இயற்கையை நாடுவோம்

Spread the love

Naturopathy அல்லது Nature cure என்றழைக்கப்படும் இயற்கை மருத்துவத்தை ஒரு மருத்துவ முறை என்று கூறுவதைக் காட்டிலும் ஒரு வாழ்வியல் கோட்பாடு, ஒரு வாழ்க்கை முறை (Way of Life) என்று கூறுவதே பொருத்தமாகும். அறிவியல் அடிப்படையில் உடலியல் விதிகளையொட்டி அமைந்த இந்த இயற்கை மருத்துவ முறையைக் கொண்டு உடலுறுப்புக்களின் செயல்திறன் குறைவினால் ஏற்பட்ட நோய்க் குறிகளையும் நோய்களையும் விலக்குவதுடன் நோயே வரமாலும் காத்துக் கொள்ள முடியும்.

அடிப்படை கோட்பாடுகள்

உடலின் உட்புற சூழல் (Milieu Interne)

நாம் வாழுகின்ற இடத்தில் நம்மைச் சுற்றி ஒரு சுற்றுச் சூழல் (Environment) இருக்கிறது. இந்தச் சூழலிலுள்ள நிலமோ, நீரோ, காற்றோ மாசுபடும்போது சுற்றுச்சூழல் மாசடைந்து விட்டது என்கிறோம். இதே போன்று நம் உடலின் உட்புறமும் அங்கிருக்கும் உறுப்புக்களுக்கு இடையேயும் ஒரு சூழல் நிலவுகிறது. இதையே உடல் உட்புறச் சூழல் என்கின்றனர். நாவின் சுவை கருதியும், மன மகிழ்ச்சி கருதியும் உணவுப் பண்டங்களை உண்பதும் குளிர்பானங்கள் குடிப்பதும் உட்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன. உறுப்புக்கள் மாசடையும் போது உடற்கழிவுகளும் நச்சுப் பொருள்களும் தேங்கத் தொடங்குகின்றன. உடலில் தேங்கும் இக்கழிவுகளே உடல் நலம் குன்றக் காரணமாகின்றன.

உள்ளுக்குள்ளேயே மருந்து (Medicatrix Naturae)

உடலுக்கு உள்ளேயே மருந்திருக்கிறது என்பது இயற்கை மருத்துவத்தின் இரண்டாவது கோட்பாடு. உடலுக்கு ஏற்படுகின்ற கோளாறை, குறையை நீக்கி நிவர்த்தி செய்கின்ற இயல்பான சக்தி உடலுக்கு இருக்கிறது. இதையே Natures healing power என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையை, நடைமுறைப் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்திப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைத்துத் தருவது இயற்கை மருத்துவர்களின் பணியாகும்.

நோயின்போது கேடு செய்யாத மருத்துவம் (Non – Nacere)

நவீன மருத்துவ முறைகள் பலவும் நோயின் உணர்குறிகளையே பெரும்பாலும் நீக்க முயலுகின்றன. இதனால் அந்த நேரத்திற்கு நோயின் உபாதையிலிருந்து தீர்வும், விடுதலையும் கிடைக்கக் கூடும். ஆனால் நோயின் அடிப்படைக் காரணி அகற்றப்படாமலே இருக்கும். பல வேளைகளில் நோயை விட மருத்துவம் அதிக கேட்டினை விளைவிக்கக்கூடும். ஆனால் இயற்கை மருத்துவமோ வள்ளுவன் கூறியது போல் “நோய் நாடிநோய் முதல் நாடி” அதைத் தணிக்கின்ற வகையில் செயல்படுகிறது.

இயற்கை மருத்துவம் என்றதுமே துறவர ஆடையணிந்த துறவியாக ஆகிவிட வேண்டுமோ என்று பலர் அஞ்சுகின்றனர். அது ஒரு தேவையற்ற அச்சம். எளிய, இயற்கை உணவுகளை அளவோடு உண்டு, அளவோடு உறங்கி, நாள்தோறும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ ஆயத்தமாக இருக்கும் எவரும் இந்த மருத்துவ முறையைப் பின்பற்றலாம்.

இதனையும் மீறி உடல் நலம் குன்றுகின்றபோது நிலம், நீர், ஒளி, வளி, வெளி என்ற ஐம்பொருள்களுடன் தொடர்பு கொண்ட முறைகள் மூலம் மருத்துவம் செய்து கொள்ளலாம்.

வேகமும் விரைவும் மிகுந்த வாழ்க்கை முறையினால் மன அமைதி குறைகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், குடற்புண், மூட்டு வலி, முதுகு வலி என்று பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இவற்றிலிருந்து விடுபட்டு இனிய வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் இயற்கை உணவுகளை உண்டு இயற்கை மருத்துவத்தைக் கைக் கொள்ள உறுதியெடுப்போம்.


Spread the love