இயற்கை வைத்தியம்

Spread the love

இயற்கையில் கிடைக்கக் கூடிய தாதுப் பொருள்கள், மூலிகைகள், தண்ணீர் போன்றவற்றைக் கொண்டு நோய்களின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து குணமாக்குவதே இயற்கை வைத்தியத்தின் குறிக்கோள். நோயைக் குணப்படுத்துவதிலும், வாழும் விதத்திலும் ஒரு புரட்சியை உண்டுபண்ணியதுதான் இயற்கை வைத்தியம். “Naturopathy” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இயற்கை வைத்தியம் தற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் நடைமுறைகள் பழங்காலத்தில் நோய்களைத் தீர்க்க உபயோகத்தில் இருந்தவைதான்.

எகிப்து, கிரேக்கம், ரோம் நாடுகளில் இயற்கை வைத்தியம் பிரசித்தி பெற்றிருந்தது. 460 & 357 கி.மு. ல் வாழ்ந்த ஹிப்போகிரேடிஸ் இதை மிகவும் பாராட்டிக் கடைப்பிடித்துள்ளார். நமது வேதங்களில் இதுபற்றி அதிகம் பேசப்படுகிறது. மொகஞ்சதாரோ நாகரிக காலத்தில் தண்ணீரின் உபயோகமும், அதன் மருந்துக் குணமும் பரவலாக தெரிந்துள்ளது.

நவீனகால சிகிச்சை முறைகள் ஜெர்மனியில் 1822 ல் வின்சென்ட் பிரசின்ட்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரால் தண்ணீர் கொண்டு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமென்று கண்டறியப்பட்டதால், அமெரிக்கா போன்ற நாடுகளில் இது நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு பலரால் இம்முறை நன்கு வளர்க்கப்பட்டு Naturopathy என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதற்கு மூலகாரணம் டாக்டர் பெனடிக்ட் லஸ்ட் (1872 & 1945 ) என்பவராவார்.

இயற்கை வைத்தியத்தின் தத்துவமென்ன? மனிதன் பிறக்கும்பொழுது ஆரோக்யமாகயிருக்கிறான். இயற்கையின் சூழலோடு வாழ்ந்தால் ஆரோக்யம் நீடிக்கிறது. இயற்கைக்கு விரோதமாக உண்டு வாழ்ந்தால் இரத்தம் கெடுகிறது. கழிவுகள், நச்சுப் பொருட்கள் உடலில் அதிகமாகி, தேங்கி நோய்களை எற்படுத்துகின்றது. இரப்பை, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள், தோல், நுரையீரல் போன்றவை பாதிக்கப்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன.

ஆதாரமான கொள்கைகள் (Basic Principles)

இயற்கை வைத்தியம் மூன்று கொள்கைகள் பால் சார்ந்துள்ளது. முதலாவதாக எல்லா நோய்களுக்கும் மூல காரணமாகத் திகழ்வது உடம்பில் கழிவுகள் சேருவதுதான். இவைகள் உடலிலிருந்து அகன்றால் எந்த நோயும் அண்டது. ஆனால், நம்முடைய தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், அதிகமாக உண்ணுதல், ஒழுங்கற்ற வாழும் முறை போன்றவற்றால் இவைகள் வெளியேறாமல் நோய்களை எற்படுத்துகின்றன. மேற்கொண்டு, மனக் கவலை, கடின உழைப்பு, மித மிஞ்சிய வேலை போன்றவை இவற்றின் வேகத்தை அதிகப்படுத்துகின்றன. எனவே, இந்த கழிவுகளை, நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டுமென்று இயற்கை வைத்தியம் கூறுகிறது.

இரண்டாவதாக, காய்ச்சல், வாதங்கள், அஜீரணக் கோளாறுகள், தோலில் புண்கள், போன்றவை உடம்பு தானாகவே கழிவுகளை வெளியேற்ற முயல்வதின் விளைவுகள். மேற்கொண்டு இதய நோய்கள், சர்க்கரை வியாதி, மூட்டுவலி, வியாதிகள், ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறுகள் நாம் தவறான வழிகளில் வியாதிகளைக் கட்டுப்படுத்த உட் கொள்ளும் மருந்துகளால் தான் ஏற்படுகின்றன.

மூன்றாவதாக, நம் உடம்பில் இயற்கையாகவே தானாகவே குணப்படுத்தும் சக்தி உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் நோய்கள் அண்டது. நோயை குணப்படுத்தும் சக்தி நம் உடம்பிலேயே உள்ளது. மருத்துவர் கையில் இல்லை.

இயற்கை வைத்தியம் –  நவீன முறைகள் –  வேறுபாடுகள்

நவீன மருத்துவ முறைகள் நோயின் அறிகுறிகளை குணப்படுத்த முயலுகிறதே தவிர, நோயின் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து குணப்படுத்த முயலவில்லை. இதற்கான மருந்துகள் ஓரளவு குணத்தைக் கொடுத்து, பக்க விளைவுகளை எற்படுத்துகின்றன. இந்த நவீன கால மருந்துகள் நம் உடம்பிலுள்ள இயற்கையாகவே தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மையை அழித்து விடுகின்றன. மேற்கொண்டு உடம்பிலுள்ள உயிர்ச் சத்துக்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்டு, வீணாகின்றன. நவீன முறைகள் ஒவ்வொரு வியாதியையும் தனித் தனியாக தீர்க்க முயல்கின்றன. இயற்கை வைத்தியம் முழு உடம்பையே ஆரோக்யமாக்க முயற்சிக்கிறது.

இயற்கை வைத்திய முறைகள்

இயற்கையோடு ஒத்துபோகிற முறைகள் தான் இயற்கை வைத்தியத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நம் உடல் அவயவங்களை பாதிக்காமல், ஊறு விளைவிக்காமல், நச்சுப் பொருள்களை, கழிவுகளை இம்முறைகள் வெளியேற்றுகின்றன. வெளியேற்றத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புக்களை நன்கு செயல்புரியவும் உதவுகின்றன. முதலில் நோயைக் குணமாக்க, உணவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கு அமிலத்தை உண்டாக்கும் உணவுப் பொருள்களை நீக்க வேண்டும். ஸ்டார்ச், கொழுப்பு, போன்றவற்றை ஒரு வாரம் உண்ணக் கூடாது. பழங்களை நிறையச் சாப்பிட வேண்டும். முடிந்தால் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். உண்ணாமல் இருக்கும்பொழுது பழரசம் அருந்தலாம்.

நோய் வாய்ப்படும்பொழுது, சாப்பிடக் கூடாது. பழங்கள் நல்லது. பழங்கள் சாப்பிட்டபின் ஆல்கலைன் (Alkaline) நிறைந்த பச்சைக் காய்கறிகள், முளைவிட்ட தானியங்களைச் சாப்பிடவும். பசித்துப் புசி, பசியின்றி சாப்பிடக் கூடாது. நோயிலிருந்து விடுபட்டாலும் பசித்தவுடன் தான் உண்ண வேண்டும்.

உடம்பின் ஆரோக்யத்தை மேம்படுத்த தண்ணீரின் உபயோகம் மிகவும் ஏற்றதாகும். பலவிதமான வெப்பநிலையில் தண்ணீரைக் குடிக்கலாம். அதில் குளிக்கலாம். ஒத்தடம் கொடுக்கலாம். வயிற்றில் குளிர்ந்த தண்ணீரால் தடவிக் கழுவலாம். செக்ஸ் உறுப்பில் தண்ணீர் படுமாறு தொட்டியில் உட்காரலாம் (HIP BATH) சுடுநீர் சிலவற்றிற்கு நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் வசித்தல், நடத்தல், மசாஜ் செய்து கொள்ளுதல், சூரியக் குளியல், உடல் பயிற்சி, யோகா, ஆசனங்கள் மிகவும் நல்லது.

பொதுவாக, சரிவிகித உணவு நல்ல உடற்பயிற்சி, சுத்தமான காற்று, தண்ணீர், வேண்டிய அளவு ஓய்வு, நல்ல பாசிடிவ் மனப்பான்மை, நம்மைக் காக்கும். ஆரோக்யத்தைக் கொடுக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love