ஊட்ட சத்துள்ள உணவு சாப்பிடுங்க.. ஆரோக்கியமாக இருங்க..

Spread the love

உணவுதான் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. ஏதோ எடுத்தோம்; கொறித்தோம் என்ற கதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவு விஷயத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் பால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவாக நூடுல்ஸ் அல்லது தயிர்சாதம் என்று ஏதோ ஒரு எளிதான உணவை அவசர அவசரமாக செய்து டிபன் பாக்ஸில் வைத்து பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அல்லது கடையில் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள கடையில் ஏதாவது விரும்பும் உணவை சாப்பிட்டுக் கொள் என்று கூறி கையில் தேவையான பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள். அவர்களும் அவர்களுக்கும் பிடித்தமான பர்கர், பிட்சா, சைனீஸ் டிஷ், உருளைக் கிழங்கு சிப்ஸ், ப்ரெஞ்ச் ஃரைஸ் என்னும் துரித உணவுகளை சாப்பிட்டு ஒரு கோக்ஸ் அல்லது பெப்சியைக் குடித்து மதியம் மற்றும் பள்ளி முடிந்து திரும்பும் மாலை வேளையிலும் சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.

பெற்றோர்கள், ஆரோக்கியமான உணவுகள் எவை என்று தெரிந்தும் தெரியாமலும் இருந்துகொள்வதுடன், தனது பிள்ளைகள் ஆரோக்கியமான உணவு உட்கொண்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் முழு உடல் நலத்துடன், ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று எண்ணுவது இல்லை. இது சார்ந்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகத் தான் உள்ளது. எல்லோரும் அக்ரூட், அவகேடோ, ஆப்பிள் என்று விலையுயர்ந்த பழங்கள், உலர் பழங்கள், பருப்புகளைச் சாப்பிடுவது என்பதற்கு அவர்களது பொருளாதாரம் இடம் கொடுக்காது. மேற்கூறிய உணவுகளில் உடலுக்கு அவசியமான சத்துக்கள் அதிகம் உள்ளதுதான் கார்போஹைட்ரேட், புரதம் நமக்கு மிகவும் தேவையானது. ஆனால் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று பட்டியல் போட்டு சாப்பிட இயலாது. ஏனெனில் அந்த உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த காலத்தில் (சீசன்) மட்டும் கிடைப்பதாகவும் இருக்கலாம்.

ஊட்டச்சத்து என்பது என்ன என்று தெரிவதற்கு முன்பு, நாம் உண்ணும் உணவுதான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். அதாவது மாவுப் பொருளின் மூலம் 60 சதவீத கலோரிகளும், புரதம் 15 சதவீதமும் கொழுப்பு 30 சதவீதமும் வழங்கும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

நமக்குத் தேவையான கலோரி அளவை நாம் எந்த உணவு மூலமும் எடுத்துக் கொள்ளலாம். வயதுக்கற்ற உணவு வகைகளும், போதுமான அளவும் நாம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொண்டால் போதும். இந்த வகை காய்கறிகள், பழங்கள், உணவுகள் தான் சாப்பிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. பகலில் மதிய உணவாக சாதம் ஒரு கோப்பை அளவு சாப்பிடுகிறோம் எனில் இரண்டு கோப்பை எடுத்துக் கொண்டு சாப்பிடுவது நல்லது. எண்ணெய் வகை உணவுகளில் கொழுப்பு அதிகம் இருக்கிறது. சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொதி நிலையிலும் மாறாத தன்மை கொண்டது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று மற்ற எண்ணெய்களையும் மாறி, மாறி பயன்படுத்துங்கள், ஆனால் அளவோடு பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால் குறைவாக உண்ண வேண்டும்.

காலை, மதியம், மாலை,, இரவு என்று வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஒரே வகை உணவாக சாப்பிடுவதால் மனதும் சலித்துப் போகும். உணவில் நாட்டமும், சத்துக்களும் காணப்படாது. காலையில் அரிசி உணவான இட்லி, தோசையை சாப்பிடுகிறீர்கள் என்றால் மதியம் கோதுமை, கேழ்வரகு என்று வேறு தானிய வகை உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். காலை, மதியம் உணவு வேளைக்கு இடையில் ஏதாவது பழ வகைகள், குளிர்ந்த மோர் அருந்துங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பழங்களை மற்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. மாலை நேரம் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதற்குப் பதில் கோதுமை, கேழ்வரகு அடை, பயறு வகைகள் சாப்பிடலாம்.

இரவு காய்கறிகளில் செய்யப்பட்ட சூப் வகைகளை அருந்தலாம் அதன் பின்னர் சாமை, திணை, கேழவரகு இவற்றில் ஏதாவது ஒன்றில் உணவு தயாரித்து, பருப்புக் கூட்டு கலந்து சாப்பிடலாம்.

வெண்டை, தக்காளி, கேரட், கத்தரி, பீட்ரூட் காய்கறிகளிலும், பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா என்று பல நிறங்களில் உள்ள காய்கறிகளில் தினசரி 3 வகை நிறக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

             தங்கள் நலன் கருதி,

         ஆயுர்வேதம் டாக்டர். எஸ். செந்தில் குமார்.


Spread the love