கொசுக்களின் எமன் நொச்சி, இன்றைய தலைமுறை மறந்த மூலிகை என்பதில் ஐயமில்லை. ராஜாளி பச்சிலை என்ற பெயரும் உண்டு. மேலும் இது ஒரு காயகல்ப மூலிகையாகும். சிறிய மர வகையை சேர்ந்த தாவரம். நொச்சியில் பல வகை இருந்தாலும், வெண்ணொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி என மூன்று ரகங்கள் உள்ளது. இதன் அறிவியல் பெயர் க்ஷிவீtமீஜ் ழிமீரீuஸீபீஷீ ஆகும். இது லெமிலேசி குடும்பத்தைச் சேர்ந்தது. 3 – கூட்டிலை உடையது.
கருநொச்சி அனைத்து இடங்களில் வேலிக்காகப் வளர்க்கப்பட்டு வருகிறது. அதிக மருத்துவ பயன்கள் கொண்டதால் சித்த வைத்தியங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கொல்லிமலைப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதன் இலை தண்டு முதலியவை கருப்பு நிறமாக இருக்கும்.
கருநொச்சியின் காட்டமான மணம் காரணமாக தானியங்களைத் தாக்கும் பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியங்கள் சேமிக்கும் இடங்களில் இதை பயன்படுத்துகிறார்கள். வேப்பிலையுடன் இதையும் கலந்து தானியத்தின் மீது போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.
நீர் நொச்சியானது நீர் நிலைகள் உள்ள இடங்களில் வளரக்கூடியது.
இனப்பெருக்க முறை
நன்கு முதிர்ந்த தண்டுப் பகுதி ஒரு விரல் பருமன் உள்ள செடியை வெட்டி வைத்து நடவு செய்யலாம். நர்சரியில் கன்று வாங்கியும் நடலாம். 20 – 30 நாட்களில் இதில் துளிர் வர ஆரம்பிக்கும். இளம் கன்றுகளை பெயர்த்து வைத்தும் வளர்க்கலாம்.
காய்ச்சல், சீதபேதி, உடல்வலி, தண்ணீர்தோஷம், தலைவலி, சைனஸ் போன்ற பிரச்கனைகளுக்கு இது ஒரு காயகல்ப மூலிகை.
வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி, நொச்சி இலைகளை இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
ஊரெல்லாம் டெங்கு என்று அமளி துமளிப்படுகிறது. இராணுவத்தாலேயே ஒழிக்கமுடியாத கலவரம் ஒன்று உண்டென்றால் அது கொசுக்கலவரம் தான். கொசுக்களால் ஏகப்பட்ட நோய்கள், காய்ச்சல்கள், வரிசை கட்டி வருகின்றன. மலேரியா, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல் போன்ற பல நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி நொச்சிச் செடிகளை அதிக அளவில் சென்னை முழுவதும் வளர்க்கப் போவதாக அறிவித்தது. அறிவியல் பூர்வமாக கொசுக்களை கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை.
தமிழர் போர்மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு, சங்ககால இலக்கியத்தில் நொச்சித்தினை என்ற ஒரு தினை உண்டு. நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையைத் தடுப்பார்கள்
வீடுகளில், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் போடும் நபர்கள் கற்பகத் தருவான நொச்சிச் செடி வளர்த்து கொசுக்களின் படையெடுப்பிலிருந்து தப்பலாம்.
விவசாயிகள் சிறிய அளவில் தங்கள் நிலங்களில் இதை பயிரிட்டு வந்தால் மூலிகை இலைகள் விற்பனை செய்யலாம். அதன் இலைகளைக் கொண்டு சாறெடுத்து இயற்கை பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.
நாம் மறந்துவிட்ட மூலிகையான நொச்சியை மறவாமல் நடுவோம்.
சந்திரசேகரன்.