இசை மருத்துவம்!

Spread the love

மனதைக் கட்டுப்படுத்தும் வழிகளில் இசையும் ஒரு முக்கிய வழி எனும் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இசையின், கலைகளின் சரித்திரத்தைப் பார்த்தால் மனிதனின் சுய அனுபவங்கள், ஆசா பாசங்கள், மனதிலிருந்து வெளிவந்து ஆறுதலைத் தருவதற்காகவே இசை உருவாகியது என்பது தெளிவாகிறது.

ஞானயோகம், பக்தியோம், கர்மயோகம் போன்று நாதயோகமும், பயில வேண்டிய, பழகிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். மனித மனதிற்கு மூன்று குணங்கள் இருப்பது போல, சங்கீதத்திற்கும் மூன்று குணங்கள் உள்ளன, அவை – சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்களாகும். இதே போன்று சங்கீதத்திற்கும் மூன்று குணங்கள் உள்ளன என்று “சென்னை, சங்கீத சிகிச்சை நாத மையம்”, மேற்கொண்ட சமீப கால ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக் கொண்டால், மெதுவாக, நிதானமாக பாடப்படும் ராகங்களான மாயா, மாளவ கௌளம், நீலாம்பரி, பூபாளம் போன்ற ராகங்கள், சாத்வீக குணத்தை உண்டாக்குபவையாகும்.

குதுகலமாக பாடப்படும் ராகங்களான ஆனந்த பைரவி, தர்பாரி முதலிய ராகங்களும், மேல் நாட்டு இசைகளும், ரஜோ குணத்தை உண்டாக்குபவையாகும்.

ரஜோ குணத்துடன் சோம்பேறித்தனத்தையும் கலந்து பாடப்படும் பாடல்கள் தமோ குணத்தை உண்டாக்குபவையாகும். சினிமா பாடல்களில் பல, ரஜோ குணத்தை வெளிப்படுத்துபவை! அதே சமயம் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்கள், சினிமா பாடல்களில், ராகங்களை மேலும் இனிமையாக்கி சங்கீதத்தை சிகிச்சையாக பயன்படுத்தும் போது, கோபத்தையும், மன வேதனையையும் குறைக்கும் சாத்வீக இசைகளாக அமைகின்றன. சோம்பலைக் குறைக்க ரஜோ குண சங்கீதம் உதவுகின்றன. தமோ குணமுடைய சங்கீதங்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தவே முடியாதவை.

மனம் வேதனைப்படும் போது நமக்கு பிடித்தமான இசையை கேட்டால் மனம் லேசாகி, அமைதி அடையும். தியானம் செய்யவும், மனதை சீர் செய்யவும். மன உணர்ச்சிகளை சமனப்படுத்தவும், பய உணர்வுகள் நீங்கவும், இந்திய கர்நாடக சங்கீத ராகங்கள் சிகிச்சையாக பயன்படுகின்றன.

பொழுது போக்கிற்காக மட்டுமே இசையை நாடும் காலம் போய், மன மற்றும் உடல் வியாதிகளுக்கு சிகிச்சையாக சங்கீதம் பயன்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது.

உங்களுக்கு பயன் தரும் சில ராகங்கள்

வாத நோய்களைக் குணமாக்கும் ராகம் தர்பாரி

சுறுசுறுப்பை உண்டாக்கும் ராகம் பைரவி

ரத்தக் அழுத்தத்தை குறைக்கும் ராகம் அசாவேரி

காய்ச்சலை குணப்படுத்தும் ராகம் பைரவி

தலைவலியை போக்கும் ராகம் சாரங்கா

நெஞ்சு வலியை போக்கும் ராகம் தர்பாரி

இனிய இசையை அன்றாட பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மனம் இறுகி வேதனைப்படும் பொழுது கோபத்திற்கு மாறாக இனிய இசையை நாடுங்கள்.


Spread the love