ஊட்டச் சத்துக்களும் உடல் வளர்ச்சியும்

Spread the love

ஊட்டச்சத்து வாரம்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர்  ஒன்றுமுதல் ஏழாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.  மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வின் மூலம் உலகிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் தோற்றத்தையும் உடல் நலத்தையும் சிறப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  விழிப்புணர்வு திட்டங்களின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். மக்கள் இத்திட்டத்தில் கலந்து கொள்ள வழி செய்யும் வகையில் துணை ஊட்டச்சத்துத் திட்டம் இந்த விழிப்புணர்வுடன் இணைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசும் ஊட்டச்சத்தும்

அரசு சமிப காலங்களில் வாரந்தோறும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், துணை ஆகாரத் திட்டத்தைத் துவக்கியது.  இத்திட்டத்தின் மூலம் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரத்த சோகையைத் தடுக்கும் வகையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் துணை உணவு வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தின் மூலமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவை வழங்குவதே இதன் நோக்கமாகும்.  அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான மாணவர்களுக்கு அதாவது முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் திங்கள், புதன், வியாழன் ஆகிய நாட்களில் வாரம் ஒன்றிற்கு மூன்று முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகளின் மொத்த ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் முயற்சியாக செவ்வாய்க்கிழமைகளில் இருபது (20) கிராம் கருப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயிறும், வெள்ளிக்கிழமைகளில் இருபது (20) கிராம் உருளைக்கிழங்கும் வழங்கப்படும்.

ஊட்டச்சத்து தேவைகளை எதிர்கொள்வதை தவிர்த்து மத்திய அரசு, பள்ளி சுகாதாரத்திட்டத்தை அமலாக்கம் செய்யவுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் குழந்தைகளின் ஆரோக்கிய பிரச்சனைகளும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் கண்காணிக்கப்படும்.  இத்திட்டம் சமீபகாலத்தில் இரண்டு புதிய தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டுவருகிறது. அவை பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தின் அளவை கண்காணிக்கும் வகையில் மாணவர்கள்  ஆரோக்கியம் தொடர்பான தரவுகளைத் தயாரிப்பது மற்றும் சமூகத்தில் சிறந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களை மேற்கொள்வது ஆகியவை குறித்து கைப்பேசி மூலம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதுமாகும்.

ஊட்டச்சத்துக் குறிப்பு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய மருத்துவ அமைப்பு தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வது குறித்த விரிவான சிறிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  அது கீழ்க்கண்ட சிலவற்றை அறிவுறுத்துகிறது.

அவை குறைந்தபட்ச பதப்படுத்தலுக்கு உட்பட்ட புதிய உணவுகளை உண்ணவும், முடிந்தவரை சமைக்கப்படாத காய்கறிகளையும், கனிகளை உட்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.  மேலும், சமைக்கும் பொழுது அவற்றிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடக்கூடும் என்கிறது.  காய்கறிகளையும், பழங்களையும் நன்கு கழுவி சுத்தம் செய்தபின் அதன் மேலுள்ள தோலுடன் உட்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.

உணவை உட்கொள்ளத் தயாராக உள்ளவரை காய்கறிகளையும், பழங்களையும் சுத்தப்படுத்துவதோ அல்லது அவற்றை துண்டுகளாக்கி வைப்பதோ, நீரில் ஊறவைப்பதோ கூடாது என்றும்.

துரிதவகை உணவுகளுடன் ஒப்பிடும்போது பாரம்பரிய மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது.

சாப்பாட்டிற்கு பதிலாக நொறுக்குத்தீனி எடுத்துக்கொள்வதை தவிர்க்குமாறும், சர்க்கரை மற்றும் ஆரோக்கியக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறது.

ஆரோக்கியமான உணவு

உணவில் ஆறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன அவையாவன.  புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு, உயிர்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து  ஆகியவையாகும். உயிர்வாழ்வதற்கு, வளர்ச்சிக்கு, உடல் செயற்பாட்டிற்கு மற்றும் உடல் திசுக்களை சரிசெய்வதற்கும் இவை உதவுகின்றன.  இவ்வனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான அளவினைக் கொண்டுள்ளதே ஆரோக்கியமான உணவாகும்.  இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், வேர்கள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும்.  மாவுச்சத்து மூலம் ஐம்பது முதல் அறுபது சதவிகித சக்தி, புரதத்திலிருந்து பத்து முதல் பதினைந்து  சதவிகித சக்தியும், கொழுப்பு சக்தியிலிருந்து இருபது முதல் முப்பது சதவிகித சக்தியும் நாம் உண்ணும் உணவில் இருக்கவேண்டும்.

இரும்புச்சத்து குறைவு (இரத்தசோகை)

இரும்புச்சத்து மாமிசம் மற்றும் கீரைவகைகளிலிருந்தாலும், இறைச்சியில் இருந்தே அது எளிதாக உடலால் உறிஞ்சப்படுகிறது. சிவப்பிறைச்சி, கரும்பச்சைக் கீரைகள், பருப்பு வகைகள், கிழங்கு பொன்றவற்றில் இரும்புச் சத்து அதிகமுள்ளது.

இறைச்சியின் மூலமும், உயிர்சத்து சி கொண்ட உணவின் மூலமும் இரும்புச்சத்து அதிகமாக உறிஞ்சப்படுகிறது. தானியங்களிலும், தேனீர், காப்பியிலும் உள்ள சில பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கின்ற பொருட்கள் அதிகமாக இருப்பதால் உணவோடு சேர்த்து அவற்றை அருந்தாமல் உணவுக்கு முன்னும், பின்னும் இரண்டு மணி நேரம் இடைவெளி விட்டு உண்பது அவசியம்.  பெருகிவரும் இரத்தசோகையை குறைக்க இரும்புச் சத்து கொடுப்பது அவசியமாகிறது.

அயோடின் குறைபாடு

அயோடின் சிறந்த ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும்.  உணவில் அயோடின் குறைவாக இருந்தால் அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் ஏற்படும்.  இதனால் பெண்களுக்கு கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்து பிறத்தல், மூளைக்கோளாறுகள், உளவாற்றல் வளர்ச்சி குறைதல், பேச்சும் காது சம்பந்தப்பட்ட கோளாறுகள், குழந்தைகளுக்கு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும். உலகளவில் மனநிலை பாதிப்பிற்கு அயோடின் குறைபாடே முழுமுதற்காரணமாக உள்ளது இது நம்மால் தடுக்கக்கூடியதாகும்.  மண்ணில் அயோடின் சத்து குறைவாக இருக்கும் மலைப்பகுதி போன்ற இடங்களில் உணவிலும் அயோடின் குறைவாக இருக்கும்.  மேலும் சில உணவுகளில் தைராய்டு நோயுக்கிள் அயோடின் உறிஞ்சலையும் பயன்பாட்டையும் தடுக்கும் பொருட்கள் இருக்கும். அவற்றை  சாப்பிடுமுன் நச்சுநீக்கம் செய்ய வேண்டும்.  அயோடின் குறைபாட்டுக் கோளாறுகளைத் தடுக்க அயோடின் சேர்த்த உப்பை பயன்படுத்துவதே எளிமையான வழியாகும்.

உயிர்ச்சத்து ஏ குறைபாடு

உலகளவில் இளங்குழந்தைகளுக்கு ஏற்படும் தடுத்திருக்கக்கூடிய பார்வை இழப்பிற்கு முதன்மைக் காரணமாகவும், போதிய சத்துணவு இல்லாமையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த குழந்தைகள் மற்றும்  இளங்குழந்தைகளின் இறப்பிற்கு முக்கிய காரணமாகவும் உயிர்ச்சத்து ஏ குறைபாடு விளங்குகிறது.  ஏழைச் சமூகங்களில் உணவின் மூலம் கிடைக்கும் ஏ உயிர்ச்சத்து பச்சைக்காய்கறிகள், கேரட், பூசணி மாங்காய், பப்பாளி போன்ற பச்சை – மஞ்சள் காய்கறிகளிலும், பழங்களிலுமிருந்து கிடைக்கிறது.  குறிப்பாக சிவப்பு பாமாயிலில் அதிகம் உள்ளது.  உயிர்ச்சத்து ஏ ஈரலில் சேமிக்கப்படுகிறாது.

இன்றைய சூழ்நிலை

உணவுப் பழக்கத்தில் மாறுதலும், குறைந்த உடற்செயல்பாடும் சமீபகாலமாக உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. அளவிற்கு மீறிய உப்புச் சுவை சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பெருகி வருகின்றன.  அதிக எரிசக்தி, நிறைவுற்ற கொழுப்பு,  கட்டுப்பாடற்ற சர்க்கரை அல்லது உப்பு, சோடியம் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகமாக உண்கின்றனர்.  போதுமான / தேவையான அளவிற்கு பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள முழு தானியங்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை.

எதிர்கால அணுகுமுறை

நமது நாடு முழுவதும்  ஆரோக்கியமான ஊட்டச்சத்து என்ற கருத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. ஆரோக்கியமான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் பெற, உணவு முறையில் இருக்கும் கலாச்சார வேறுபாடுகள், சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எல்லா வயதுடையோரையும் ஒன்றிணைக்கும் ஒரு பன்னோக்குப் பிரிவு சார்ந்த ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவைப்படுகிறது.  இந்த முன்னோடியான முயற்சி குடும்பத்திலும், குழந்தைகள் காப்பகத்திலும், பள்ளியிலும் படிக்கும் பருவத்தில் இருந்தே தொடங்கப்படவேண்டும்.  இதனால் ஆரோக்கியமாக உண்ணும் பழக்க வழக்கங்களின் அடிப்படையை சரியான வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.  எதிர்கால சந்ததிக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.  இதற்கு சரியான திட்டமிடுதல் மூலமும், சமூக மற்றும் ஆரோக்கியக் கல்வியை வளர்ப்பதின் மூலமும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எலும்புத் தேய்மானம் பெரும்பாலும் பெண்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்குகிறது.  சராசரியாகப் பெண்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் இந்நோயின் தாக்கம் ஏற்படத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் தீவிரம் அதிகரித்து பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.                 எலும்புகள் உறுதியாக அமைய கால்சியம் மிகவும் அவசியமாகிறது.  ஆண்களில் வயதானவர்களையும், பெண்களைப் பொருத்தவரையில் மாதவிடாய் நின்று “மெனோபாஸ்” காலகட்டத்திலும் பாதிக்கிறது.

பொதுவாக 45 வயதிற்கு மேற்ப்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் இதனால் பாதிப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.  இந்நோய் ஏற்ப்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போலாகிவிடும். மேலும், உடலில் கால்சியம் குறைவதும், வைட்டமின் “ஞி” குறைவதும் இதற்குக் காரணியாக உள்ளது என்று எலும்பு நோய் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.


Spread the love
error: Content is protected !!