தமிழர் வாழ்வின் தொன்மைகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது மயிலாப்பூர் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கூறுகள் மிகுந்த திருக்குறள் கொடுத்த ஐயன் திருவள்ளுவர் பிறந்த மயிலை, ஆன்மிகத்துக்கும் பெயர் பெற்றது. சைவம், வைணவம் இரண்டும் இங்கே தழைத்து விளங்குகின்றன.
சைவ மக்கள் போற்றும் பிரசித்தி பெற்ற முக்கியமான ஏழு சிவத்தலங்கள் மயிலையில் உள்ளன. அவற்றை முறையே வரிசைப்படி வழிபாடு செய்தால் எல்லாவித நன்மைகளையும் பரிபூர்ணமாக பெறமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு. மயிலையின் சிவத்தலங்களில் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பற்றி அறிந்தவர்கள் பலரும், மற்ற ஆறு சிவத்தலங்களை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சித்தர்கள் வழிகாட்டுதலின்படி மற்ற ஆறு சிவதலங்களையும் வணங்கியபின், கபாலீஸ்வரர் திருத்தலத்தை வணங்குதலே முறையான வழிபாட்டு முறையாகும். வாருங்கள் மயிலையின் சிவத்தலங்கள் பற்றி வரிசையாக பார்க்கலாம்.
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்
இத்திருக்கோயிலில் ஈசனோடு உறைந்திருக்கும் தாயார் பெயர் பொற்கொடி அம்மன். அண்டத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அசைவுக்கும், சிந்தனைக்கும், செயலுக்கும் காரணமாயிருப்பவர் ஈசன் காரணீஸ்வரர். திருமண வரம் வேண்டுபவர்கள் காரணீஸ்வரரை வழிபட்டால் உற்ற துணை கிடைத்து வாழ்வு சிறக்கும் என்பது உண்மை. ஏழு தலங்களுள் வழிபடவேண்டிய முதல் தலம் இதுவே.
அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயிலின் தேவி மகா திரிபுரசுந்தரி. புராண காலத்தில் 64 புனித தீர்த்தக் குளங்கள் இந்தக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. சிவராத்திரி நாளில் சூரிய தேவன் தன் ஒளிக்கீற்றுக்களை சிவலிங்கத்தின் மீது விழச் செய்து சிவ வழிபாடு செய்வதன் சாட்சியாக, சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழுவதை நாம் பார்க்கமுடியும். இக்கோயிலில் வழிபாடு செய்வதன் மூலம் வளமான குடும்ப வாழ்வை பேணிக்காக்க முடியும்.
அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயிலில் தாயார் கருணையே உருவான காமாட்சி அம்மன் ஆவார். கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது இக்கோயில். நவகோள்களில் ஒன்றான வெள்ளியின் அதிபதி சுக்கிரன், இக்கோயிலில் சிவனை வழிபட்டு இழந்த தன் பார்வையை மீண்டும் பெற்றதால் வெள்ளீஸ்வரர் என்று ஈசன் அழைக்கப்படுகிறார். ஆன்மாவின் வாசலான கண்கள் கலியுகத்தில் பலவித காட்சிகளையும் கண்டு, ஆசையினால் அலைக்கழிக்க படாமல் கட்டுப்படுத்தி, நம் ஞான கண்களை திறப்பவர் வெள்ளீஸ்வரர். இவரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான கண் சம்பந்தப்பட்ட குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
அருள்மிகு விருபாட்சீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயிலின் ஈசனோடு அருள்பாலிப்பவர் விசாலாட்சி தாயார். அண்டத்தில் உருவாகும் அனைத்து ஜீவன்களின் வாழ்வுக்கு ஆதாரமான ஜீவ சக்தியை கொடுப்பவர் விருபாட்சீஸ்வரர். தாயார் விசாலாட்சி விருபாக்ஷி மலர்களை அணிந்து காட்சி தருகிறார். இக்கோயிலில் ஈசனையும் தாயாரையும் வழிபடுவதன் மூலம் மனம் மற்றும் உடல் புத்துயிர் பெறுவதை உணர முடியும்.
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
காரணீஸ்வரர் திருக்கோயிலுக்கு நேரெதிரே அமைந்திருக்கிறது வாலீஸ்வரர் திருக்கோயில். தாயார் பெரியநாயகி சிவனோடு அருள்பாலிக்கிறார். உடலுக்குத் தேவையான வலிமையையும், மனதுக்கு தேவையான தைரியத்தையும் அளிக்கிறார் இத்திருக்கோவிலின் ஈசர். பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், குழந்தைகள் பயத்திலிருந்து வெளிவரவும் திருக்கோயிலில் வழிபாடு செய்வது அவசியம்.
அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில்
காரணீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஈசன், தாயார் மரகதாம்பாளுடன் அருள் மழை பொழிகிறார். மல்லிகை தன் மணத்தை பரப்பி அனைத்து இடங்களையும் நல்ல வித நறுமணத்தோடு இருக்க செய்கிறது. அதுபோல இத்தலத்தில் ஈசன் அனைத்து மனங்களிலும் அருள் மணத்தை பரவ செய்து நல்வழியில் செல்ல செய்கிறார். மல்லீஸ்வரர் உடன் மரகதாம்பாள் தாயாரை வழிபடும்போது, கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் தீயவழியில் செல்லாமல் நன்மையை கடைபிடித்து வாழ்வில் நலம் பெற முடியும்.
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்
மயிலாப்பூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். புகழ் பெற்ற இக்கோவிலில் இறைவனுடன் உறைவது கற்பகாம்பாள் தாயார். சைவ முறை பெரியோர்களான அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலம் இதுவாகும். பிரம்மனின் அகந்தை அழிய அவரின் தலைகளில் ஒன்றை கிள்ளி எறிந்த சிவனின் சாபத்திலிருந்து விடுபட பிரம்மன் வழிபட்ட தலமாகையால் இத்தல ஈசனுக்கு கபாலீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் பார்வதி தேவி மயில் உருவில் வழிபட்டு சிவனை அடைந்த தலமும் இதுவே. இராமாயண போருக்கு முன், இத்தல இறைவனை ராமன் வழிபட்ட வரலாறும் உண்டு. குமரனுக்கு சக்தி தேவி வேல் கொடுத்த சிறப்பு பெற்றதும் இத்தலமே ஆகும். இங்குதான் சம்பந்தர் பூம்பாவை எனும் பெண்ணை இறப்பிலிருந்து உயிர்ப்பித்தார். இத்தல ஈசனை வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை.
“மயிலையே கயிலை, கயிலையே மயிலை” என்று சிறப்பு பெற்ற சைவ சிவத்தலங்கள் பலவற்றை கொண்டது மயிலாப்பூர். நாம் இங்கு பார்த்த ஏழு கோயில்கள் மட்டுமல்லாமல் பல சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் இங்கு உள்ளன. அவற்றை வழிபட்டு வாழ்வில் நற்கதி அடைவோம்.
– ராஜலெட்சுமி சுரேஷ்