நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அதில் மிக முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கலுக்கு என்ன காரணம்? உண்ட உணவின் கழிவுப் பொருட்கள், அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகும், மலமாக வெளியே வராமல் போனால் மலச்சிக்கல் என்று கூறலாம். நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு மலச்சிக்கலினாலே அந்த நோய் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி அண்மையில் தெரிவிக்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்வோமெனில், நரம்புத் தளர்ச்சியும் இருக்காது. மலச்சிக்கலை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன?
முறையாக மலம் கழிக்க தினமும் காலை, மாலை அல்லது காலையில் எழுந்த உடன் மலம் கழிக்க வேண்டுமென்று பழக்க செய்து கொள்ள வேண்டும். நல்ல உடற்பயிற்சி, நார்ச்சத்து மிக்க உணவுகள், அடிக்கடி நீர் அருந்துதல் கடைபிடிக்க வேண்டும். பழச்சாறு அருந்துவதை விட முழுமையான பழத்தை நறுக்கி, துண்டுகளாக்கிச் சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுதல், இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் நரம்புத் தளர்ச்சியை குறைத்துக் கொள்ளலாம்.
திடீரென்று வியர்வை அதிகமாக ஏற்படுவது இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்பொழுது தலை சுற்றுவது போல ஒரு பிரமை ஏற்படும். இதயத் துடிப்பும் அதிகமாக காணப்படும். இதய தசை நார்களில் உள்ள இரத்த நாளங்கள் தடித்து விடும். இதனால் புதிய இரத்த நாளங்கள் உடனடியாகச் செயல்படாமல் போகும். இரத்த அழுத்தக் கோளாறுகளுக்கும் நரம்பு மண்டல இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இரத்த அழுத்தம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்.?
உடல் ஆரோக்கியத்திற்கு அளவோடு, மிகவும் சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். நேரம் கெட்ட வேளைகளில் சாப்பிடுவது, உறங்குவது என்பதை தவிருங்கள். கசப்புச் சுவை நரம்புகளுக்கு வலிமை தரும். எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினசரி அருந்தவும். சுண்டைக்காய், பாகற்காய் இடையிடையே உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முருங்கைக் காய், முருங்கைக் கீரை, முருங்கைப் பூ மேலும் கீரை வகைகளில் வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை நல்லது. இவை அனைத்தும் கசப்புத் தன்மை கொண்டவை. முருங்கைக் கீரையை உருவிய பின்பு உள்ள காம்புகளை, கொதிக்கும் இரசத்தில் சிறிது நேரம் போட்டு கொதிக்கச் செய்து இரசம் தயாரித்து அருந்த நரம்புகளுக்கு பலம் தரும்.
காபி, வெற்றிலைப் பாக்கு, புகையிலை தவிர்க்கவும். நிதானமான வேலை, வேலைக்கேற்ற ஓய்வு எடுப்பது நல்லது. நாள் தோறும் சரியான அளவு குறைந்தது 7 முதல் 8 மணி நேர, நிம்மதியான உறக்கம் அவசியம். நல்ல தூக்கம் வர அசுவகந்தா சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சூரணத்தில் அரை ஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து இரவு சாப்பிட்டு வரலாம்.
இரண்டு வாரங்களுக்காவது வெறும் வயிற்றில் காலை சிறிது வெங்காயம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகி விடும். முருங்கைக் கீரையை நன்றாக நிழலில் உலர்த்தி டீ தயாரிப்பது போல டிகாக்ஷன் இறக்கி பால் சேர்த்து சர்க்கரை கலந்து அளவோடு அருந்தி வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
முருங்கைக் கீரையை புட்டு அவிப்பது போல அவித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துச் சாப்பிடலாம். பிழிந்து எடுத்த கீரையையும் கேழ்வரகு மாவுடன் சேர்த்து அடை செய்து சாப்பிடலாம்.
முளை விடும் தானியங்கள் தினசரி சாப்பிடலாம். முளை விடும் பொழுது தானிய விதைகளில் வைட்டமின் சி 10 மடங்கும், தையாமின், ரிப்ளோவின், நிகோடினிக் அமிலம் சுமார் 2 மடங்கும் அதிகம் கிடைக்கிறது. புளிச்சக் கீரையை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரும்பு, சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். இரத்தத்தைச் சுத்தம் செய்யும். மலச்சிக்கல் நீங்கும்.. புதினா, கொத்தமல்லி கீரை சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். துவையல் செய்து நெய் விட்டு சூடான சாதத்தில் சாப்பிடவும்.