சத்துக்கள் சேதாரமில்லா சமையலுக்கு

Spread the love

சமையல் கலை என்பது சாதாரண விஷயமில்லை. எல்லோருக்கும்  அது வசப்பட்டு விடாது. சமையல் கலை கைவந்துவிட்டால், சாப்பிடுபவர்களின் வயிறும் மனசும் நிறைந்து விடும். உளமாற  பாராட்டுவார்கள். ஆண், பெண் என்று நிறைய பேர்  உணவு சமைக்கிறார்கள். சமையலில் சத்துக்கள் சேதாரம் ஆகாமல் முழுமையாக சாப்பிடுபவர்களை சென்றடைகிறதா  என்பது மிக முக்கியமான விஷயம். காய், கீரை, தானியம், பருப்பு வகைகளின் தன்மை, மணம், நிறம் மாறாமல் சமைப்பது ஆரோக்கியத்துக்கு அவசியம். சமைக்கும்போது எந்த  உணவிலும் சத்துக்கள் வீணாகக் கூடாது. அதற்கு தேவையான  டிப்ஸ்…

•அரிசி, தானிய வகைகளை ஓரிரு முறை நீரில் கழுவினால் போதும். நிறைய தடவை நீரில் கழுவக்கூடாது. அதில் உள்ள மினரல்ஸ், விட்டமின் சத்துக்கள் நீரில் கரைந்து விடும்.

•பருப்பு வகைகளை சிறிது நேரம் நீரில் ஊற வைத்தபின் வேக வைத்தால் பருப்பு மென்மையாகவும் மலர்ந்தும் இருக்கும். பிரஷர் குக்கரை உபயோகித்து பருப்பை வேக வைப்பதே சிறந்தது. நேரம் மிச்சமாவதுடன் அதில் உள்ள விட்டமின் சத்துக்களும் பாதுகாக்கப்படுகிறது.

•கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகிய காய்கறிகள் உடலுக்கு அதிகம் நன்மை தரும். அவற்றின் தோலை அரிந்து போட்டு விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே நல்லது. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.

•பருப்பு, கடலை வகைகளை நன்கு கழுவிய பின்னரே நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய நீரை வடிகட்டக் கூடாது. இதனால் சத்துக்கள் வீணாகும். ஊற வைத்த தண்ணீரிலேயே பருப்பு, கடலை வகைகளை வேக வைக்க வேண்டும். சத்துக்கள் சேதாரமின்றி கிடைக்கும்.

•ஆப்பிள் மற்றும் கத்திரிக்காயை அரிந்த உடன் சற்று நேரத்திலேயே கருப்பு நிறம் வந்துவிடும். இவற்றில் உள்ள இரும்பு சத்து வீணாவதே இதற்கு காரணம். இவைகளை அரிந்த உடன் உடனே பயன்படுத்த வேண்டும். அல்லது எலுமிச்சை சாற்றை தடவினால் நிறம் மாறுவதை தடுக்கலாம். சத்தும் வீணாகாது.

•முளைகட்டிய பயறு, கடலை வகைகளில் அதிக அளவு விட்டமின் சத்துக்கள் உள்ளன. எனவே, இவற்றை நமது சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

•தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். உடனே பரிமாற வேண்டும். அல்லது அமிலத்தன்மையை தடுக்க இளஞ்சூடாக இருக்கும்போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.

•காய்கறிகளை நீண்ட நேரம் வேக வைக்க வேண்டாம். காய்கறிகளை அதிக வெப்ப நிலையில் விரைவாக சமைக்கும் போதுதான் அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. காய்கறிகளை சமைக்க பிரஷர் குக்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்.

இந்த முறையில் சமைத்துப் பாருங்கள் சுவையும்  சூப்பராக இருக்கும். அதை சாப்பிடுபவர்களின் உடல்  ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீங்களும் சமையல்  கலை நிபுணராகவோ, நிபுணியாகவோ மாறிவிடுவீர்கள் என்பதில்  சந்தேகமில்லை.


Spread the love