கூந்தல் கருமை பெற (ஹேர் – டை)

Spread the love

நம்மில் பலர் இயற்கையாகவே 50 வயதிற்கு பின்னும் கருமையான கேசத்தைப் பெற்று இருக்கின்றோம். ஆனாலும் பலர் 30 வயதைக் கடக்கும் முன்னரே தலை நரைத்து பஞ்சுத் தலையாக காட்சியளிக்கின்றனர். இதற்கு உடலில் உள்ள பித்த நாடி உயர்வும், உடலின் உஷ்ண நிலையுமே காரணம். பலருக்கு தங்கள் தாய், தந்தையரைப் போல் கேசம், இளவயதிலேயே நரைத்து விடுகின்றது.

இவர்களது சிந்தனையும், செயல்பாடும் இளைஞர்களைப் போல இருப்பினும், அவர்களது தோற்றம் வயது முதிர்ச்சியுடையதாக உள்ளது. இவர்கள் அனைவரும் இயற்கையான வழியில் தங்கள் கேசத்தை கருமையானதாக ஆக்கிக் கொள்ள இதோ சில யோசனைகள்.

இயற்கையான டை தயாரித்து, உபயோகிப்பது பாதுகாப்பானது; பக்க விளைவுகளற்றது. கெமிக்கல் டைகளை உபயோகிக்கும் பொழுது சரும ஒவ்வாமை, அரிப்பு, புண் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கும் பிற்காலத்தில் அதனால் புற்றுநோய் எனும் கேன்சர் வருவதற்கும் வழி வகுத்து விடுகின்றது.

டைகளில் பல விதமுண்டு. கருப்பு டை போலவே, பிற கலர்களிலும் டை கிடைக்கின்றது. எந்த கலர் வேண்டுமோ அதனை உபயோகிக்கலாம். டை செய்யும் முன்பு நாம் செய்ய வேண்டிய சில வழி முறைகளை கடை பிடித்தால் நன்றாக இருக்கும்.

தலை முடியை நன்றாக சுத்தம் செய்து, பகுதி பகுதியாக பிரித்து டையை உபயோகிக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பின்னரே முடியை சுத்தம் செய்ய வேண்டும்.

நன்றாக டையை அடிப்பதற்கு, பின் பகுதியில் இருந்து மற்றவர்கள் உதவியுடன் அடிக்க வேண்டும். அதே போல, பின் பகுதியிலிருந்து சுத்தம் செய்ய வேண்டும் பொதுவாக எந்த டையாக இருந்தாலும் ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும்.

மூலிகை டை

முடிக்கு தேவையான அளவு மெகந்தி தூள் எடுத்து (8 ஸ்பூன்) அதில் 4 சொட்டு எலுமிச்சம் பழச்சாறும் 6 சொட்டு யூகலிப்டஸ் ஆயிலும் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, ஐஸ்கிரீம் பதத்தில் குழம்பி எடுத்து தலையில் தடவ வேண்டும். 1/2 மணி அல்லது 1 மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் சிவப்பு நிறம் கொண்ட முடிகள் கிடைக்கும்.

மற்றொரு முறை

மருதோன்றி இலை – 150 கிராம்

கரிசிலாங்கண்ணி இலை – 100 கிராம்

யூகலிப்டஸ் ஆயில் – 4 சொட்டு

செம்பருத்திப் பூ – 6 (புதிய பூக்கள்)

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, மை போல ஆக்கி, அதனை தலை முடியில் தடவிக் கொள்ள வேண்டும். பின்பு 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து சுத்தம் செய்துவிட, முடி நல்ல கருமை அடையும். 40-50 வயதை அடைந்தவர்களுக்கு முடி நரைப்பது இயற்கையே. இதற்காக அடிக்கடி ஏதாவது ஒரு டையையோ அல்லது தைலத்தையோ மாற்றி மாற்றி உபயோகிப்பது மேலும் கெடுதலை உண்டாக்கும்.

கெமிக்கல் டை உபயோகிப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

· டை உபயோகிக்கும் பொழுது, முடி எண்ணெய் பிசுக்கில்லாமல் இருக்க வேண்டும்.

· அடிக்கடி ஹேர் டையின் பிராண்டை மாற்றக் கூடாது.

· டை உபயோகிக்கும் பொழுது கண்களில் படாமல் இருக்க வேண்டும்.

· டை உபயோகிக்க கையுறை அணிய வேண்டும்.

· நாமே டை போட்டுக் கொண்டால் முகத்தில் பேஷியல் பேஸ்ட் மாஸ்க் போட்டு கொண்டு பின்பு காய்ந்தவுடன் டை போடவும்.

· தரமான கம்பெனி தயாரிப்புகளையே உபயோகிக்க வேண்டும்.

· மை போல அல்லது ஐஸ்கிரீம் பதத்தில் கலக்கிக் கொண்டு டையை உபயோகிக்க வேண்டும்.

· அதிகமான நீர் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும்.

· பின்னர் தரமான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். எத்தகைய தலை முடியாக இருப்பினும் நன்றாக பராமரித்து வர நல்ல ஆரோக்கியமான கார் கூந்தல் பெறலாம்.


Spread the love