விலை குறைவு + பலன் அதிகம் = கடுகு எண்ணெய்

Spread the love

இந்தியாவில் பலவகையான சமையல் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடலை எண்ணெய், எள் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி எண்ணெய், பனை எண்ணெய் (பாமாயில்) மற்றும் கடுகு எண்ணெய் போன்ற முக்கியமான சமையல் எண்ணெய்களை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றுள் கடுகு எண்ணெய் விலையில் குறைவு என்பது மட்டுமல்லாது உடலுக்கு பல வகைகளில் நன்மையளிக்கிறது. இதன் காரணமாக மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் கடுகு எண்ணெய் தனிச்சிறப்பு பெறுகிறது.

கடுகின் பண்புகள்

வாந்தி உண்டாக்கும். வெப்பம் உண்டாக்கும். கொப்புளமெடுக்கும். செரிமான சக்தி தரும். சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு இருவகை உள்ளது.  கருங்கடுகு தலைவலியைத் தரும். இருமல், கோழை, கபம், பைத்தியம், வாத கபம், குடைச்சல், முடம், அக்கினி மந்தம், வாத தோஷம், குழம்பிய உமிழ்நீர், வயிற்று வலி, கிரகணி, திரிதோஷம் ஆகியவற்றை விலக்கும். மேலும் வாத, சீதக்கடுப்பு, சந்து வாதம், கீழ் வாதம், அஜீரணம், தலை சுற்றும் உணர்வு, விக்கல் நீக்குகிறது. இது நீரைப் பெருக்கும். கடுகில் 25 முதல் 39 சதவீதம் வரை எண்ணெய் இருக்கிறது. கடுகு எண்ணெய் வடஇந்தியாவில் பயன்படுத்துவது போல தென் இந்தியாவில் பயன்படுத்துவது இல்லை எனினும் குறிப்பிட்ட ஒரு சில உடல் பிரச்சனை தீர நாமும் பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

கடுகு விதைகளை குறைந்த அழுத்தத்தில், குறைந்த வெப்பநிலையில் உட்படுத்தி கரு மஞ்சள் நிறத்தில் பிரித்தெடுக்கப்படுகிறது. இது வேறுபட்ட காரமான நெடியைத் தருகிறது. பல நு£ற்றாண்டுகளாக வட இந்திய கலாச்சாரத்தில், பாரம்பரியமாக கடுகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமம், தலைமுடி மற்றும் இதர உடற்பாகங்களுக்கு பயன் தரக்கூடியதாக கடுகு எண்ணெய் அமைந்துள்ளது.

இதயத்திற்கு நல்லது

ஒற்றை நிறைவுறாக் கொழுப்பும், பல நிறைவுறா கொழுப்பும், கடுகெண்ணெயில் இருக்கிறது. இதனால் கடுகெண்ணெய் இதயத்திற்கு ஏற்ற உணவுப் பொருளாக அமைந்துள்ளது. கடுகெண்ணெயில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிக அளவில் உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்பு உள்ளதால் உடல் எடைக் குறைப்பதிலும் உதவுகிறது. பாட்டி காலத்தில் இருந்தே நீங்கள் கடுகெண்ணெய் பயன்படுத்தி வந்தீர்கள் எனில் இனி மேலும் இதைத் தொடர்வது நல்லது. கடுகெண்ணெய் அவ்வளவு விலை உயர்ந்தது அல்ல. எனினும், சுத்தமான கலப்படமற்ற கடுகெண்ணெயாக உள்ளதா என்பதை அறிந்து சமையலுக்குப் பயன்படுத்தினால் போதுமானது.

சருமப் பாதுகாப்பில் கடுகு எண்ணெய்

கடுகெண்ணையை உபயோகித்து உடலுக்கு மசாஜ் செய்தால் சருமம் பல பயன்களை பெறுகிறது. குழந்தைகளுக்கு தவறாமல் கடுகெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் தோல் பளபளப்பு அடைகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆன்டி பாக்டீரியா (பாக்டீரியாக்களை அழிக்கும்) பண்புகளைப் பெற்றுள்ளதால் கலப்படமற்ற கடுகெண்ணெய் பயன்படுத்தி தவறாது சருமத்தினை மசாஜ் செய்வதினால் தோல் சார்ந்த அனைத்து தொற்று நோய்களையும் தடுக்கிறது. கடுகெண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் சூரியக் கதிர்வீச்சின் காரணமாக ஏற்படும் அனைத்து கெடுதலை தடுத்து, உடலை இயற்கையாக பாதுகாக்கும் ஒரு கேடயமாக கடுகெண்ணெய் பயன்படுகிறது.

து£ய கடுகெண்ணெயில் மஞ்சள் கலந்து குழந்தைகளை மசாஜ் செய்யலாம். கடுகெண்ணெய் மூலம் மசாஜ் செய்து வந்தால் சருமமானது மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். தோல் சுருக்கம், சருமத்தின் மூப்பைத் தடுக்கும். மசாஜ் செய்வதற்கு சுத்தமான கடுகெண்ணெய் எடுத்து சருமத்தில் இட்டு மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து வீட்டில் தயாரித்த குளியல் பவுடரைப் பயன்படுத்தி கழுவி விடவும். உதடுகளையும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுகெண்ணெய் மூலம் மசாஜ் செய்வதும் உண்டு.

சளி, இருமல் மற்றும் நெஞ்சு அடைப்பா?

மிதமான சூடு உள்ள கடுகெண்ணெய் எடுத்துக் கொண்டு மார்பில் இட்டு இதமாக தேய்த்து விடுங்கள். மார்பு அடைத்தது போல உள்ள உணர்வுக்கு நிவாரணம் தரும். கடுகெண்ணெயில் சிறு கற்பூரத்துண்டு குறைந்த வெப்பநிலையில் சூடுபடுத்தவும். மீறினால் தீப்பிடித்து விடும் அபாயம் உண்டு. கர்ப்பக் காலத்தில் தாய்மார்களுக்கு கால் தசைப் பிடிப்பு காரணமாக வலி இருக்கும். இதற்கு மேற்கூறியபடி தயாரித்த எண்ணெய் மிகவும் பயன்படுகிறது.

எலும்பு மூட்டுகளுக்கு சிறந்த எண்ணெய்

மிதமான சூடுள்ள கடுகெண்ணெயை உடலில் மசாஜ் செய்து தேய்த்து விடுவதால் உடலில் அனைத்துப் பகுதிகளிலும் பாயும் இரத்த ஓட்டத்தை தங்கு தடையின்றி செல்ல உதவுவதால் வலியினை நீக்குகிறது. மிதமான சூடுள்ள எண்ணெயுடன், காய்ந்த சுக்குப் பொடி கலந்து இதமாக மசாஜ் செய்தால் உடல் உள் அழற்சியினை நீக்க உதவுகிறது. இதன் காரணமாக வலியில் இருந்து நிவாரணம் தருவதுடன் உடல் உறுப்புகள் சீராக இயங்கும் தன்மையை வழங்குகிறது.

முடி உதிர்கிறதா? கவலையை விடுங்கள்.

முடி உதிர்தலைக் கடுகெண்ணெய் தடுக்கிறது. உலர்ந்த, பளபளப்பற்ற, கரடு முரடான மற்றும் நலிவுற்ற முடிகளை சீர் செய்ய மிகவும் எளிதான மற்றும் செலவு குறைந்த சிறந்த சிகிச்சையை கடுகெண்ணெய் வழங்குகிறது.

வடஇந்தியாவில் புத்தம் புதிதான மருதோன்றி இலையை, கடுகெண்ணெயுடன் கலந்து தயாரித்த மூலிகைத் தைலத்தை தலைமுடி பராமரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் முடி உடைவதையும் தடுக்க இயலுகிறது. பேன் தொல்லை வராமல் தடுப்பதுடன் முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் அமைகிறது.


Spread the love