நுணா ஒருவகை சிறு மரமாகும். இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இது வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் தன்மையுடையது. நுணா மரத்தின் உட்புற பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதால் இதனை மஞ்சணத்தி என்று கூறுவர்.
இந்த மரத்தின் பழத்தை உண்ணலாம். இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் இயற்கையாகவே உள்ளன. இதன் பட்டையை சாயத்திற்கு பயன்படுத்தலாம்.
தாவர விவரம்
மூலிகையின் பெயர் | நுணா |
தாவரக்குடும்பம் | காஃபி |
வேறுபெயர்கள் | மஞ்சணத்தி, மஞ்சள் நாரி, மஞ்சள் மீனா |
பயன் தரும் பாகங்கள் | இலை, பட்டை, காய் |
மருத்துவ பயன்கள்
நுணா தோல் நோய், வயிற்றுப் புண், மூட்டு வலி, சர்க்கரை நோய், புற்று நோய் ஆகியவற்றை நீக்குவதற்கு சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
நுணா இலையை மையாக அரைத்து புண், இரணம் மற்றும் சிரங்குகளில் வைத்து கட்டி வர அவை குணமடையும்.
இதன் இலையை சாறு பிழிந்து இடுப்பு வலி உள்ள இடங்களில் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.
இதன் காயை எடுத்து தொண்டையில் பூசி வர தொண்டை நோய்கள் நீங்கும்.
மந்தம் நீங்க
நுணா இலைச்சாறு, உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாற்றினை ஒரு பங்கு என்ற அளவில் ஒன்றாக கலந்து 3-4 வேளை குடித்து வர மந்தம் நீங்கும்.
மாதவிடாய் கோளாறுகள் நீங்க
இதன் இலை மற்றும் காய் நெல்லிக்காய் அளவு சேர்த்து அரைத்து, அதனுடன் 1/4 பங்கு மிளகுத்தூள், சீரகம் சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
அதில் 50 முதல் 100 மில்லி லிட்டர் வரை எடுத்து 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
கரப்பான் நீங்க
இதன் பட்டை கரப்பான், சுரம், புண் இவைகளை நீக்கக்கூடியதாகும்.
பூவரசம் பட்டை, இலுப்பை பட்டை, நுணாப்பட்டை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரியாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து பூசி வர கரப்பான் நீங்கும்.
குடல் சுத்தமாக
சிறிதளவு நுணா வேரை சாறு எடுத்து அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர பேதி உண்டாகி, குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீங்க
நுணா இலையின் நடுவில் உள்ள ஈர்க்குகளை எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி, துளசி, மிளகு, சுக்கு போன்றவற்றை ஒரு உருண்டை அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் இதனை வடிகட்டி ஒரு சங்கு அதாவது 25 மில்லி என்ற அளவில் கஷாயமாக குடிக்கவும்.
இவ்வாறு செய்வதால் வயிற்றுக் கோளாறு, மந்தம், பேதி நீங்கும். இதனை இரண்டு நாட்கள் இருவேளை மட்டும் குடித்தால் போதுமானது.
கூந்தல் எண்ணெய் தயாரிக்க
இது முடி வளர்ச்சிக்கு அல்ல, நமது கூந்தல் அல்லது சருமத்தில் ஏற்படும் படை நோய்கள், கழலைக் கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
எண்ணெய் எடுக்கும் முறை
நுணா மரத்தின் பட்டையை நன்கு இடித்து அதனுடன் 4 மடங்கு தண்ணீர் ஊற்றி, அதனை ஒரு பங்காக காய்ச்சவும். பின் இதனுடன் சம அளவு எலுமிச்சை சாறு எடுத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்க்கவும்.
இந்த எண்ணையை வாரத்திற்கு இருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து 20 நிமிடங்கள் சென்ற பின் தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பாசிப்பயறு தடவி குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இதன் பலனை விரைவில் காணலாம். இது வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல், மண்ணீரல், கோளாறுகளை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
பல்பொடி தயாரித்தல்
தேவையான பொருட்கள்
நுணா காய்கள் – ஒரு கிலோ
கல் உப்பு – 250 கிராம்
தயாரிப்பு முறை
ஒரு மண்பானையில் நுணா காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் கல் உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். காய்கள் கரிந்து போகாமல் வறுத்து இறக்கவும். ஆறியதும் நன்கு அரைக்கவும்.
இந்த பொடியை கொண்டு பல் தேய்த்து வர பல் அரணை, பல் வலுவிழந்து போதல், ஈறுகளில் இரத்தம், சீழ் சொரிதல் மற்றும் பல் கூச்சம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.