நாவல் கஷலீயம்:
நாவல் மரத்தின் பட்டை, நாவல் பழத்தின் கொட்டை, மஞ்சள், மருதம் பட்டை, ஆவாரை, நன்னாரி வேர், கொத்தமல்லி விதை ஆகிய ஏழு பொருட்களையும் சம அளவு எடுத்து இலேசாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதில் 30 கிராம் அளவு எடுத்து 250 மி.லி. நீர் விட்டு நான்கில் ஒரு பங்கு வரும்படி காய்ச்சி எடுத்து வடிகட்டி காலை, மாலை அருந்தி வரவும். இளம் வயது நீரிழிவிற்கு மிகுந்த பயன்தரக் கூடியது. சிறியவர்களுக்குக் கஷலீயம் தயாரிக்கும் போது, 30 கிராமுக்குப் பதிலாக 15 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வர படிப்படியாக நீரில் சர்க்கரை குறையும்.
நாவல் சூரணம்:
நாவல் கொட்டைகளைக் சேகரித்துக் கொண்டு, வெயிலில் காய வைக்கவும். உலர்ந்த பின்பு கொட்டையின் மேல் தோலை நீக்கி விட்டு உள்ளே உள்ள பருப்பை மட்டும் இடித்து பவுடராக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை 1 முதல் 2 கிராம் அளவு வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரவும். நாவல் கொட்டை கிடைக்காத பொழுது, பச்சையாக வெட்டி எடுத்து வரப் பட்ட நாவல் மரப்பட்டையையும், நாவல் மரத்தின் கொழுந்து இலையையும் பயன்படுத்தலாம். மலக்கட்டை உருவாக்கும் மருந்து இது என்பதால், நீரிழிவு நோயாளிக்கு உடன்படும் வகையில் பின் கூறும் முறையில் தயாரித்து உட்கொள்வது அவசியம்.
நாவல் பழத்தின் கொட்டை அல்லது கொழுந்து இலை அல்லது பச்சையாக வெட்டி எடுத்த் பட்டை இதில் ஏதாவது ஒன்றை நிழலில் காய வைத்து இடித்து சலித்துக் கொண்ட சூரணம் ஒரு பங்குடன், நெல்லிக்காய் வற்றல் இடித்து சலித்துக் கொண்ட சூரணம் ஒரு பங்குடன், வில்வ இலை நிழலில் உலர்த்தி இடித்த சூரணம் ஒரு பங்குடன், கறிவேப்பிலை நிழலில் உலர்த்தி இடித்த சூரணம் ஒரு பங்குடன் வெந்தயம் இடித்துச் சலித்த சூரணம் ஒரு பங்கு இவை ஐந்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை 1 முதல் 2 கிராம் வரை நீருடன் உட்கொள்ளவும்.