எல்லோரும் அழகாக இருக்கலாம்

Spread the love

இயற்கை எல்லோரையும் ஒன்று போல் பாவித்து நடத்துவதில்லை. சிலரிடம் மட்டும் பரிவோடு நடந்து கொள்ளும் அது பலரிடம் கருணையின்றி நடந்து கொள்கிறது. மனிதர்களிடையே மட்டுமன்றி எல்லாவித உயிரினங்களிடமும் இது போன்ற ஏற்றத் தாழ்வினை இயற்கை உருவாக்குகிறது. குறிப்பாக அழகு, வடிவு என்று நாம் பேசுகின்ற போது நம்மில் சிலரிடம் மட்டும் இயற்கை மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டிருப்பதை நடைமுறை வாழ்வில் நாம் காண்கிறோம்.

அழகு என்ற சொல்லை ஆராயப் புகு முன்னர் முக அழகு ஒன்று மட்டுமே அழகு என்று கருதப்படுவதில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். உயரம், எடை, தோற்றப் பொலிவு, பாவனை என்பன போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு சொல்லே அழகு என்பதாகும்.

பெண்களைப் பொறுத்தவரை குரூபி என்று கூறத் தக்கவர்கள் எவரும் இவ்வுலகில் இல்லை. அழகானவர்கள், சாதாரணமானவர்கள் என்று இரு வகையினரே உண்டு.

சிலருடைய அழகு வெளிப்படையாகத் தெரிகின்ற போது தாங்கள் அழகானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால் பலரது அழகு மறைந்து கிடக்கின்ற போது அவர்கள் தங்களின் அழகு பற்றிய சிந்தனையே இன்றித் தங்களது அழகை மேம்படுத்தவும் மறந்து இருந்து விடுகிறார்கள். முயன்றால் தன்னால் அழகாகத் தோற்றம் தர இயலும் என்ற அடிப்படை உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அழகற்ற, பொலிவற்ற உங்கள் தோற்றத்தை, இயல்பான தோற்றமென்று ஒரு போதும் ஒப்புக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ செய்யாதீர்கள். அழகு என்பது குறிப்பிட்ட எந்த ஒருவரது குடும்பச் சொத்தும் அல்ல. இப்போது இருப்பதை விட மேலும் சிறிதளவாகிலும் மேம்படுத்த முடியாத பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. எனவே ஒப்பனையின் மூலம் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த உறுதி கொள்ளுங்கள்.

உங்கள் உருவம், தோற்றம் பற்றி உங்களது ஆழ்மனதில் என்ன உணர்வுகளைக் கொண்டிருக்கிறீர்கள்? பரிச்சயமில்லாத ஒருவர் உங்களைப் பரிசோதிப்பது போல் உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்.

உங்கள் முகம், உங்கள் உடல், உங்கள் தோற்றம், உங்கள் உணர்வுகள், உங்கள் பழக்கமுறை ஆகியவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பாருங்கள். குறைகளையும், நிறைகளையும் மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இயலாவிட்டால் ஒரு கையேட்டில் குறித்து வையுங்கள்.

ஒருவர் தமது உடலைப் பற்றியோ, தோற்றத்தைப் பற்றியோ அக்கரையின்றி இருந்தால் கால ஓட்டத்தில் வருடங்கள் ஓடி மறையும் போது கொஞ்ச நஞ்சமிருந்த தங்கள் முகப் பொலிவையும் தோற்றத்தையும் இழக்க நேரிடும்.

                                                                    “யௌவனம் காத்தல் செய்

                                                                      ரூபம் செம்மை செய்.”

என்ற பாரதியின் புதிய ஆத்தி சூடியை நினைவில் கொண்டு செயல்பட்டால் எல்லோராலும் எழில் மிக்கவர்களாகத் தோன்ற முடியும்.

உடல் தோற்றத்தில் கருத்தின்மையும் ஒப்பனை முறைகளில் ஆர்வமின்மையும் பல அழகிய இளம் பெண்களைக் கூட அழகற்றவர்களாகத் தோற்றம் தரச் செய்து விடுகிறது. அந்தக் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

ஒப்பனை கலைத் திறனும் (Make-up techniques) ஒப்பனைப் பொருட்களும் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று வளர்ந்துள்ளன. பல நூற்றுக்கணக்கான சாதனங்கள் பல நூறு பெயர்களில் விற்கப்படுகின்றன. எதை வாங்குவது எதை விடுவது என்று குழம்பிப் போகின்ற அளவிற்கு அழகு சாதனப் பொருட்கள் இன்று சந்தைப் படுத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் பார்த்து நீங்கள் குழம்பிப் போகத் தேவையில்லை. எல்லாவற்றையும் வாங்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.

ஒப்பனைக் கலைக்கு அவசியத் தேவையெனக் கருதப்படுகின்ற சாதனங்களை மட்டும் வாங்கினால் போதும்.

பொதுவாக உங்களது தோற்றம் கவர்ச்சிகரமாகவும் முக மேக்-அப் சிறப்பாகவும் அமைவதற்கு வேண்டிய எல்லா அடிப்படைச் சாதனங்களையும் வைத்திருப்பது அவசியம். பெரும் பொருள் செலவு செய்து இவைகளை வாங்க வேண்டுமென்பதில்லை. என்றாலும் இயன்ற வரை தரமான உடல் நலத்திற்குக் கேடு செய்யாத சாதனங்களாகப் பார்த்து வாங்குவது அவசியம்.

இச்சாதனங்கள் அடிப்படைச் சாதனங்கள் (Basic equipments), முக மேக்-அப் சாதனங்கள் (Face make-up) என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பட்டியலில் குறிப்பிட்டுள்ளவைகளில் ஏற்கனவே உங்களிடம் உள்ளவைகளைத் தவிர்த்து மற்றவைகளை மட்டும் வாங்கினால் போதும்.


Spread the love
error: Content is protected !!