இயற்கையான முறையில் முகத்திற்கு பேஸ் மாஸ்க்

Spread the love

சந்தன பேஸ் பேக்  

தேவையான பொருட்கள்

சந்தனம் -ஒரு கோப்பை

மஞ்சள் -50 கிராம்

கெட்டிப்பால் -அரை லிட்டர்

கற்றாழை ஜெல் -சிறிதளவு

வேப்பிலை -இளம் இலைகளாக 10 இலைகள்

கடலை மாவு -200 கிராம்

செய்முறை

கடலை மாவையும், வேப்பிலைக் கெட்டிப் பாலையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். கமகமவென்று மண்ம் வீசும் சந்தனப் பொடியை, வேப்பிலைப் பொடியின் பங்கில் மூன்று பங்கு எடுத்து, இரண்டையும் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை, கடலை மாவு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சளைச் சேர்த்துக் கொள்ளவும். சிநிது நேரம் கழித்து கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்து, முகத்தில் பூசிய பின்னர், ஃபேஸ் பேக்களை முகத்தில் தடவிக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து மிதமான வெப்பமுள்ள நீரில் முகம் கழுவிக் கொள்ள, முகம் பொலிவு பெறும்.

வடிகஞ்சி பேஸ் மாஸ்க்

குக்கர் தவிர்த்து, ஈயப்பாத்திரம், மண் பானை போன்றவைகளில் சோறு பொங்கும் பொழுது இறுதியில் கிடைக்கும் வடிகஞ்சியானது சருமத்தையும், தலை முடியையும் மிருதுவாக்குகிறது என்று தெரியுமா உங்களுக்கு? முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் போன்ற பல சருமப் பிரச்சனைகள் வடிகஞ்சி மூலம் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் குணப்படுத்துகின்றன.

தேவையான பொருட்கள்

மஞ்சள் -ஒருதேக்கரண்டி

கடலை மாவு -இரண்டு தேக்கரண்டி

செய்முறை

மஞ்சள், கடலை மாவு இரண்டையும் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, போதுமான அளவு வடிகஞ்சி சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். மேற்கூறிய கலவையை பேஸ் மாஸ்காக வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம். ஓரிரு மாதங்கள் இவ்வாறு செய்து வர, தோல் மிருதுத் தன்மையுடனும், பளபளப்பும் பெறுகின்றது.

தேங்காய்ப் பால் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் தானியம் சொர சொரப்பாக அரைத்தது.

தேவையான அளவு தேங்காய்ப் பால்

செய்முறை

சொர சொரப்பாக அரைத்த ஓட்ஸ் தானியத்துடன் தேங்காய்ப் பால் கலந்து கொள்ளவும். மேற்கூறிய கலவையை முகத்தில் பூசி, சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். மேற்கூறிய தேங்காய்ப் பால் பேஸ் மாஸ்க் எரிகின்ற சருமத்திற்குக் குளிர்ச்சி தரும்.

மேலும் சில டிப்ஸ்கள்

பப்பாளிப் பாலை முகத்தில் தடவி வர முகத்தில் சுருக்கங்கள் குறையும். பளிச்சென முகம் மாறும்.

பெண்கள் தங்கள் முகத்திற்கு கவர்ச்சி கிடைக்க, தினசரி குளிப்பதற்கு முன்பு எலுமிச்சைச் சாறுடன் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து முகம், கை, கால், பாதம், கழுத்து முதலிய பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர, சருமம் ஆரோக்கியமாக, மிருதுவாக அமையும்.

பசும் பாலில் கசகசா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஊற வைத்து காலையில் அதனை அரைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து வர முகத்திற்கு சிகப்பழகு கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் சில துளிகள் எடுத்துக் கொண்டு, முட்டையின் மஞ்சள் கரு கலந்து முகத்தில் மிருதுவாகத் தடவி, 15 நிமிடம் உலர்ந்த பின்பு குளித்து வர முகச் சருமம் பட்டுப் போல் மென்மையாக அமையும்.

தினசரி குளிப்பதற்கு முன்பு எலுமிச்சைப் பழத் தோலின் உள் பகுதியை சதையையும் கன்னம் மற்றும் உடல் பகுதிகளில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடலில், சருமத்தில் பளபளப்புத் தோன்றும்.

பாதாம் பருப்பு பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு -3

ஓட்ஸ் பவுடர் -லுதேக்கரண்டி

முட்டை மஞ்சள் கரு -அரை தேக்கரண்டி

தேன் -நான்கு துளிகள்

செய்முறை

பாதாம்  பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கிய பின் அரைத்து அதனுடன் ஓட்ஸ் பவுடர், முட்டை மஞ்சள் கரு, தேன் அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து கலவையாக்கிக் கொள்ளவும். சருமம் மேலும் வறண்டதாக உணர்ந்தால், சிறிதளவு பாலாடை சேர்த்து நன்றாக கலந்த பின் மேற்கூறிய கிரீமை முகம் மற்றும் கழுத்தில் பூசிக்கொள்ளவும்.

15 நிமிடங்கள் கழித்து உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு தடவை பூசிக்கொள்ளவும். அதன் பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிக்கொள்ளவும். மேற்கூறிய பாதாம் பருப்பு பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி வர, சருமம் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இன்றி அழகாகவும் தோற்றமளிக்கும்.

பால் பவுடர் பேஸ் பேக்

ஒரு கிண்ணத்தில் பால் பவுடர் 2 மேஜைக் கரண்டியும், தேன் 2 மேஜைக் கரண்டியும் எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். நன்றாக கலந்த பின் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளவும். சருமத்திற்கு ஈரத் தன்மை தரும் மாய்சுரைசராக பயன்படுகிறது. பால் பவுடரில் தேன் கலந்து, எலுமிச்சை சாறையும் கலக்கிக் கொண்டு பசைப் பதமாக கொண்டு வரவும். 20 நிமிடங்கள் வரை மேற்கூறிய பசையை காய்ந்த பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love