முலாம் பழம்

Spread the love

முலாம்பழம், வெள்ளரிக் குடும்பத்தைச் சார்ந்தது. வெள்ளரிக்காயைப் போன்றே இதுவும் அதிக நீர்ச்சத்தையும், பயன்களையும் கொண்டது. உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். உடலிலுள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும் தன்மை உடையதால் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் எப்போதும் உட்கொள்ளலாம். கோடைக் காலத்தில்  முலாம்பழத்துக்கே முதல் இடம். பழத்தில் 60 சதவீகிதம் நீர்ச்சத்து இருப்பதால் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படும்.  உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும். தாதுக்கள் நிறைந்திருப்பதால், உடல் உரமாக்கியாகவும் செயல்படும். புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதனை உண்டால், உடனடித் தீர்வு கிடைக்கும். நீர்வேட்கையும் தணியும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு முலாம்பழ விதைகள் நல்ல நிவாரணி. சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கும் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை இருக்கும். இவர்கள் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், மலக்கட்டு பிரச்னையும் நீங்கும்.

 முலாம்பழம் அதிக குளிர்ச்சியானது என்பதால், ‘கப’ உடம்புக்காரர்கள் இதை தவிர்ப்பது நல்லது. எளிதில் சளிப்பிடிக்கும் குழந்தைகளுக்கு, குளிர்காலங்களில் முலாம்பழம் தருவதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே கப பிரச்னை உள்ள பெரியவர்கள், ஆஸ்துமா, மூச்சிறைப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவேண்டும். கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, மூட்டுத் தேய்மானங்கள் ஆகியவை அனைத்தும் வாதப் பாதிப்புகளே. எனவே, வாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


Spread the love