கோழையை அகற்றும் முசுமுசுக்கை

Spread the love

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள், சுணைகள், கொண்டவை. சிவப்பு நிறமானவை. ஆண், பெண் மலர்கள் தனித் தனியானவை. பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது.  இலை, வேர் ஆகியவை மருத்துவ குணம் மிக்கவை.

இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும் தன்மை கொண்டது. சளியகற்றுவதோடு வாந்தியையும் கட்டுப் படுத்தும். ஆண்மையை அதிகரிக்கும் சிறப்பும் இதற்கு உண்டு. முசுமுசுக்கை இலை கோழையகற்றும். இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும். வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

முசுமுசுக்கை கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வறட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.

தோசையாகவும் செய்து இதை சாப்பிடலாம். 3 பிடி இலைகளை கால் கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியில் இருந்து நிவாரணம் பெறுவதோடு நாக்குச் சுவையின்மையும் நீங்கும்.

முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.

3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல் குணமாகும். ரத்தமும் சுத்தமாகும்.


Spread the love