நல்வேளை பயன்கள்

Spread the love

நலத்தின் நல் வேளை

நல் வேளை செடியானது தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் சாலையோரங்கள் மற்றும் தரிசு நிலங்களில் கொத்தாக வளர்கின்றது. இது ஆப்பிரிக்கா, காங்கோவில் அதிகளவில் காணப்படுகிறது, இதன் இலைகள் நீண்ட காம்புடன் விரல்களை போல் விரிந்து நல்ல மணமுடன் காணப்படும். பூக்கள் வெண்மை மற்றும் கருஞ்சிவப்பு நிறமுடைய மலர்களைக் கொண்ட சிறு செடியாகும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இத்தாவரம் ஓராண்டு வளரும் செடி வகையாகும் பிசுபிசுப்பான ரோமம் வளர்ந்து காணப்படும்.

இதன் மலரானது பகல் வேளைகளில் குனிந்தும், மாலை வேளையில் பிரகாசமாக மலர்ந்தும் காணப்படும். மாலை வேளையில் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்பதால் வேளை என்ற பெயரும், நல்ல மருந்தாக செயல்படுவதால் நல் என்ற அடைமொழியும் சேர்ந்து நல் வேளை என்று அழைக்கப்படுகிறது. இது பீட்டா கரோட்டின், சுண்ணாம்புச்சத்து போன்ற நல்ல பொருட்களை உள்ளடக்கியுள்ளது. வெள்ளைப் பூண்டுடன் இதன் முழு தாவரத்தையும் சேர்த்து காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து நாள்பட்ட தோல் நோய்களை குணமாக்க பயன்படுகிறது.  பல்வேறு நலன்களைக் கொண்ட நல் வேளை பற்றி பார்க்கலாம்.

தாவர விவரம்

மூலிகையின் பெயர்நல் வேளை
தாவரப்பெயர்GYNANDROPSIS PENTAPHYLLA
வேறு பெயர்தை வேளை
தாவரக்குடும்பம்CAPPARIDACEAE
பயன் தரும் பாகங்கள்பூ, இலை மற்றும் விதைகள்

மருத்துவ பயன்கள்

நல் வேளை விதையின் பயன்கள்

இதன் விதைகளை கடுகுக்கு பதில் உபயோகிக்கலாம் இதில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. மேலும் இது இசிவு அகற்றியாகவும், வயிற்றுப் புழுக்கள் கொல்லியாகவும், குடல் வாயுவை அகற்றவும் பயன்படுகிறது

வயிற்று வலி நீங்க

நல் வேளை விதைகள் சிறிதளவு  எடுத்து, அதனை நெய்யில் வறுத்து பொடியாக்கவும். இதனை  ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து குடித்து வர கிருமி வெளியேறி வயிற்றுவலி நீங்கும். இதனை சிற்றாமணக்கு எண்ணெயிலும் கொடுக்கலாம்.

கட்டிகள் நீங்க

இதன் விதையுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு அரைத்து கட்டிகளில் பற்றுப்போட அவை பழுத்து உடையும்.

குடல் சுத்தமாக

நல் வேளை  விதைகளை  நெய்விட்டு வறுத்து பொடியாக்கி குழந்தைகளுக்கு அரை கிராம் அளவு, பெரியோருக்கு 4 கிராம் அளவு காலை, மாலை என மூன்று நாள் விளக்கெண்ணையில் சேர்த்து கொடுத்து வர  பேதி உண்டாகி  குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் நீங்கும்.

நல் வேளை  பூவின் பயன்கள்

நல்வேளை என்று அழைக்கப்படும் தை வேளை வெள்ளை நிறத்தில் பூ பூக்கும். இதன் பூக்களுடன் சிறிய வெங்காயம், மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து நெய்யில் பொரித்து உட்கொண்டு வர தொண்டை வலி நீங்கும். அதுமட்டுமின்றி  நரம்பு தளர்ச்சி மாறி, ஆண்மை சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

இதன் பூச்சாறு 10 துளி அளவு தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கபம், கண மாந்தம், சளி, மூச்சுத்திணறல், சுரம், நீர்க்கோவை போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். இது கோழை அகற்றி, பசி உண்டாக்க கூடிய தன்மையுடையது.

நல் வேளை இலையின் பயன்கள்

இதன் இலைச்சாறு ஒரு துளி அளவு காதில் விட சீழ்வடிதல் நிற்கும். இதன் இலையை அரைத்து பற்று போட சீல் பிடித்த கட்டிகள் உடைந்து விரைவில் ஆறும். நல் வேளை இலை நீர்க்கோவை நோய்களை நீக்க கூடியதாகும்.

இதன் இலைகளை கீரையாக சமைத்து உண்ணலாம். இது பூ பூப்பதற்கு முன் கீரைகளைப் பறித்து நெய்யில் பொரித்து சாப்பிட இருமல், சளி, மார்பு வலி, மலச்சிக்கல் நீங்கும். மேலும் பெண்களுக்கு உதிர சிக்கலையும் ஒழுங்குபடுத்துகிறது.

தலைவலி நீக்கும் நல் வேளை

சிறிதளவு நல் வேளை இலையுடன் உப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து நன்கு சாறு பிழிந்து மூன்று சொட்டு அளவில் காதில் விடவும். இவ்வாறு செய்வதால்  இடது பக்க தலைவலியும், இடது காதில் விட வலது பக்க ஒற்றைத் தலைவலியும் நீங்கும்.

மேலும் பல வருடமாக இருக்கும் தலைவலிகளுக்கு அதிக அளவு இலைகளை எடுத்து சாறு பிழிந்து இலை சக்கையை தலை முழுவதும் வைத்து  ஒரு துணியால் கட்டவும். பின் 15 நிமிடம் கழித்து அந்த சக்கையை எடுக்கவும். சக்கையை பிழியும் போது அதிகளவு நீர் வெளியேறியிருப்பதைக் காணலாம். மீண்டும் மூன்று நாட்கள் சென்ற பின் இம்முறையை செய்யவும். இவ்வாறு 3 முறை செய்ய நாள்பட்ட தலைவலி நீங்கும்.

இதன் சமூலத்தை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அதன் சக்கையை தலையில் வைத்து கட்டலாம். இவ்வாறு செய்வதால் நீர்க்கோவை, தலைபாரம், தும்மல், தலைசுற்றல் மற்றும் தலைகுத்தல் போன்ற பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

தைவேளை இலையை கஷாயமாக காய்ச்சி தினமும் மூன்று வேளை 50 மில்லி அளவு குடித்து வர வாத சுரம், சீதளச் சுரம் நீங்கும்.

கஷாயம் காய்க்கும் முறை

நல் வேளை இலை –      ஒரு பிடி

சுக்கு                    –      ஒரு துண்டு

மிளகு                   –      6

சீரகம்                   –      ஒரு சிட்டிகை

இவை அனைத்தையும் நன்கு இடித்து அரை லிட்டர் அளவு நீரில் சேர்த்து  200 மில்லி அளவு வரும் வரை காய்ச்சவும். நல் வேளை கஷாயம் தயார்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!