பித்தம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி

Spread the love

பொதுவாக இப்போதைய மனிதனின் எந்திர மயமான மற்றும் டிஜிட்டல் வாழ்க்கையில் உடல் உழைப்பையே மனிதன் மறந்து விட்டான் என்று கூறலாம். போதுமான உடல் உழைப்பு இன்மை, வாழ்க்கைச் சூழல் மாற்றம் காரணமாக, பணிச் சுமை கூடுதல், நேரம் கெட்ட வேளையில் உணவு உட்கொள்ளுவது, உடலுக்கு பொருத்தமில்லாத உணவை கூடுதலாக அல்லது குறைவாக உட்கொள்ளுவது, மது, மாது என்று தீய பழக்கங்கள், மன அழுத்தம் பல விதமான நோய்களை மனிதனுக்கு கொண்டு வருகின்றது.

இதில் நரம்புத் தளர்ச்சியும் ஒன்றாகும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு, அருந்தும் நீர், மூச்சு உள் இழுத்து வெளி விடும் காற்று மூன்றும் நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளிலும் சென்று, செரிமானமாகி, உடலில் சத்துகளாக மாறி விடுகிறது. சத்துக்கள் நமது உடலின் இரத்தம், நரம்பு மண்டலங்கள் இயக்கி அஸ்திவாரம் போல உடலிய பாதுகாக்கிறது. மனிதனின் உடலானது வாதம், பித்த, கபம் என்று மூன்று வித தோஷங்களைக் கொண்டது.

மூன்று தோஷங்களும் மனித உடலில் சுமார் 72,000 நாடி நரம்புகளில் உயிர் நாடியாக அமைந்துள்ளது. நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதற்கு ஊட்டச் சத்துக் குறையுள்ள உணவுகளை உட்கொள்வது, மது அருந்துதல், அதிக தாம்பத்திய உறவு கொள்ளுதல் மற்றும் குடும்பம், பணிச் சூழல் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் என்ற இந்த மூன்று காரணங்களே முக்கியமானதாக உள்ளது.

ஆயுர்வேத வைத்தியத்தில் எந்த வகையான நரம்புத் தளர்ச்சியினை குணப்படுத்த விரும்பினாலும் முக்கியமாக நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்களில் ஒன்று மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது, மருத்துவர் பரிந்துரைத்த ஊட்டச் சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிடுதல் வேண்டும். மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வுகளை ஆராய்வது அவசியமாகும்.

பித்தத்தினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சிக்கு உதவும் மருத்துவம் ஆயுர்வேதத்தில் அதிகம் உள்ளன. அவைகளில் ஒரு சில மிகவும் எளிமையானவை ஆகும்.

  1. உடலில் பித்த நீர் அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்த கரிசாலங்கண்ணி, நாயுறுவி, நீர் முள்ளி இவைகளின் இலை, வேர், மற்றும் சுக்கு, மிளகு ஒவ்வொன்றும் சம அளவு எடை எடுத்துக் கொண்டு, நன்றாக சுத்தம் செய்து, தேவையான அளவு நீர் சேர்த்து கஷாயம் செய்ய வேண்டும். ஆறிய பின்பு, வடிகட்டி சேகரித்துக் கொண்டு, மாலை மயங்கிய பின்னர், உணவு அருந்திய பின்னர், அரை அவுன்ஸ் வீதம் தினசரி ஒருவேளை அருந்தி வர வேண்டும்.
  2. கீழா நெல்லி இலை மற்றும் வேர் இரண்டையும் வகைக்கு 20 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, சுத்தம் செய்த பின்பு கால் லிட்டர் நீர் விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டக் காய்ச்சி, அதன் பின்பு ஆற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். மேற்கூறிய கஷாயத்தை உணவுக்கு பின்பு காலை, மாலை என தினசரி இருவேளை குடித்து வர வேண்டும்.
  3. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், வசம்பு, கழற்சிக் காயின் பருப்பு, வேப்பங்கொழுந்து இவைகள் ஒவ்வொன்றும் வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு கால் லிட்டர் ஆமணக்கு எண்ணெயில் போட்டு பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கலக்கி, பதமாக காய்ச்சி, வடிகட்டி தனியாக ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய மருந்தை, தினசரி காலை, இரவு என இருவேளையாக, உணவிற்குப் பின்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தொடர்ந்து முப்பது நாட்கள் தவறாமல் உட்கொண்டு வர, பித்தம் அதிகரிப்பினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  4. சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகவும் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதற்குரிய மருந்து மற்றும் உட்கொள்ள வேண்டிய முறைகளும் இங்கு கூறப்பட்டுள்ளன.
  5. அமுக்கராக் கிழங்கு 100 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் சுத்தமான நீரில் கலந்து கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய பின்னர் காலை, இரவு என தினசரி இருவேளையாக, உணவிற்குப் பின்னர் சம அளவு அருந்தி வர சிறுநீரகக் கோளாறு காரணமாக ஏற்படும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  6. கொன்றை மரத்துப் பட்டை, தூதுவளைச் செடியின் இலை மற்றும் வேர்த் தண்டு இலைகளை சம அளவில் எடுத்துக் கொண்டு, சுத்தம் செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ளவும். மேற்கூறிய சூரணத்தினை கால தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, தேனில் குழைத்து தின்\சரி காலை, மதியம், இரவு என மூன்று வேளையாக தொடர்ச்சியாக முப்பது நாட்கள் சாப்பிட்டு வர சளி, இருமல், இளப்பு, ஆஸ்துமா காரணமாக ஏற்பட்ட நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

மருந்து உட்கொள்ளும் பொழுது நரம்புத் தளர்ச்சி நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

இளநீர், பீர்க்கங்காய், பழ வகைகள், புளித்த உணவுகள், நெய் இவைகளை மருந்து சாப்பிடும் நாட்கள் வரை தவிர்த்து விட வேண்டும். அதிகமான தண்ணீர், தாகம் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழிதல், சிறுநீர் மூலம் சர்க்கரைச் சத்து வெளியேறுதல் போன்ற காரணங்களினாலும் சில தாதுக்கள் சீர்கேடு அடைந்து நரம்புத் தளர்ச்சியினை ஏற்படுத்தும்.

இதற்கு நித்திய கல்யாணிப் பூ 10 எண்ணிக்கை எடுத்துக் கொண்டு அதனை சுத்தமான நீர் கால் லிட்டர் சேர்த்து கொண்டு பாதி அளவு வரும் வரை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். மேற்கூறிய கஷாய நீரினை உணவிற்குப் பிறகு தினசரி மூன்று வேளை என்று தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வரை அருந்தி வர நரம்புத் தளர்ச்சி மறைந்து விடும்.

அமுக்கராக் கிழங்கு அரைக் கிலோ, சீனி மூன்று கிராம், பால் 200 I.L., நெய் 100 I.L., சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம், அத்திரி, தாணிசம், பத்திரி, சிறுநாகப் பூ, திப்பிலி மூலம், அரத்தை இவைகள் வகைக்கு இரண்டு கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். தூதுவளை இலை 200 கிராம் எடுத்துக் கொள்ளவும்.

அமுக்கராக் கிழங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி இவைகளைத் தனித் தனியே இடித்துக் கொண்டு, மற்றவைகளை பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, இதனுடன் மற்ற வேர்களின் மேல் தோலையும் கலந்து சுத்தமான கல்லுரலில் இட்டு இடித்துத் தூள் செய்து வஸ்திர கஷாயம் செய்து கொள்ளவும். சூரணத்தைப் பாலில் கலந்து சர்க்கரை, நெய் கலந்து லேகியம் ஆகும் வரை கிண்டி எடுத்துக் கொள்ளவும்.

மேற்கூறிய லேகியத்தினை, தினசரி காலை, இரவு ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்துக் கொண்டு, தொடர்ச்சியாக 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர உட்சுரம், நரம்புத் தளர்ச்சி நோய்கள் நீங்கும்.

பா. முருகன்


Spread the love