நிலவேம்பு

Spread the love

இந்த கசப்பான மூலிகை பல பயன்களை உடையது. பல நூற்றாண்டுகளாக ஜீரண மண்டலம், சுவாச மண்டல கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. சரியான அளவில் கொடுக்கப்பட்டால் நிலவேம்பு பல நோய்களுக்கு மருந்தாகும் என்கிறது ஆயுர்வேதம்.

நிலவேம்பு வருடாந்திர செடி. கிளைகளுடன் 0.5 – 1.0 மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு உருண்டு, வழவழப்பாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கும். இரு வகைகள் – சீமை (சூரத்) நிலவேம்பு மற்றும் நாட்டு நிலவேம்பு. நாட்டு நிலவேம்பு 1/2 மீட்டர் உயரமாக, நான்கு மூலைகள் உள்ளதாக சிறிது கறுப்பாக இருக்கும். (எனவே காலமேக் என்ற பெயர்). இரண்டு வகை வேம்புகளின் பயனும், குணமும் ஒன்று தான்.

பயன்படும் பாகங்கள்: இலை, தண்டு

பொதுவான குணங்கள்: பசியை தூண்டும், டானிக், உடலுக்கு உரமேற்றும். வெப்பம் உண்டாக்கும்.

தாவரவியல் பெயர்: Andrographis Paniculata

குடும்பம்: Acanthaceae

சமஸ்கிருதம்: பூ நிம்பா, இந்தி – கிராயத், இதர பெயர் – காலமேக் (Kalmegh)

தென் கிழக்கு ஆசியாவில் பரவலாக பயிரிடப்படுகிறது இந்த பயன் தரும் மூலிகை. சீனாவிலும், தாய்லாந்திலும், மேற்கிந்திய தீவுகளிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. நல்ல திடமான தாவரமானதால், எல்லா வகை மண்களிலும் விளையும், வேறு தாவரங்கள் விளையாத பூமியிலும் நிலவேம்பு வளரும்.

கசப்பான Andrographolide எனும் மருந்துப் பொருள் உள்ளது நிலவேம்பு.

நிலவேம்பின் பயன்கள்:

* ஜுரம், வீக்கம் (அழற்சி), ஜலதோஷம் இவற்றுக்கு ‘ஆஸ்பிரின்’ மருந்து போல நிலவேம்பு செயல்படுகிறது. 15 கிராம் நிலவேம்பு + கிச்சிலித்தோல் 195 மி.கி. + கொத்துமல்லி 195 மி.கி இவற்றை வெந்நீரில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வடிகட்டி, 15 – 30 மி.லி. வரை தினமும் 2 – 3 வேளை கொடுக்கலாம். நிலவேம்பின் சுரம் குறைக்கும் திறன், ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ உடல் எடைக்கு 300 மி.கி. நிலவேம்பில் உள்ள கசப்பு ரசாயனப் பொருள் கொடுத்து வந்ததில் அது அதே அளவு ‘ஆஸ்பிரின்’ மருந்து போல் செயல்படுகிறது. மூக்கடைப்பு, தொண்டைப்புண், காதுவலி, தலைவலி, இவற்றுக்கும் நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட கசப்புப் பொருள் மருந்தாகிறது. உடல் அழற்சி, ரணங்களையும் ஆற்றுகிறது.

* நிலவேம்பு சாறு அல்சருக்கும் நல்ல மருந்து. குடலில் அதிக அமிலச் சுரப்பை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். பேதியை நிறுத்தும் திறனுடையது. லோபர் மைட் (அ) லோபோமை (Loperamide) என்ற அலோபதி பேதி மருந்து அனைவருக்கும் தெரிந்த மருந்து. நிலவேம்பின் இராசாயனப் பொருட்கள் இந்த மருந்துக்கு இணையாக செயலாற்றி பேதியை நிறுத்துகிறது. நாள்பட்ட பெருங்குடல் அழற்சிக்கு நல்ல மருந்தாகும்.

* கல்லீரலை காக்கும் மருந்துகளில் ஒன்று நிலவேம்பு. கல்லீரல் கோளாறுகளுக்கு உள்ள ஆயுர்வேத மருந்துகளில், 26 மருந்துகளில் நிலவேம்பு சேர்க்கப்படுகிறது. மது அருந்துதல், நச்சுப் பொருட்கள் இவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவதை எதிர்க்கிறது. பித்த நீர் சுரப்பை அதிகப்படுத்தும்.

* நிலவேம்பை சிதைத்து 34 கிராம் அளவில் எடுத்து, 700 மி.லி. வெந்நீர், கிராம்புத்தூள் (அ) பொடித்த ஏலம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 4 கிராம் எடுத்து, ஒன்றாக கலந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வடிகட்டி 15 – 30 மி.லி. அளவில் தினமும் 2 – 3 முறை கொடுத்து வர குளிர் சுரம், கீல் பிடிப்பு, அஜீரணம் முதலியன குணமாகும்.

* நிலவேம்பு பாக்டீரியா, வைரஸ் இவற்றுக்கு எதிரி. யானைக்கால் வியாதிகளை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும். உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் வெள்ளையணுக்களின் திறனை மேம்படுத்தும்.

* இதயத்தின் தசைகளை வலுப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்கும்.

* உடலின் நோய் தடுப்பு சக்தியை பலப்படுத்தும் ஆற்றல் உள்ளதால், புற்று நோய்க்கு மருந்தாக, நிலவேம்பின் இலைச்சாறு பயன்படுத்தலாம் என்ற கருத்து ஜப்பானிய மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. இவர்கள், குடல் புற்றுநோயில் செல்கள் விபரீதமாக பெருகுவதை நிலவேம்பு தடுக்கிறது என்கின்றனர். வேறு வகை புற்று நோய்களிலும், செல்கள் பெருகுவதை நிலவேம்பு தடுக்கிறது. இதே போல, எய்ட்ஸ் நோய்க்கும் நிலவேம்பு பயன்படுத்தப்படலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆயுர்வேதம்.காம்


Spread the love