மூலிகை டீ என்பது, தேயிலையால் தயாரிக்கப்படும் தேநீரிலிருந்து மாறுபட்டது. மருத்துவ குணமுள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. நன்மை மிகுந்த இந்த மூலிகை பானங்களை, நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். துளசி, புதினா, இஞ்சி, மல்லிகை போன்றவற்றை உபயோகித்து, ‘டீ‘ செய்யலாம். சில தயாரிக்கும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
துளசி, இஞ்சி டீ
ஒரு கப்பில் நசுக்கிய இஞ்சி துண்டுகள், துளசி இலைகள் இவற்றில் ஒரு டீஸ்பூன் எடுத்து, கப்பில் போடவும். இவை மேல் சூடான வெந்நீரை ஊற்றி, மூடி 5 நிமிடங்கள் வரை வைக்கவும். வடிகட்டி உபயோகிக்கவும்.
இஞ்சி டீ
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 4 கப்
இஞ்சி துண்டு – 2 அங்குலம்
தேன் – தேவைப்பட்டால்
செய்முறை
இஞ்சியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கொதிநிலை வந்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். பிறகு, மூடி சிறு தீயில் 15 – 30 நிமிடம் வைக்கவும். வடிகட்டி, தேவையானால் தேன், எலுமிச்சம் சாறு சேர்க்கலாம். சர்க்கரை கூடாது.
மூலிகை டீ தயாரிக்க பொது விதிகள்
தண்ணீர் புதிதாக இருக்க வேண்டும். அலுமினிய பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம்.தேவைக்கு அதிகமாக மூலிகைகளை உபயோகிக்க வேண்டாம்.
தேர்ந்தெடுக்கும் மூலிகைகள், இயற்கை உரங்களால் பயிராக்கப்பட்டு இருந்தால் நல்லது. மூலிகை இலைகளை கையாலோ, கத்தியாலோ சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.
ஒன்று அல்லது இரண்டு தேயிலைக் கரண்டி மூலிகையை ஒரு கப்பில் போட்டு புதிதாக காய்ச்சின சூடான தண்ணீரை ஊற்றவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து நிதானமாக அருந்தவும்.
கீழ்கண்ட மூலிகைகள் ‘டீ‘ தயாரிக்க பயன்படும்
ஏலக்காய் – வாய்வு, வயிற்று தொல்லைகளுக்கு நல்லது. வாந்தி, ஜலதோஷம் இவற்றுக்கு உகந்தது.
லவங்கப்பட்டை – ரத்தஓட்டம், ஜீரணம், தொற்று நோய்கள் இவற்றுக்கு மருந்து. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கக்கூடாது.
சோம்பு – ஜீரண சக்திக்கு நல்லது. தாய்ப்பால் பெருக உதவும். குழந்தைகளின் வயிற்று வலியை போக்கும்.
மல்லிகை – மல்லிகை பூக்களுடன், தேயிலை (பச்சை தேயிலை) கலந்து செய்யும் இந்த பானம் ஜீரணத்திற்கு நல்லது. கொலஸ்ட்ராலை குறைக்கும்.
பூண்டு – சிறு துண்டுகளாக வெட்டி உபயோகிக்கவும். தொற்று வியாதிகளை தடுக்கும்.
புதினா – புத்துணர்ச்சி தருவது, வயிற்று வலியை போக்கும்.
சாமோமில் – இந்த மூலிகை செடி ஒரு வினோதமான குணமுள்ளது. இதன் அருகில் இருக்கும் எல்லா செடிகளும், இதனால் மிக நன்றாக வளரும். இதனால் இதற்கு “செடிகளின் வைத்தியன்” என்று பெயர். பொதுவாக ஐரோப்பாவில் கிடைக்கும் இந்த மூலிகை செடி காஷ்மீரிலும் விளைவிக்கப்படுகிறது. இதன் டீ கொடுக்கும் புத்துணர்ச்சி சாலச் சிறந்தது. தூக்கமின்மை, மனஅமைதி இல்லாதிருப்பது வலி, டென்ஷன் இவற்றுக்கு நல்ல மருந்து.
மேரிகோல்டு பூ – இதன் ‘டீ‘ உடல் விஷயங்களை போக்கும். வைரஸ் பேக்டீரியா கிருமிகளின் எதிரி.
தைம் – இந்த மூலிகை டீ காது, மூக்கு, தொண்டை வியாதிகளுக்கு சிறந்தது. குழந்தைகளின் இருமலை போக்கும்.
மூலிகை ‘டீ‘ உலக அளவில் தொன்று தொட்டாக, பல வியாதிகளை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. மேலை நாடுகளிலும் அதிலும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் மூலிகை ‘டீ‘ பிரசித்தம்.
மூலிகை ‘டீ‘ யின் நன்மைகள்
ஜீரண சக்தி அதிகரிக்கும்.
நல்ல தூக்கம் வரும்.
பித்தவாந்தி, தலைசுற்றல் இவைகளை இஞ்சி டீ போக்கும்.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்.
மன அமைதி உண்டாகும்.
எனவே, நீங்களும் மூலிகை டீ வகைகளை செய்து சுவைத்து பாருங்கள்.
டீ மசாலா தூள்
மூலிகை டீக்களிலேயே மிகவும் எளிமையானதும் பயனுள்ளதும் மசாலா டீ வகையாகும். இந்த டீ மசாலா தூளை தயார் செய்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு டீ தயாரிக்கும் பொழுது 1/4 – 1/2 டீஸ்பூன் அளவை டீத்தூளுடன் சேர்த்து டீ தயாரிக்க சுறு சுறுப்பும், உற்சாகமும், புத்துணர்ச்சியும் பொங்கும்.
டீ மசாலா தூள்
தேவையான பொருட்கள்
சுக்கு – 1 கப்
ஏலக்காய் – 1/2 கப்
மிளகு – 1 டே.ஸ்பூன்
கிராம்பு – 6
பட்டை – 2 இன்ச்
செய்முறை
எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.