நந்தியா வட்டம் பசுமையான, ஜோடிகளாக பிரியும் இலைகளுள்ள பெரும் செடி. சிறுமரம் என்றும் சொல்லாம். ஆறிலிருந்து பத்தடி உயரம் வளரும். இதன் தண்டு முடி, முடிச்சுகள் இல்லாதது. வெட்டினால் மரப்பால் சுரக்கும். பளபளப்பான பச்சைநிற இலைகள் நீள்வட்ட (முட்டை) வடிவுள்ளவை. பூக்கள் பால்போல் வெண்மையானவை, கொத்து கொத்தாக மரக்கிளைகளின் பிரிவுகள் இருக்கும். சிறிது நறுமணத்துடன், கிட்டத்தட்ட வருடம் முழுவதும் பூக்கும். ஐந்து புல்லி வட்டங்கள் (Calyx, Sepal), முட்டைவடிவில் அமைந்திருக்கும். பூக்கள் மெல்லிய நீட்ட காம்புகளில், 5 இதழ்களை கொண்டிருக்கும். இதழ்கள் மின்விசிறி போல் தோற்றமளிக்கும். அழகிற்காகவே நந்திய வட்டம், துளசி, செம்பருத்தி, பாரிஜாதம் போல் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. பூக்கள் ஒற்றை அல்லது இரட்டையாக இருக்கும். ஒற்றடுக்கு பூவே சிறந்தது. நந்தியாவட்டை செடித்துண்டுகளாக நட்டு, பயிரிடப்படுகிறது. நல்ல செழிப்பான மண்ணும், முதல் சில நாட்களுக்கு அதிக தண்ணீரும் தேவைப்படும்.
தாவர இயல் பெயர் – Tabernae montana divaricata.
Syn : Ervatamia coronaria
Syn : Ervatamia divaricata.
குடும்பம் : Apocynaceae
சமஸ்கிருதம் : நந்தியா வர்த்தா
இந்தி : சாந்தினி, டாக்கர்
ஆங்கிலம் : East Indian Rose – bay, ceylon Jasmine, crepe Jasmine Moon Beam, wax flower, Butterfly gardenia etc.
பயன்படும் பாகங்கள்: மரப்பால், பூ, வேர்.
செடி, வேர்களில் படிக மற்றும் கார்பொருட்களான Tabernaemontanine, Coronarine உள்ளன.
நந்தியா வட்டத்தின் பயன்கள்:
முக்கிய பயன் – கண் நோய்களை போக்கும்: கண்களுக்கு நல்லது.
பூவின் சாற்றை தனியாகவோ, எண்ணை கலந்தோ கண்களில் விட்டால், தூசி, சூடு இவற்றால் ஏற்பட்ட கண்ணெரிச்சல் நீங்கும். பூக்கள் குளிர்ச்சி தரும் குணமுடையவை. நறுமணம் உள்ளவை. சரும நோய்களுக்கும் மருந்தாக பூக்கள் பயன்படும்.
மரப்பால்
மரப்பாலில் எண்ணை விட்டு நன்றாக கலந்து, நெற்றியில் தேய்த்தால் கண்வலி போகும். மரப்பால் குளிர்ச்சியானது. புண்களை ஆற்றும். வெட்டுக் காயங்களில் மரப்பால் பூசினால் சீழ் பிடிக்காது. விரைவில் புண் ஆறும்.
வேர்
வேர், வலி நிவாரணி. சிறிது நீர்விட்டு அரைத்து உள்ளுக்கு கொடுத்தால், வயிற்றுப் பூச்சிகள் அழியும். கை, கால் வலி, மூட்டு வலி இவற்றை போக்கும் மருந்தாக வேர் உபயோகப்படுகிறது. வேரை வாயிலிட்டு மென்றால் பல் வலி போகும். வேருடன் எலுமிச்சை சாறு சேர்த்து தயாரித்த நீரை கண்களில் விட, கண் நோய்கள் குணமாகும்.
நந்தியா வட்டம் இலைகளும், மரப்பட்டை மற்றும் பூக்களும், சரும நோய்களை போக்கும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.