இயற்கையோடு இணைந்த வாழ்வு

Spread the love

இயற்கையான செயல்பாடுகளை, நியதிகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவே அறிவியல் முயன்று வந்துள்ளது. கதிரவன் ஏன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான்? ஆப்பிள் பழுத்ததும் ஏன் கீழே விழுகிறது? நமக்கு ஏன் நோய்கள் வருகின்றன? இது போன்ற பலப்பல ஆய்வுகள், தேடல்கள், முயற்சிகள். இந்த முயற்சிகள் முதிர்வடைவதற்கு வெகு முன்பாகவே இயற்கையை முற்றிலும் ஆராய்ந்து அறிந்து கொண்டு விட்டதாக அறிவியலார் கருதி விட்டனர்.

அதனால் இயற்கை நியதிகளைக் கட்டுப்படுத்தவும் கட்டுக்குள் கொண்டு வரவும் முற்பட்டனர். தொல்லையும் அப்போது தான் தொடங்கியது. காரணம், இயற்கை பற்றிய எல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருக்காதது மட்டுமல்ல, அறிந்து கொள்ள வேண்டிய சிறிதளவு கூட அறிந்திருக்கவில்லை. இதனால் இயற்கையைக் கட்டுப்படுத்த முயன்ற போது எதிர்பாராத பல விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

“எங்கள் ஆய்வுகளின் போது நாங்கள் கற்பனையில் கூட எண்ணியிராத பல அற்புதங்களை இயற்கை நிகழ்த்திய வேளைகளில் கபடமில்லாச் சிறு குழந்தைகள் போல் அதைக் கண்டு வியந்து நின்றோம் என்பது தான் உண்மை” என்று புகழ் மிக்க அறிவியல் அறிஞரான டாக்டர். டீன் ப்ளாக் தன்னுடைய “Health at cross roads” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்க் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன என்ற கோட்பாட்டை உருவாக்கிய பிறகு, ராபர்ட் கோச் பாக்டீரியாக்களைப் பிரித்தறிகின்ற வழிவகைகளைக் கண்டறிந்த பிறகு, பல அறிவியலார் ஆன்ட்டி பயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கினர்.

இன்றைய நிலையில் பல வகையான பாக்டீரியாக்களை அழிக்க வல்ல 60க்கு மேற்பட்ட ஆன்ட்டிபயாடிக்குகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதே வேளையில் பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை தங்களது தடுப்பாற்றலை வளர்த்துக் கொண்டு இவ்வகை மருந்துகளை எதிர்க்கின்ற திறம் பெற்றுள்ளன. லூயி பாஸ்டர் காலத்திலும் கோச் காலத்திலும் இல்லாதிருந்த பல பாக்டீரியாக்கள் இன்று நிலவி உள்ளன. அது மட்டுமல்ல திறன் மிக்க பல ஆன்ட்டி பயாடிக்குகளைக் கூட விளையாட்டுக் காட்டி ஏமாற்றுகின்ற திறமையை அவை பெற்றுள்ளன.

உயிரியல் மற்றும் மருத்துவ அறிவியலில் பலர், சொற்களின் திறமறிந்து பயன்படுத்துவதில்லை என்பதுடன் தவறாகவும் பிரயோகம் செய்கின்றனர். அறிவியலால் அங்கீகரிக்கப்படாதவற்றை அறிவில்லாதவை என்கிறார்கள். “Things that are not science,they call non sense” அறிவியல் சாராதவற்றைக் குறிப்பிட அறிவியல் அல்லாதவை (Non – science) என்ற சொல்லே சரியான சொல்லாக இருக்கும். மேம்போக்காகப் பார்த்தால் இரண்டு சொற்களும் ஒரே பொருள் தருபவைபோல் தோன்றக் கூடும்.

ஆனால் அவையிரண்டிற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. எல்லா உண்மைகளுக்கும் அறிவியல் அடித்தளமாகிறது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் அறிவியலால் ஆய்ந்து உணரப்படாத அனைத்தையும் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறுவது அறிவுடைமையாகாது. அறிவியல் அல்லாதவற்றை (Non – science) மூட நம்பிக்கை, மந்திரம், மாயம், போலி மருத்துவம் போன்றவற்றோடு சமமாக்கிப் பேசுவதோ, அவை பயனற்றவை, தீமை பயப்பவை, தவறானவை என்று பழித்துரைப்பதோ சரியான அணுகு முறையாகாது.

புற்றுநோய் மருத்துவத்தில் நிபுணரான டாக்டர். ராபர்ட்.டி.ஷிம்பே புற்று நோய்க்கெதிரான மருத்துவப்போர் பற்றி ஒரு திடுக்கிடும் கருத்தைத் தெரிவித்துள்ளார். “வேதி மருத்துவம் (Chemotherapy) புற்றுநோயை மேலும் மோசமாக்குகிறது. புற்று நோய் செல்கள் வேதி மருத்துவத்தையே எதிர்த்துத் தாங்கிக் கொள்கின்ற திறம் பெறுவதுடன் அவற்றின் எதிர்ப்பு முறை புற்றுநோய் மருத்துவத்தையே ஏமாற்றுவது போல் அமைகிறது” என்று கூறுகிறார். அறிவியல் பல நேரங்களில் தகுதிக்கு மேற்பட்ட தன் மதிப்பைப் பெற முயல்கிறது என்பது தான் இன்று பலருடைய கருத்தாகிறது.

தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தியதன் மூலம் மனித வாழ்நாளை நீட்டித்திருப்பதாக மருத்துவ அறிவியல் (medical science) பெருமைப்படுகிறது. நேரிய பெருமை தான். ஐயமில்லை. இந்த முன்னேற்றத்தில் ஆங்கில மருத்துவம் கணிசமான பங்கு பெறுகிறது. அதே வேளையில் உண்மை நிலை என்ன என்று சிந்திக்க வேண்டியும் இருக்கிறது.

 மேலை நாட்டுத் தொழிற் சமுதாயங்களில் இறப்பு விகிதம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குறையத் தொடங்கி விட்டது. அதாவது பல மருத்துவக் கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே இது நிகழத் தொடங்கி விட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விடப் பின் வந்த ஆண்டுகளில் இறப்பு விகிதம் (ஆண்கள்) குறிப்பிடத்தக்க விதத்தில் குறையவில்லை என்று “Medicine out of control” என்ற தமது புத்தகத்தில் டாக்டர். ரிச்சர்டு டைலர் குறிப்பிடுகிறார்.

1960 களிலும் 70 களிலும் அறுவை சிகிச்சை முறை பெரும் முன்னேற்றமடைந்தது. அதனால் பற்பல விதமான நெஞ்சக, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் வெற்றி கரமாக நடத்தப்பட்டதுடன் அதி நவீன மருத்துவப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இருப்பினும் இறப்பு விகிதம் 1954 முதல் 1974 வரை எந்த விகிதத்திலும் இறக்கமின்றி ஒரே மாதிரியாகவே இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நடு வயது ஆண்கள் பிரிவில் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. Dr.Donald, M.Vickery ,”Life Span for your health”

மனித வாழ்நாள் உயருவதற்கு மருத்துவத்துறை துணை நின்றிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை, எனினும் உடல் நலக் கல்வியறிவும், மேம்படுத்தப்பட்ட சத்துணவு முறைகளும், தூய சுற்றுச் சூழலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் தற்பேணுதல் (Personal Hygeine) முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும், தரமான தங்குமிடங்களும், பரவலாகச் சமுதாய வாழ்வில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களும் மனிதரது வாழ்நாள் உயர்வதில் பெரும் பங்காற்றியுள்ளன.

சராசரி வாழ்நாள் உயர்ந்திருக்கிறது, அதனால் மக்களின் உடல்நலநிலை உயர்ந்திருக்கிறது என்று கூறுவது தவறான கருத்தைத் தோற்றுவிப்பதாகும். எடுத்துக்காட்டாக ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விடுகிறது. மற்ற குழந்தை 80 வயது வரை வாழ்ந்து முதுமையுற்று இறக்கிறது. இப்போது இவர்களது சராசரி வாழ்நாள் 80:-2 = 40 வயது ஆகிறது. அவ்வாறில்லாமல் பிறந்த இரண்டு குழந்தைகளும் 70 வயது வாழ்ந்து பின்னர் மரித்தால் சராசரி வாழ்நாள் 140:-2 = 70 வயதாகிறது.

அதாவது சராசரி வாழ்நாள் இப்போது 30 ஆண்டு உயர்ந்து விடுகிறது. சராசரி வாழ்நாளைப் பொருத்தவரை இது குறிப்பிடத்தக்க உயர்வு தான். இதன் அடிப்படையில் வாழ்ந்து மடிந்தவர்கள் இருவரது உடல்நல நிலைகளும் உயர்ந்து இருந்தன என்று கூற முடியுமா?

மேற்குறிப்பிட்டுள்ள முதல் நிகழ்வில் 2 குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆரோக்கியக் குறைவினால் பிறந்த சில நாட்களுக்குள் மரித்தது. இரண்டாவது குழந்தை வயது வந்தவராக 80 ஆண்டுகள் உடல் நலத்தோடு வாழ்ந்து பின்னர் இறக்கிறது. இரண்டாவது குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வில் 2 குழந்தைகள் பிறந்து இரண்டும் 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தன என்றாலும் இவர்கள் இருவரும் வாழ்ந்திருந்த காலத்தில் அடிக்கடி நோய்களுக்கு ஆட்பட்டுத் துன்புற வேண்டி வந்தது. நடுவயதில் ஒருவருக்கு இதய நோய் வந்தது. நீண்ட நாட்கள் மருந்து உட்கொண்டார். பின்னர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் தொல்லையின்றி இருந்து பின்னர் நோய்வாய்ப்பட்டார். மற்றவரை 60 வயதில் புற்றுநோய் தாக்கி அவர் உடலைச் சிதைத்தது. அவர்கள் 70 வயது வரை வாழ்ந்தார்களெனினும் இருவரும் தம் கடைசி நாட்களை நோயுடன் கழித்துத் துன்பத்துடன் மரிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை இது தான். வாழ்க்கைச் சூழல் மேம்பட்டிருப்பதாலும், பரவலாகப் பெரும்பான்மையோருக்கு மருத்துவ வசதி கிடைப்பதாலும் சிசு மரணமும் குறைந்திருக்கிறது. மக்கள் முன்னை விட இப்போது அதிக நாள் வாழ்கிறார்கள் என்றாலும் அவர்கள் உடல் நல நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடியாது. நடுவயதுக் காரர்களில் பலரும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மூப்புற்றவர்களோ மேற்சொன்ன நோய்களோடு கண் குறைபாடு, எலும்பு நோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பதோடு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இவை தவிர எய்ட்ஸ், கேன்டிடா தொற்று, எப்சம் பார் நோய் (Epsom Barr Disease /Yupple Syndrome) போன்ற தடுப்பாற்றலை அழிக்கும் நோய்களும் பெருகி வருகின்றன.

immunity எனப்படும் தடுப்பாற்றலைச் சிதைத்து ஓழிக்கின்ற இப்புதுவகை நோய்களுக்கெல்லாம் உடனடி நிவாரணம் கண்டறிய மருத்துவ அறிவியலினால் இயலவில்லை. அது மட்டுமல்ல இது போன்றதொரு நிலை ஏற்பட்டதற்கு காரணமே மருத்துவ அறிவியல் தான். மக்கள் தங்கள் மனம் போனபடி கண்டதைத் தின்று, கிடைத்தவற்றைக் குடித்து தம் உடல்நலத்தை அழித்துக் கொள்ளப் பக்கபலமாய் நின்று உதவியதும், புதுப்புது மருந்துகளை உட்கொண்டால் போதும் நோய்கள் மாறும் என்று பரிந்துரை செய்ததும் மருந்தியல் துறையும் மருத்துவர்களும் தான்.

இயற்கையோடியைந்த வாழ்வே இனிய வாழ்வு என்ற எண்ணமே எவருக்கும் இல்லாமல் போனதற்குக் காரணம் அறிவியல் கண்டுபிடிப்புகள் தாம். அறிவியல் வரலாறு தொடங்கிய காலம் முதலே ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சில வரையறைகளின் அடிப்படையில் மட்டுமே அறிவியலார் செயல்பட்டு வந்துள்ளனர்.

தொடக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட போது பின்னாளில் இவற்றை எதிர்த்து நிற்க வல்ல சக்தியைப் பாக்டீரியாக்கள் பெறக்கூடும் என்றோ, உடலின் தடுப்பாற்றல் சக்தி (Immune system) குறைவுற்று அதன் விளைவாக நோய்கள் தோன்றுமென்றோ அவர்களுக்குத் தெரியாது. ட்ராங்க்விலைசர் (Tranquilizer) எனப்படும் செயற்கை அமைதியூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட போது அவை மனிதரிடையே மாறாத பித்து நிலையை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தொடக்க காலத்தில் டான்சில்ஸ்களை வெட்டி எறிந்த மருத்துவர்கள் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் காத்து உயர்த்துகின்ற ஒரு உறுப்பு என்பதை அறிந்திருக்கவில்லை. குடற்புண்களை அறுவை சிகிச்சையின்றியே குணமாக்க முடியும் என்பதை அவர்கள் காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டனர்.

இதே போல் உணவு முறைகளிலும் பல சிக்கல்கள் நேர்ந்தன

அளவிற்கதிகமாக உமியும் தவிடும் நீக்கப்பட்டு தீட்டப்பட்ட மாவுப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்தது.

அளவில் மிகுந்த விலங்குப் புரதங்கள் (இறைச்சியும் பாலும்) பரிந்துரைக்கப்பட்டது.

தேவைக்கு மேலதிகமான வேதிப்பொருள்கள் உணவுகளில் சேர்க்கின்ற பழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவை மூன்றுக்கும் காரணம் அறிவியல் முன்னேற்றங்கள் தாம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முழுமையான தானிய உணவை விடத் தீட்டப் பெற்ற மாவுப் பொருள்கள் (Refined Flour) சிறந்தவை என்று உணவியலார் (Nutritionists) மெய்ப்பித்துக் காட்டினர். இது பழங்கதையைக் கிளறுகின்ற முயற்சி என எண்ணப்படக்கூடாது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவில் நார்ச்சத்து என்ற ஒரு பொருள் தேவையில்லை. அதனால் பயன் ஏதும் ஏற்படுவதில்லை என்று மருத்துவத் துறையினர் கூறி வந்தனர்.

 ஆனால் இன்றைய நடைமுறையில் நாம் காண்பதென்ன? மருத்துவர்களில் பெரும்பாலோர் நார்ச்சத்து நமக்கு அவசியம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். இருந்தாலும் ஒரு சில மருத்துவர்கள் தீட்டப்பட்ட தானியங்களும், பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளும் உடல் நலத்துக்கு ஏற்றவையல்ல என்று வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகின்றனர்.

உணவில் சத்துக் குறைவால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில் இறைச்சி உடலுக்கு வலுவும் திடமும் தருகிறது என்று மெய்ப்பிக்கப்பட்டது. பிற சத்துக்கள் எதுவுமின்றிச் சோற்றை மட்டுமே உண்டிருந்த மக்களுக்கு இறைச்சியும் பாலும் கொடுக்கப்பட்ட போது உடல் நலம் மேம்பட்டது உண்மை தான். ஆனால் புலால் உணவு உண்போரை விட மரக்கறி உணவு உண்போர் மிக்க திடத்துடனும் நலத்துடனும் இருக்கிறார்கள் என்று இன்று மெய்ப்பிக்கப்பட்ட நிலையிலும் விலங்குப் புரதம் உடலுக்குத் தேவையென்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இருந்தாலும் அளவில் மிகுந்த புரதம் உடலுக்குத் தீங்கு பயக்கும் என்று டாக்டர்களும் உணவியலாரும் ஒத்துக் கொள்கின்றனர்.

உணவில் சேர்க்கப்படுகின்ற பல்வகை வேதிப்பொருள்களில் பயன்பாட்டிற்கும் அறிவியலாரே பெரிதும் காரணமாவர். உணவு வேதிகள் (Food Chemicals) அனைத்தும் உணவியலாரால் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்பதை நாம் நினைவு கூர்தல் வேண்டும். உணவின் சுவையையும், தோற்றத்தையும் மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு பலவிதமான வேதிகள், சாயங்கள், பதனப் பொருள்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய வேதிகளைச் சேர்ப்பதில் தவறில்லை என்று முன்பு ஒப்புதல் அளித்தவர்கள் உணவியல் ஆய்வர்களும் அறிவியாலாருமே.

 உணவி கெட்டுப் போவதைத் தடுக்கும் பொருட்டு சில வேதிகள் சேர்க்கப்படுவதன் அவசியத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவையன்றிப் பிற வேதிகள் அனைத்தும் உணவின் தோற்றத்தை உயர்த்திக் காட்டி உண்பவரை மட்டுக்கு மீறி உண்ணச் செய்து, உற்பத்தி செய்பவரின் லாபத்தை உயர்த்தவே உதவுகின்றன.

“Medicus curat Naturae sanat” Doctor treats –   இதன் பொருள் மருத்துவர் செய்கிறார். இயற்கை குணமாக்குகிறது என்பது தான். ஆனால் இன்றைய தலைமுறையினர் ‘சயின்ஸ்’ என்ற சொல்லில் கட்டுண்டு தளைப்பட்டுக் கிடக்கின்றனர். எளிய இயற்கை மருத்துவத்தாலும் இயற்கை உணவுகளாலும் உடல் நோய்கள் குணமாகும் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர். உடல் நலம் என்பது மனிதனது இயல்பு நிலை. எவ்விதமான ஆரவாரமும், முயற்சியும் இன்றி உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. இந்தச் சக்திக்கு உதவி செய்பவையே இயற்கை உணவுகள், ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி போன்றவைகள். இயற்கை நியதிகள் மீறப்படுகின்ற வரை நோயிலிருந்து நிலையான மீட்சி கிடைக்க வகையில்லை. அப்படிக் கிடைக்கின்ற சிகிச்சைகள் யாவும் தற்காலிகமானவையே.

அறியாமை, தன்னடக்கமின்மை உடல் நலத்தில் கருத்தின்மை காரணமாக இயற்கை நியதிகள் மீறப்படுகின்ற போது அது மனிதனது வலுவை, ஆற்றலைக் குறைத்து, உறுப்புகளைப் பாதித்து அவனை நோய்க்கு இரையாக்குகிறது. இயற்கை நெறிகளை, நியதிகளை மதித்துப் போற்றி அதற்கொப்ப ஒழுகுகின்ற போது உடல் நலம் தானே சிறக்கும். நோயின்றி வாழ எண்ணும் அனைவரும் இயற்கையோடு இயைந்து வாழப் பழகுதல் வேண்டும். அனைவரையும் அந்நிலையடையச் செய்வதே இந்நூலின் மையக் கருத்தும் நோக்கமும் ஆகும்.


Spread the love