிகளவு இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பால் நம் வயிற்றை அடைந்து, செரிமானமடைந்து, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ’அந்த’ இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அனைத்தும் மீண்டும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களாக (ஜிமீக்ஷீtவீணீக்ஷீஹ் விமீtணீதீஷீறீவீநீ சிஷீனீஜீஷீuஸீபீs) மாற்றப்படுகிறது.

பசுவிற்கு வழங்கப்படும் அடர் தீவனம், ஆக்ஸிடோசின்,  சிகிச்சை மருந்து போன்றவற்றிற்கும் பசு சுரக்கும் பாலுக்கும் அதை பருகும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு     மனிதர்களில் இந்த மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களின் விளைவுகள் என்பது இவைகளின் மூலச்சேர்மங்கள் பசுக்களில் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவைகளால் ஏற்படும் விளைவுகளென்பது பெரும்பாலும் மறைமுகமானது. காலம் கடந்து ஏற்பட போவது. அன்றாடம் தொந்தரவுகளை கொடுக்காமல் என்றேனும் ஒரு நாள் ஒட்டுமொத்த விளைவாக உருவெடுக்கலாம். அதனால் எதிர்காலத்தில் நுகர்வோர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படலாம். மறுப்பதற்கல்ல. ஆனால் இவையெல்லாம் நாம் உட்கொள்ளும் பாலின் அளவு, உட்கொள்பவரின் வயது, உட்கொள்பவரின் மற்ற உணவு பழக்கவழக்கங்கள், தொடர்ச்சியாக உட்கொள்ளும் கால அளவு, உட்கொள்பவரின் நோய் எதிர்ப்பாற்றல் போன்ற பல காரணிகளைப் பொருத்தே அமைகிறது.

நாளன்றுக்கு சராசரியாக 250 முதல் 500 கிராம் (பதப்படுத்தப்பட்ட) பாலை அருந்தும் நமக்கு இந்த மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களால் எதிர்காலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த தொந்தரவுகள் என்பது இந்த பாலை உட்கொள்ளாததால் ஏற்படும் வேறுசில ஊட்டச்சத்துக் குறைபாட்டு விளைவிகளை விட மிகச் சிறியதே. மேலும் நம்மில் பெரும்பாலானோர் பதப்படுத்தப்பட்ட பாலையே அருந்துகிறோம். ஆகவே இந்த மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களால் ஏற்படப் போகும் விளைவுகளென்பதை நினைத்து பயப்படத் தேவையில்லை. இதை நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா, மைலோ என எண்ணற்ற ‘போஷாக்குகளை’ பெருமையாக தன் குழந்தைகளுக்கு புகட்டிக் கொண்டே இந்த வணிகப் பாலை ’ஆண்டிபயாடிக் பால்’ என திருத்தி வாட்ஸப் மூலம் ஊதி பெரிதாக்குவதும், நாட்டு மாட்டுப் பால் தான் ‘ஆர்கானிக் பால்’ ’இயற்கையான பால்’ என்று கதைப்பதும் மேட்டிமை வாதமே தவிர வேறொன்றுமில்லை. பசுக்களில் கறவைக்கு முன் போடப்படும் ஆக்ஸிடோசின் ஊசியால் பாலில் ஏற்பட வாய்ப்புள்ள மாற்றங்களென்ன? அந்த பாலை உட்கொள்ளுவதால் நுகர்வோர்கள் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் என்ன?

ஆக்ஸிடோசின் என்பது ஒரு வகையான பெப்டைட் ஹார்மோனாகும். பசுக்களில் இயற்கையாகயாகவே ஆக்ஸிடோசின் ஹார்மோன் பிட்யூட்டரி எனும் நாளமில்லாச் சுரப்பியின் பின்கதுப்பிலிருந்து சுரக்கப்படுகிறது. இதன் பணி என்னவென்றால் மடித்திசு உள்ளிட்ட மென்தசைகளை சுருங்கச் செய்வதே ஆகும். இதனால் மடியிலிருந்து பாலை முழுவதுமாக கறப்பது எளிதாகிறது. ஆனால் பசு பயத்திற்குள்ளாகும் போதோ, பசுவை அடிக்கும் போதோ, பால் கறப்பவர் மாறும் போதோ, கறவையின் இடத்தை மாற்றும் போதோ, அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போதோ இப்படி ஏதாவது சில காரணங்களால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சரிவர பசுக்களில் சுரக்கப்படுவதில்லை. ஆகையால் அந்த பசுக்களின் மடியில் பால் சுரப்பு தடைபடுகிறது. இதனால் பண்ணையாளர் எதிர்பார்த்த அளவுக்கு பாலை கறக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் தான் அப்பசுக்களுக்கு ஆக்ஸிடோசின் ஹார்மோனை வெளியிலிருந்து செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பண்ணையாளர்கள் உள்ளாகிறார்கள். குறிப்பாக சொல்வதென்றால் வர்த்தக பண்ணைகளில் அதிக பாலை சுரக்கக்கூடிய கலப்பின மற்றும் அந்நிய பசுக்களின் மடியிலிருந்து முழுவதுமாக பாலை கறப்பதற்காக ஆக்ஸிடோசின் ஊசி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் ஆக்ஸிடோசின் ஹார்மோனின் ஆயுட்காலம் 6 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே என்பதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த 12 நிமிடங்களுக்குப் பிறகு இந்த ஹார்மோன் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு தன் உருவத்தையும் செயலையும் இழந்து கழிவுப்பொருளாக பாலில் வெளியேற்றப்படுகிறது. ஒரு வாதத்திற்காக ‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன் பாலில் வெளியேற்றப்படுவதாகவே வைத்துக்கொண்டாலும், அந்த பாலை மனிதர்கள் உட்கொள்ளும் போது அவை மனிதர்களின் இரைப்பையில் நொதிகளால் செரிக்கப்பட்டு அங்கு செயலிழக்கப்படுகிறது. ஆகவே ஆக்ஸிடோசின் போடப்பட்ட பசுவிலிருந்து பெறப்பட்ட பால் அருந்துவதைப்பற்றி பொதுமக்கள் கவலைக்கொள்ள தேவையில்லை என்பதே அறிவியலை அறிந்த அறிஞர்களின் வேண்டுகோளாகும்.

இந்த உண்மையை கசடற கற்காததினால் தான் நம்மில் பெரும்பாலானோர் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு கறக்கப்பட்ட பசுவின் பாலை அருந்துபவரும் ஆக்ஸிடோசின் விளைவை சந்திக்க நேரிடும் என்றும், அதனால் தான் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் சீக்கிரமாக வளர்ந்து, பருவத்தை அடைகிறார்கள் என்றும் பல்வேறு கதைகளை கட்டவிழ்த்து வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் விதைக்கிறோம்.

வணிகமுறை அடர் தீவன உற்பத்தியாளர்கள், கால்நடை மருந்து விற்பனையாளர்கள், வணிகமுறை பால் உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அறம் என்ன?

வணிகமுறை அடர் தீவன உற்பத்தியாளர்கள் அடர் தீவனத்தில் ஆன்டிபயாடிக்ஸ் உள்ளிட்ட சேர்க்கை சேர்மங்களின் அளவு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

கால்நடை மருந்து விற்பனையாளர்கள் ஆக்ஸிடோசின் உள்ளிட்ட ஹார்மோன்களை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்  அறிவுறுத்தலின்படி மட்டுமே விற்பதை உறுதி செய்ய வேண்டும்.

வணிகமுறை பால் உற்பத்தியாளர்கள் மருந்து குப்பிகளில் ஒட்டப்பட்டுள்ள முத்திரைச் சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி மருந்து செலுத்தப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை அதாவது மருந்து விலக்க காலம் வரை கறக்கப்படும் பாலை நுகர்வோர் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

பால் உற்பத்தி எனும் நீண்ட சங்கிலியில் உள்ள ஒவ்வொருவரும் நுகர்வோர்களின் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயோதிகர்களின் நலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். காசுஞ் பணம் துட்டு, மணி மணிஞ் என அலையாமல் ‘அறம் செய்து’ ’பொருள்தனை போற்ற’ பழக வேண்டும்!

முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி.

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு


Spread the love
error: Content is protected !!