உலர்ந்த சருமம்:
உலர்ந்த சருமத்திற்கு பயத்த மாவு, கோதுமைத் தவிடு, பொடித்த பாதாம் பருப்பு, மஞ்சள், வெந்தயம், துளசி, ரோஜா இதழ்கள் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு கற்றாழைச் சாறு அல்லது பாலில் கலந்து களிம்பாக்கி தடவிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் செறிந்த சருமம்:
எண்ணெய் கலந்த சருமத்திற்கு பார்லி மாவு, அரிசி தவிடு, நெல்லி முள்ளி, தனியா, மஞ்சிஷ்டா, வேம்பு, சந்தனம் இவற்றின் பொடியை எலுமிச்சை சாறு அல்லது கற்றாழைச் சாறு கலந்து தடவிக் கொள்ள வேண்டும்.
நார்மல் சருமத்திற்கு:
ஓட்ஸ் மாவு, துளசி ( சிறிதளவு ) சந்தனப் பொடி, பொடித்த ரோஜா இதழ்கள் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு பால் அல்லது சுத்தமான நீரில் கலந்து களிம்பாக்கி தடவிக் கொள்ள வேண்டும்.
முதிர்ந்த சருமத்திற்கு:
பார்லி அல்லது அரிசி மாவு, மஞ்சள், அஸ்வகந்தா, அதிமதுரம், துளசி இவற்றை எடுத்துக் கொண்டு சிறிதளவு தேனுடன், பால் அல்லது கற்றாழைச் சாற்றில் கலந்து உபயோகிக்கவும்.
குற்றம் குறையுள்ள சருமத்திற்கு:
ஓட்ஸ மாவு, முல்தானி மட்டி, அஸ்வகந்தா,தனியா, சீரகம், வெந்தயம், இஞ்சி, வேம்பு, மஞ்சிஷ்டா, மஞ்சள் பொடி இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு தயிரில் கலந்து உபயோகிக்கவும்.
பொதுவான சிறந்த முகத் தேய்ப்புகள்:
நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கக் கூடிய சில பொருட்கள் உணவு தயாரிப்புக்கு மட்டுமல்லாமல் முக அழகுக்கும் சிறந்த தேய்ப்புகளாக பயன்படுகிறது. அவைகளில் உங்களுக்காக ஒரு சில டிப்ஸ்கள்:
1. உலர்ந்த எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சுத் தோலை பொடி செய்து கொள்ளவும். பால், தேன், அல்லது எலுமிச்சைச் சாறுடன் மேற்கூறிய பொடியினை கலந்து சருமத்தில் ( உடலில் அனைத்துப் பாகங்களின் சருமங்களிலும் ) தேய்த்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ளவும். வாரம் இரு முறை செய்து வரவும்.
2. பார்லி மாவு மற்றும் பாலுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கெட்டியாக களிம்பு தயார் செய்து கொண்டு நேரிடையாக முகம், கழுத்து, கைகளில் தடவிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
3. வேப்ப இலைகளை நீரில் போட்டு கொதிக்க விடவும். முகம், கழுத்து, கைகள் இவற்றை கழுவ இந்த இந்த நீரை பயன்படுத்தவும்.
4. கொதிக்க வைத்த பாலுடன், பொடித்த வெந்தய களிம்பு தயார் செய்து சேர்த்துக் கொண்டு முகத்திலும் கைகளிலும் தடவி வர சருமம் மிருதுவாகும்.
5. மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதே அளவு பாலோடு சந்தனப் பொடி, கடலை மாவு இவற்றைக் கலந்து களிம்பாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.
6. தாமரைப் பூ, அல்லிப் பூ, நாகப்பூ இவற்றைச் சேகரித்துக் கொண்டு நிழலில் காய வைத்து, உலர்ந்த பின்பு பொடி செய்து கொள்ளவும். மேற்கூறிய கலவைப் பொடியுடன் தேன் மற்றும் நெய்யினை சேர்த்து கலந்து சருமத்தில் தேய்த்துக் கொள்ளவும். ஓரிரு மணி நேரம் வைத்திருந்து கழுவிக் கொள்ள சருமம் மிளிரும்.
7. கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவிக் கொள்ளவும். இரவில் படுக்கும் முன் கழுவிக் கொள்ளவும்.
8. சிவப்பு சந்தன மரம், மஞ்சிஷ்டா, லோத்ரா மரப்பட்டை, கோஷ்டம், ஆலமரப்பட்டை இவற்றையெல்லாம் தண்ணீர் கலந்து களிம்பாக செய்து கொண்டு உபயோகித்து வர சருமம் அழகு பெறும்.