காபி, தேநீர் குடிக்காவிட்டால் தலைவலி வந்து விடுகிறதென்றும், தங்களால் வேலை செய்ய முடியாதென்றும் பலர் கூறக் கேட்கிறோம். இதில் ஓரளவு உண்மை இருக்கத் தான் செய்கிறது.காபி, டீ போன்றவற்றில் மூளைக்குக் கிளர்ச்சியையும், நரம்புகளுக்குத் தூண்டுதலையும் தருகின்ற சில வேதிப்பொருள்கள் உள்ளன. இவ்வகைப் பொருள்களின் தாக்கத்திற்கு ஆட்பட்டவர்கள் மேலே கண்டவாறு துயருறுதல் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியதே.
இது தவிர இன்னும் பலர் கொக்கோ கலந்த பானங்களையும் பருகுகிறார்கள். இவ்வகைப் பானங்களில் காணப்படும் ஜீனியும், சத்துப் பொருள்களும், கொக்கோவும், பாலும் குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரது தேவைக்கு ஏற்ப இருந்த போதிலும், பலரும் இப்பானங்களை மேலகதிகமான உணவு (Excess Food) என்னும் அளவிலேயே பயன்படுத்துகின்றனர். இதனால் உடலில் கொழுப்புச் சேருகிறது.உடல் எடை கூடுகிறது. எனவே சிறிது முயற்சி செய்து இப்பழக்கங்களை மாற்ற முயல வேண்டும். தேவையில்லாத போது பானங்களோ, சுவை நீரோ பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.இயலாது போனால் உடலுக்கு இன்னல் தராத இயற்கைப் பொடிகளைக் கொண்டு சுவை நீர் உண்டாக்கி அருந்தலாம்.
பண்டைய நாட்களில் சுக்கு, புளி, கருப்பட்டி, ஏலம் சேர்த்துக் கரைத்த பானகம் எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட இன்சுவை நீர் என்று அறிகிறோம். அதுபோல் தற்போது சுக்கு, மல்லி, துளசி போன்றவற்றைப் பொடி செய்து சுவை நீர் தயாரிக்க முடியும்.நாவல் கொட்டையைக் காய வைத்து வறுத்து இடித்து ஒரு வகைக் குடிநீர் தூள் தயாரிக்க இயலும். இவற்றைப் பயன்படுத்தி டிகாஷன் எடுத்து அதைப் பாலுடன் (முடிந்தால் இயற்கைப் பாலுடன்) கலந்து குடிக்க நன்மைகள் பல ஏற்படும்.
இதே போல, ஆவாரம் பூ, தாமரை இதழ்கள், ரோஜா இதழ்கள் போன்றவற்றைச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பின்னர் பொடியாக இடித்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.விரும்பிய பூவிதழ் பொடியைக் கொண்டு டிகாஷன் எடுத்து சுவைநீர் தயாரித்துக் கொள்ளலாம்.ஆவாரம் பூ குடிநீர், கனிமச்சத்துக்களும், கரோட்டினும் உள்ளதாகக் கருதப்படுகிறது.
கி. ராஜகோபாலன்