‘எந்தக் கடையில நீ அரிசி வாங்குற’ என்று குண்டாக இருப்பவர்களை பார்த்து கிண்டல் செய்வது சகஜம். உடல் பருமனாக இருப்பவர்கள் கிண்டலுக்கு மட்டுமல்ல.. பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். உடல் பருமன் அதிகமானால் நீரிழிவு நோய், நடக்கும்போது மூச்சு முட்டுதல், வியர்வைக் கோளாறுகள், இதய நோய்கள், ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு நோய்கள் வாசல் கதவை வந்து தட்டும். நாம் அனுமதிக்காமலே உள்ளே நுழைந்து வாட்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அதிக உடல் பருமன் ஆண், பெண் இருபாலாருக்கும் தாம்பத்ய உறவுக்கு ஒரு தடையாகத்தான் இருக்கிறது. உடல் பருமன் உள்ளவர்கள் நடக்கும்போதும், படிக்கட்டு ஏறும்போதும் மூச்சு முட்டும். அடிக்கடி ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணத்தை தொடர வேண்டும். உடல் உறவில் ஈடுபடும்போது, அதிகமாக மூச்சு வெளியேறுவது விரைவில் களைப்பை ஏற்படுத்தும். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் கிளைமாக்ஸ் சீக்கிரமே வந்து விடும். நாளடைவில் உடலுறவில் சலிப்பையும் ஏற்படுத்தும்.
வாளிப்பான உடல் என்பது வேறு, கனத்த சரீரம் என்பது வேறு. ஆண், பெண் இருவருக்குமான வாளிப்பான உடல் என்பது ஆண்&பெண் இணைய ஒருவரை ஒருவர் சுண்டி இழுக்கும். கனத்த சரீரம் என்பது சோர்வடையச் செய்யும்.
அதிக எடையைக் குறைப்பதற்கு ஆணானாலும் பெண்ணானாலும் பெரிதும் முயல வேண்டும். எடை கணிசமாகக் குறைகின்ற போது உடற்கவர்ச்சியும் மனக்கவர்ச்சியும் ஏற்படுகிறது என்று பல ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. உடல் எடை குறைப்பு என்பது உடலுறவுக்கு மட்டுமல்ல.. உடலுக்கும் ஆரோக்கியம்.
எடை குறை உணவுப்பட்டியல்
எந்தெந்த உணவுகளை எந்தெந்த அளவு உண்டால் விரைவாக எடை குறையும் என்பதை பார்ப்போம்..
சாதாரணமாக நடுத்தர பருமன் கொண்ட ஒருவர் நாளொன்றுக்கு 1800 கலோரிதான் உணவாக எடுக்கிறாரென்றால், அதே வயதும் உயரமும் கொண்ட அதிக எடையுடைய ஒருவர் அந்த உணவில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்குதான் எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும். அதிக எடை உடையவர்கள் தாங்கள், எந்த அளவிற்கு எடை அதிகரித்திருக்கிறோம்; எவ்வளவு எடை குறைக்கப்பட வேண்டுமென்பதை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அத்துடன் எத்தனை நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் உதவுவதற்காகப் புலால் உண்பவர்களுக்கென்றும் சைவ உணவு உண்பவர்களுக்கென்றும தனித்தனியாக பலவித உணவு முறைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறோம். தனிப் புரத உணவு முறை என்றும், தனிக் காய்கறி உணவு முறை என்றும, பால் பழ உணவு முறை என்றும், தனிப்பழ உணவு முறை என்றும் பல வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகையிலும் ஒரு வாரம் முழுவதும் உண்ணக் கூடியவற்றின் பட்டியலும் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
தனித்தனி உணவு முறைப்பட்டியலுக்குப் போகும் முன்னர் பொதுவான வழிமுறைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். இந்த வழி முறைகள் உணவுமுறை வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும்.
முதலில் உங்களுக்குப் பிடித்தமான உணவு முறைக் கட்டுப்பாட்டை ஒரு வாரத்துக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
காய்கறி உணவு முறையைத் தேர்வு செய்கின்ற போது 1 கப் காய்கறி என்றால் அது பச்சையாகவும் இருக்கலாம் அல்லது சிறிதளவு உப்புப் போட்டு அவித்ததாகவும் இருக்கலாம். அல்லது அரை அரைக் கப்பாக இரண்டு விதமான காய்கறிகளாகவும் இருக்கலாம். பச்சைக் காய்கறிகள். தக்காளி, வெங்காயம் மற்றும் இதர காய்கறி சாலடு எடுக்கின்ற போது எலுமிச்சைச் சாறு சிறிதளவும் மிளகு சீரகப் பொடி சிறிதளவும் மிகமிகக் குறைந்த அளவில் உப்பும் தூவிக் கொள்ளலாம்.
வெண்ணெய், நெய், டால்டா, வனஸ்பதி, எண்ணெய் போன்ற எந்தவிதமான கொழுப்புப் பொருள்களும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
ஒரு வேளைக்குக் காய்கறி உணவாகவும் மறு வேளைக்கு பழவகை உணவாகவும்கூட அமைத்துக் கொள்ளலாம். பழங்கள் என்று குறிப்பிடும்போது நடுத்தர அளவுள்ள பழம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இப்போது ஆப்பிள் என்று சொல்வோமானால் மீடியம் அளவுள்ள (சுமார் 65 கிராம் எடையுள்ள) ஒரு ஆப்பிள் என்றே பொருள்.
காய்கறிகளையும், பழங்களையும் உங்கள் விருப்பம்போல் மாற்றிக் கொள்ளலாம். கலோரி அளவு மட்டும் ஏறக்குறைய ஒரே அளவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் கலோரித் திறன் குறைந்தவைகளாகவும், வயிற்றுக்கு நிறைவையும் திருப்தியையும் கொடுக்கக் கூடியவைகளாகவும் உள்ளன. இதற்காகவே உண்ணக்கூடிய சிறந்த கீரை வகைகளின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.
தனிப்புரத உணவு என்கின்ற போது தாவர இனப் புரதங்களையே தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் விலங்குயினப் புரதங்களைப் போல் தாவர இனப் புரதங்கள் முழுமையாகச் செரிமானம் ஆகாது. மேலும் இவை செரிக்கப்படுவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதனால் வெகு நேரம் பசி உணர்வு தோன்றாதிருக்கவும் வாய்ப்பு உண்டு.
தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள் என்கின்ற போது அவை கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். ‘கொஞ்சம் சாப்ட்டுதான் பாப்பமே..’ என்று எண்ணி சாப்பிட்டால், சொந்த செலவில் நீங்கள் சூன்யம் வைத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒவ்வொரு உணவுப் பொருளின் கலோரித் திறனைத் தெரிந்து கொள்வதற்காக கலோரித் திறன் அட்டவணை தரப்பட்டுள்ளது.
சுபாஷ்