உங்கள் நகங்கள் நெட்டையும், குட்டையுமாக ஒழுங்கற்ற வடிவில் இருக்கின்றனவா? அல்லது நீண்ட நகங்கள் வளரும் வரை காத்திருக்க உங்களுக்குப் பொறுமையில்லையா? நகங்கள் குறித்த உங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும், நீங்களே வியக்கக் கூடிய அளவிற்கு அருமையான விடை ஒன்று தற்போது கிடைத்திருக்கிறது.
எளிதாக கைவிரல்களில் பொருத்திக் கொள்ளத்தக்க வகையிலான “ செயற்கை நகங்கள்” தற்போது விற்பனைக்குக் வந்துள்ளன. இந்த நகங்களுக்கு தனிப்பட்ட பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படுவதில்லை. மேலும் இந்த நகங்களில் கண்ணைக்கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு வார்னீஷ் செய்யப்பட்டிருப்பதால், ஒவ்வொரு தடவையும், ஈரமான நெயில் பாலிஷ் ஏற்படுத்தும் பிசுபிசுப்பு, இழுவல்கள் போன்ற தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவைகளால் செய்யப்பட்ட இந்த செயற்கை நகங்களைப் பொருத்திக் கொள்வது கல்லூரிப் பெண்களிடையே தற்போது ஒரு பேஷனாக உள்ளது.
பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை நகங்களில் இருபுறமும் ஒட்டக்கூடியவாறு பசை இருப்பதனால் தேவையான நீளத்திற்கேற்ப, அடுத்தடுத்து, ஒன்றன்பின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டே போகலாம். இந்த செயற்கை நகங்களை பசையிலிட்ட பின்னர் வெளியே எடுத்து, இயல்பான நகத்தின் மீது பொருத்தும்போது மிகுந்த கவனமுடன் மெதுவாக வைக்க வேண்டும். ஒவ்வொரு நகமும், இயற்கையான நகத்தின் மீது ஒட்டிக் கொள்ள 2 நிமிட நேரம் எடுத்துக் கொள்கிறது.
இந்த செயற்கை நகங்களின் மோகம் முதன்முதலில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நாடேங்கிலும் விரைந்து வருகின்றது.
ஒளிவீசும் நகங்கள்
நன்கு வெட்டிச் சீராக்கப்பட்டுப் பளபளப்பூட்டப்பட்டிருக்கும் விரல் நகங்கள் அவ்விரலுக்கு உடையவரின் ஆழ்ந்த அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் நம்மில் பலர் நகங்கள் பற்றி எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. உடைந்த, சிதைந்த, உருமாறிய நகங்கள் அதற்குடையவர்கள் பற்றிச் சிறப்பான எண்ணங்களை உருவாக்குவதில்லை.
பொதுவாக நகங்கள் நமது உடல் நலத்தைக் காட்டுகின்ற கண்ணாடி போன்றவை. உடல் நலம் குன்றியிருப்பதை நகங்கள் ஒளிவு மறைவின்றிக் காட்டி விடும். ஊட்டச்சத்துக்களும், மணிச்சத்தும் நல்ல உணவும் நகங்களைப் பேணிப் பெரிதும் உதவும். அதோடு நில்லாது கைவிரல்களைக் கலை நயம் மிளிர ஒப்பனை செய்து வைத்துக் கொள்வதும் அவசியம். இதற்கெனப் பெரும் செலவு எதுவும் செய்ய வேண்டாம். அழகு நிலையங்களுக்குப் போகாமல் நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
இதற்கென சில உபகரணங்களே தேவை. சிறு அரம்/ கத்திரிக்கோல் / நகம் வெட்டி/ வெந்நீர் வைக்கச் சிறு கிண்ணம் (நகப்பாலீசு / பாலிசு நீக்கி) இவை இரண்டும் கட்டாயமில்லை, (அவரவர் விருப்பத்திற்கேற்ப) சிறு துவாலை , பஞ்சு
பழைய பாலீசு இருந்தால் பாலீசு நீக்கியைப் பயன்படுத்தி பஞ்சினால் சுத்தமாகத் துடைத்து விடுங்கள். கைகளை நன்றாகக் கழுவித் துடையுங்கள். நகம் சதைக்குள் மறைகின்ற இடத்தில் பழைய பாலீசின் சுவடு ஏதாகிலும் தெரிகிறதா என்று தோளைக் கீழ்நோக்கி இழுத்து ஈரப்பஞ்சினால் துடையுங்கள். நகத்தை வேண்டிய அளவு வெட்டிச் சீராகும்படி அரத்தினால் ராவிச் சரிசெய்யுங்கள். கிண்ணத்தில் வெந்நீர் நிரப்பி அதில் சிறிதளவு சோப்பைக் கரைத்து அதில் உங்கள் விரல்களை 10 நிமிட நேரம் அமிழ்த்தி வைத்திருந்து பின்னர் எடுத்துக் கழுவுங்கள். காய்ந்த துவாலையால் விரல்களை ஈரமின்றித் துடையுங்கள்.
நகமும் சதையும் சேருமிடத்தையும் நகங்களின் கீழும் ஆரஞ்சு ஸ்டிக்கை வைத்துச் சுத்தம் செய்யுங்கள். சிறிதளவு ஹாண்ட் லோஷனை விரல்களில் தேய்த்துச் சற்று நேரம் காயவிடுங்கள்.
நகப்பூச்சு வேண்டாமென்பவர்கள் அப்படியே விட்டு விடலாம். நகப்பாலீசு போட விரும்புபவர்கள் சிறிதளவு பஞ்சை எடுத்து நகங்களின் மேலுள்ள எண்ணெயைச் சுத்தமாகத் துடைத்து விடுங்கள். பாலீஷை எடுத்து முதலில் படுக்கை வசத்திலும், பின்னர் மேலிருந்து கீழும் தடவுங்கள். ஒருமுறை தடவி முடிந்ததும் சிறிது நேரம் காய விடுங்கள். நன்கு காய்ந்ததும் மறுமுறை தடவுங்கள். 15 நிமிட நேரம் காயவிடுங்கள். அதன் பின்பு நகத்திற்கு வெளியில் இருக்கும் வேண்டாத பாலீசைத் துடைத்துச் சுத்தம் செய்து விடுங்கள். பிறகு தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டு நகங்களில் தண்ணீர் கீழே விழுந்து ஓடுமாறு விரல்களைக் காட்டுங்கள்.
விரல் நகங்களுக்கு ஒப்பனை செய்ய ஏற்ற நேரம் எல்லாப் பணிகளையும் முடித்துப் படுக்கைக்குச் செல்லுகின்ற இரவு நேரமே. அவ்வாறின்றிக் கண்ட நேரத்திலும் அவசர அவசரமாக நகங்களுக்கு ஒப்பனை செய்வதால் சிறந்த பலனைப் பெற முடியாது. இதோ சில செய்யக் கூடியவையையும், செய்யக்கூடாதவையையும் கீழே தந்திருக்கிறோம்.
செய்யக்கூடியவை
1. ஓய்வு கிடைக்கும் போது ஓரிரு நாட்கள் உங்கள் நகங்களைப் பாலீஷ் இன்றி இருக்குமாறு செய்யுங்கள்.
2. ஒவ்வெரு முறை கை கழுவித் துடைத்ததும் சிறிதளவு ஹாண்ட் லோஷன் அல்லது ஏதாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தடவிக் கொள்ளுங்கள். இது கைகள் வறட்சியுறாமல் தடுக்கும்.
3. தோட்ட வேலை அல்லது கடினமான வேலைகள் செய்யும் போது கையுறை அணிந்து கொள்ளுங்கள்.
4. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றிரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை விரல் நகங்களின் மேல் விட்டுத் தடவுங்கள்.
5. உணவில் கால்ஷியமும், விட்டமின் கி யும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
6. நகம் வெட்டி, கத்தரிகோல் போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருங்கள்.
செய்யக்கூடாதவை
1. கூரிய ஆயுதங்களால் செய்ய வேண்டிய வேலைகளை நகத்தால் செய்ய முற்படாதீர்கள்.
2. நகங்கள் ஈரமாக இருக்கும் போது அரத்தினால் ராவாதீர்கள். நகங்கள் வடிவிழக்கக்கூடும்.
முருகன்