பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை. சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘கோக்சூரா’ – இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள், பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி முள் என்றும் பெயர். பூக்கள் மஞ்சள் நிறமாயிருக்கும்.
நெருஞ்சிலில் சிறுநெருஞ்சில், பெரு நெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில் என்னும் பிரிவுகளுண்டு. நெருஞ்சிலுக்கு யானை வணங்கி என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த பிரிவுகள், குணத்தில் மாறுபாடு இல்லை.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஆயுர்வேதத்திலும், சீன வைத்தியத்திலும் நெரிஞ்சில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இந்த மூலிகையை, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், சொரியாஸிஸ் எக்சிமா போன்ற சர்ம நோய்களுக்கும், விந்து முந்துதல் (Pre-mature ejaculation), மற்றும் இதயம், ரத்தநாள பாதிப்புகளுக்கும், மருந்தாக பயன்படுத்துகின்றனர். பல்கேரியாவில் பாலியல் வேட்கையை அதிகரிக்கவும், குழந்தையில்லா குறைபாட்டை போக்கவும் நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்கர்களும் நெருஞ்சிலை சிறுநீர் சுலபமாக பிரியவும், மனநிலை (Mood) மாறவும் உபயோகித்தனர்.
தாவரவியல் பெயர்: Tribulus Terrestris
குடும்பம்: Zygophyllaceae
இதர பெயர்கள்: சமஸ்கிருதம் – கோக்சுரா
இந்தி: கோக்ரூ / காக்ரூ, ஆங்கிலம் – Caltrops
தமிழில் இதர பெயர்கள்: திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சி புதும், காமரசி
பயன்படும் பாகங்கள்: செடி முழுமையும்
பொதுவான குணங்கள்: சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் ‘டானிக்’, குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும்.
பயன்கள்
1. இதன் முக்கிய பயன், சிறந்த சிறுநீர் பெருக்கி. ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக சொல்லுகிறார்.
2. சிறுநீரக பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சில் கஷாயம் நல்லது.
3. பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலுக்கு, தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும்.
சிறுநீரக கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அநூரியா (Anuria) எனும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்ந்த கோக்சூராதி க்ருதம் (மூலிகை சேர்த்த நெய்) நல்ல மருந்து.
நெருஞ்சில் நீரிழிவு நோயை எதிர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தில் ஒன்று.
ஜனன உறுப்புக்களின் செயல்பாட்டை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் பாலியல் உணர்வை தூண்டுகிறது. சதவாரி, அஸ்வகந்தா இவற்றுடன் சேர்ந்து, பெண்களின் கர்ப்பப்பை (Uterus) பாதிப்புகளுக்கு மருந்தாகும். ஆண்களின் ஆண்மையை பெருக்குகிறது. ஆண்மை குறை தீர, நெருஞ்சிலை தேனுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் நோய்களான கொனோரியா (Gonorrhoea) போன்றவற்றுக்கும் நெருஞ்சில் அருமருந்து. ஆண் ஹார்மோனான Testosterone உற்பத்திக்கு காரணமான Luteinizing hormoneகளை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் இளமையாக இருக்க உதவுகிறது. 30 நாட்கள் நெருஞ்சிலை உட்கொண்டு வர, ஆண்மலட்டுத்தன்மை நீங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
· நெருஞ்சில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பசியை தூண்டும் வயிற்றுக்கோளாறுகளை போக்கும்.
· மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது.
·நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும்.
·நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும்.
நெருஞ்சிலால் செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள்
1. கோக்சுரா அவலேஹம்
2. கோக்சுரா க்ருதம்
3. கோக்சுரா க்வாதம்
4. கோக்சுரா குக்குலு முதலியன.