சிசு பரிபாலனம்

Spread the love

குழந்தை பிறந்தவுடனே வெளிக்காற்று அதன்மேல் படவே வீர் வீரென அழுது மூச்சுவிடும்  அவ்வாறு அழாதிருந்தால் உடனே பிருஷ்டத்தின் மேல் அல்லது பாதத்தில்  ஒரு விரலால் சுண்ட வேண்டும் அல்லது சிறிது பிராந்தி சரீரத்தில் பூசினால் சுவாசம் வரும்.  இதற்கும் மூச்சு வராவிட்டால் ஒரு பாத்திரத்தில் வெந்நீரும்,  மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரும் வைத்து முதலில் வெந்நீர் பாத்திரத்தில் முழுக்காட்டி பின்பு குளிர்ந்த தண்ணீர் பாத்திரத்தில் முழுக்காட்டி, இவ்வாறு விரைவில் மாற்றி மாற்றி முழுக்காட்டினால் சுவாசம் வரும்.  இதற்கும் சுவாசம் வராவிட்டால், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து அதன் முழங்கைகளை மருத்துவர்கள் (மருத்துவச்சிகள்) தன் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு அவைகளைக் குழந்தையின் தலைக்குமேல் தூக்கவேண்டும்.  இப்படி செய்வதால் குழந்தையின் மார்பு அகன்று விஸ்தாரமாகக் காற்று நாசித் துவாரத்தின் வழியாய் உள்ளே சுவாசத்திற்குள் செல்லும்.

பின்பு அதன் கைகளை மறுபடியும் தணித்து அவற்றால் குழந்தையின் மார்பின் மறுபக்கங்களிலும் மெதுவாக அழுத்தவேண்டும் இப்படி செய்வதால் உள்ளே சென்றிருக்கும் சுவாசம் வெளியில் வரும்.  இவ்விதமாக நிமிடத்திற்குப் பதினைந்து தடவை குழந்தையின் கைகளைத் தூக்கி தூக்கி அமர்த்த, சுவாசம் உள்ளே சென்று வெளியில் வந்து கொண்டிருக்கும், இப்படி சிறிது நேரம் செய்த பிறகு நன்றாய் மூச்சுவிட்டு பிழைக்கும். (குழந்தை பிறந்தவுடனேயே அதன் இமைகளை ஓர் சுத்தமான மெல்லிய துணியினால் துடைக்க வேண்டும்.  அப்படிச் செய்யாவிடில் குழந்தைகளுக்குக் கண் பொங்கி, கண் நோயுண்டாகும்.)

அதன்பின் குழந்தைக்கு  சவுக்காரம் தேய்த்து நன்றாகக் கழுவி வெந்நீரில் குளிக்கவைத்து ஓர் மெல்லிய துணியினால் நன்றாகத் துடைக்கவேண்டும்..  ஓர் சிறிய வெள்ளைத் துணியை நெருப்பில் எரித்து அது பாதி  வெந்தவுடனே அணைத்து அந்தக் கரித்துணியினால் தொப்புள் கொடியைச் சுற்றிக் கட்டவேண்டும்.  தினமும் அதே மாதிரி புதிது புதிதாய்க் கட்டிக்கொண்டு வர ஒரு வாரத்தில் தொப்புள் கொடி விழுத்துபோகும்.

கொடியினின்று அதிகமாய் இரத்தம் வந்தால் ஓரு மெல்லிய துணியால் தொப்புள்கொடி நுனியைக் கட்டினால் இரத்தம் நின்றுவிடும்.  கொடியை அறுத்து விடாமல் மெதுவாயும், ஜாக்கிரதையாகவும் கட்டவேண்டும்.  தொப்புள்கொடி விழுந்து போனபின் தொப்புள் மேல் ஒரு  துணியை மடித்துப்போட்டுக் கட்டினால் தொப்புள் பெரிதாகாது.  இதன்பின் குழந்தைக்கு உடுப்பு போட்டு தாயின் பக்கத்தில் மிருதுவான படுக்கையின் மேல் படுக்க வைத்து மெல்லிய  கம்பளியினால் முகம் தவிர சரீரம் முழுவதும் போர்த்தவேண்டும்.  பின்பு தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.  பிறந்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் பால் கொடுப்பதனால் தாய், சிசு இருவருக்கும் நன்மை உண்டு.

முதலாவது குழந்தை சரியாய் பால் குடிக்குமாயின் தாயின் கர்ப்பாசயம் சீக்கிரம் சுருங்கிவிடும்.  ஆதலால் உதிரப் பெருக்கு உண்டாகாது. ஸ்தனங்களில் பால் கட்டாது. குழந்தைக்குப் பால் கொடுக்க தாமதம் நேரிட்டால் பால் கட்டுவதனாலேயே  ஸ்தனங்கள் கல்லைப்போல் இறுகி, முலைக்காம்புகள் சிறுத்து உள்ளே போய்விடும். பிற்பாடு குழந்தை முலைக்காம்பை இழுக்க முயன்றாலும், தாய்க்கு சகிக்க முடியாத வலி உண்டாகி முலைக்காம்பின் மிருதுவான மேல்தோல் வெடித்துப் புண்ணாகிவிடும்.  குழந்தைக்கும் பால் குடிக்க முடியாது.  பால் சுரம் கண்டு குளிர், நாவறட்சி, தலைவலி இவைகள் உண்டானால், ஸிட்லிஸ்  பவுடரில் ஒரு தேக்கரண்டி வெந்நீர் கலந்து நாளன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் எவ்வித ஜுரமும் தீரும்.

இரண்டாவது முதலில் சுரக்கும் சீம்பாலுக்கும், பிறகு சுரக்கின்ற பாலுக்கும் மெத்த வித்தியாசம் உண்டு.  சீம்பாலைக் குடிப்பதனால் குழந்தையின் வயிற்றில் நிறைந்து தங்கியிருக்கும் கறுத்த, பச்சை நிறமான மலம் வெளியாகும்.  இந்தப் பால் குடிக்காவிட்டால் மலச்சுத்தி ஆகாது.  “கல்லினுள் தேரைக்கும், கர்பத்துப் பிள்ளைக்கும் கருத்துடன் அமுதளிக்கும்” கருணாகரன், குழந்தை பிறந்தவுடனே அதன் சரீரத்துக்கும் ஸ்திதிக்கும் தகுந்த ஆகாரத்தைத் தாயின் முலையில் அமைத்து வைத்திருக்கிறார்.

அப்படி இருக்க அநேகமான நாட்டு மருத்துவ ஸ்த்ரீகள் வெற்றிலை ரசம், கள்ளி ரசம் முதலிய பிரவர்த்தி மருந்துகளைக் கொடுத்து பிள்ளையின் வயிற்றைக் கெடுத்துவிடுகிறார்கள் ஐயோ பரிதாபம்!  வாயில்லா ஜந்துக்களை இவ்விதம் அவஸ்தைக்கு உள்ளாக்குபவர்களுக்கு கொடிய தண்டனை விதிக்கப்படவேண்டும்.  இவ்வித ஒளஷதங்களால் வயிற்றுவலி, வயிற்றுப்பிசம் முதலியவை உண்டாகும்.  ஆனால் குழந்தையை ஸ்நானம் செய்வித்ததுடன் இரண்டு மூன்று தேயிலைக்கரண்டி குளிர்ந்த தண்ணீர் கொடுத்துவந்தால் வாய் சுத்தமாகி புன்னகைக்கும்.  ஆகையால் இதேவிதம் பிரதி தினம் குளிர்ந்த தண்ணீர்பானம் பண்ணுவிப்பதால் அநேக நன்மைகளும் உண்டு.  குழந்தையின் பசியையும் ஒருவாறு தணிக்கும்.  இவ்விதம் செய்வதால் குழந்தை அமைதியாய் நித்திரை செய்யும், அதற்குள் தாயும் தன் களைப்பு தீர்ந்து பால் கொடுக்க ஆயத்தமாகி விடுவாள்.  தாய் அவ்விதம் ஆயத்தமில்லாமல் இருக்கும்பொழுதும், குழந்தை தூங்கும்பொழுதும் அனாவசியமாய் அதை எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது.

அநேக ஆட்டுக்குட்டிகள் பிறந்த இரண்டு, மூன்று, நாட்களாக ஒன்றும் தின்னாமல் துள்ளிக்கொண்டு திரிவதை நாம் பார்க்கிறோம். ஆகையால் உன் குழந்தை உன் பக்கத்தில் அமைதியாய்ப் படுத்துக் கொண்டு, லேசாய் மூச்சு விட்டுத் தூங்கினாலும் சரி, தூங்காவிட்டாலும் சரி அது சுகமாயிருக்கிறது. அது தானாய் பசியினால் அழும் வரை அதைத் தொந்தரவு செய்யக்கூடாது, பிறந்த இருபத்தினான்கு மணி நேரத்திற்குள் அது பசியினால் அழும், அப்பொழுது பால் கொடுத்து, உடுப்பு மாற்றித் திரும்பவும் தூங்கச் செய்ய வேண்டும்.  இவ்விதம் செய்வதால் சிசுவானது நன்றாய்த் தூங்கிச் சீக்கிரத்தில் புஷ்டியாகும்.  குழந்தை பிறந்து இரண்டு, மூன்று நாள் வரையில் தாய்ப்பாலையே குடித்துக்கொண்டு வந்தால் வேறு பிரவர்த்தி மருந்துகள் ஒன்றும் அவசியமில்லை, சில குழந்தைகள் பிறந்த இருபத்தினான்கு மணி நேரம் வரை நீரிறங்காமல் கஷ்டப்பட்டு கால்களை உதறிக்கொண்டு வீரிட்டு அழும். அப்பொழுது வெந்நீரில் நனைத்துப் பிழிந்த கம்பளியினால் அடிவயிற்றில் சிறிது நேரம் ஒற்றடம் கொடுக்க நீரிறங்கி சுகம் உண்டாகும்.

கஷ்டப் பிரசவத்தில் தாய்க்கு களைப்பு நேரிட்டுக் குழந்தைக்கு பால் கொடுக்கச் சக்தியற்றிருக்கின்றனர் என்றால் சர்க்கரையைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதில் சில டீஸ்பூன் அளவு குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குப் பிறகு கொடுக்கலாம்.  இவ்விதமே மூன்று மணிக்கொரு முறை சேனைவார்க்கலாம். இரண்டு, மூன்று நாட்கள் வரை தாய்,  பால் கொடுக்க சக்தியற்றவளாயிருந்தால் பசுவின் பாலுடன் தண்ணீரும் சர்க்கரையும் கலந்து காய்ச்சிக் கொடுக்கலாம்.  இதற்கு பதிலாகப் பசுவின் பாலைத் தாய்ப்பால் மாதிரி செய்யும் முறையைக் கையாளுவது உத்தமம். குழந்தை பிறந்த முதல் வாரத்தில் தாய் ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்துக்கொண்டு குழந்தைக்கு ஸ்தனபானம் செய்விக்கலாம்.

ஆனால் குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே தாய் தூங்கிவிடக்கூடாது. ஏனெனில் சில சமயங்களில் குழந்தையின் முகம் தாயின் ஸ்தனத்தில் அழுந்தி குழந்தை மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.  முதல் மூன்று நாள்களும் குழந்தை பால் குடிக்கத் தெரியாமல் வெகு சொற்பமாய்க் குடிக்கும்.  ஆகையால், அதற்குத் அடிக்கடி முலைப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் சக்திக்குத் தக்க ஒன்று, இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு தடவை பால் கொடுக்க வேண்டும்.  ஆனால், காலக்கிரமத்தில் தப்பாமல் கொடுக்கவேண்டும்.  பகலில் சரியான வேளையில் பால் கொடுத்து வந்தால் இரவில் இரண்டொரு தடவைக்கு மேல் பால் கொடுக்கத் வேண்டியது இல்லை.

ஆனால் முதல் மாதம் இரவில் மூன்று தடவைகள் பால் கொடுக்கலாம்.  அதற்குப் பின் இரவில் பால் கொடுக்காமல் தூங்கச் செய்வது மிகவும் நல்ல பழக்கம்.  குழந்தை அழும்போதெல்லாம் பால் கொடுப்பது நல்லதல்ல.  சில சமயங்களில் தாகத்தால் அழும் அப்பொழுது குளிர்ந்த நீர் குடிக்கக் கொடுக்க வேண்டும்.  குழந்தை பால் குடிக்க மறுக்கும்போது தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும்.  இவ்விதம் தண்ணீர் குடிப்பது ஜீரண சக்தியை விருத்தியாக்கும். குழந்தை ஒரு வயதாகும் வரைக்கும் தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் வேறில்லை.

ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்


Spread the love