நாம் அனைவரும் வரும்போதே இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டுதான் வருகிறோம். இயற்கை அன்னை நமக்கெல்லாம் கொடுத்த மிகப் பெரிய வரம் காய்கறிகளும் பழங்களும். உணவே மருந்து; மருந்தே உணவு என்பதுதான் இயற்கையின் விதி. இயற்கை மருத்துவமும் அதைத் சொல்கிறது. இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டே.. காய்கறி, பழங்களைக் கொண்டே நமக்கு வரும் எல்லா நோய்களில் இருந்தும், மருந்து, மாத்திரை இல்லாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நோய் வராமலும் தடுக்கலாம்.
இயற்கை மருத்துவத்தை மருந்தில்லா மருத்துவம் எனலாம். காற்று, மண், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை சக்திகளும், சமைக்காத உயிருள்ள இயற்கை உணவுகளான தேங்காய், பழங்கள், காய்கறிகள், கீரைகள், இலைகள், இலைகள் ஆகியவையே மருந்தாகப் பயன்படுகின்றன. ஏற்கனவே சொன்னதுபோல் உணவே மருந்து; மருந்தே உணவு என்பதுதான் இயற்கை மருத்துவத்தின் தத்துவம். இது ஒரு செலவில்லாத, பாதுகாப்பான, முழுவதும் குணம் பெறக்கூடிய மருத்துவம். இதற்காக நீங்கள் மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் மருத்துவர்.
அசைவத்துக்கு மட்டுமே சொந்தக்காரர்களான மேலை நாட்டினர் பலர் இயற்கை மருத்துவத்துக்கு மாறிவிட்டனர். உலகில் விரைவாக பரவி வருகிறது இயற்கை மருத்துவம். இந்தியாவில் ஐதராபாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் இயற்கை மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
சமைக்காத இலைகள், காய்கறிகள், பழங்கள், தேங்காய் ஆகியவையே இயற்கை மருத்துவத்தின் உயிர்நாடி. இவை எல்லா நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்துகளாகும். காரட், ஆப்பிள், தேங்காய் போன்ற எல்லா இயற்கை உணவுகளும் நாம் சாப்பிடும் வரை உயிரோடுதான் இருக்கின்றன. அவற்றில் நீர், மண், காற்று, சூரிய வெளிச்சம் நிறைந்துள்ளன.
ஒரு வெங்காயத்தை வெட்டினால், நம் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு நீர் வடிகிறது. அதே வெங்காயத்தை வேக வைத்த பின் வெட்டினால் கண் எரிச்சல் உண்டாகாது. ஏனெனில் அந்த வெங்காயத்தில் பஞ்ச பூதங்களின் சக்தி அழிந்துவிடுகின்றது. பச்சை வெங்காயத்தில் கண் எரிச்சலை உண்டாக்கும் சக்தி இருப்பது போல் ஒவ்வொரு இயற்கை உணவிலும் பல சக்திகள் இருக்கின்றன. அவைகள்தாம் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. காய்கறி, பழங்களில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது (நீர்ச்சத்து). இந்த நீரால் மட்டுமே உடலில் உள்ள நோய்க் கிருமிகளை கரைத்து உடம்பை விட்டு வெளியேற்ற முடியும்.
இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு. அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடுகிறது. மூன்று வேளையும் இயற்கை உணவு மிக நல்லது. மூன்று வேளையும் இயற்கை உணவா.. ‘உவ்வே’ என்று நினைப்பவர்கள் முதலில் ஒரு வேளை இயற்கை உணவை பயன்படுத்திப் பார்த்து அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.