முருங்கை கீரையை எல்லோருக்கும் தெரியும். தவசு முருங்கையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இதற்கு தவசு முருங்கைக் கீரை, மல்ட்டி வைட்டமின் கீரை, வைட்டமின் கீரை, சத்துக்கீரை ஆகிய பெயர்களும் உண்டு. சிறு செடி வகைத் தாவரம். மலர்கள் சிறியவை, நாக்கு வடிவமானவை, இளஞ்சிவப்பு வரிகள் கொண்ட வெண்மை நிறமானவை. தாவரம் முழுவதும் பச்சை நிறமான இலைகள் அடர்த்தியாக கொத்தாகக் காணப்படும். வைட்டமின் சத்துகளை அதிகமாகக் கொண்டவை என்பதால் மல்டி வைட்டமின் கீரை என்றழைக்கப்படுகிறது. தவசு முருங்கை முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. கோழையகற்றும் தன்மை கொண்டது. ஜலதோஷம், இரைப்பு, இருமல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. குழந்தைகளுக்கான சளி தீர ஒரு தேக்கரண்டி அளவுக்கு, தவசு முருங்கை இலைச் சாற்றை எடுத்து, சம அளவு தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் இப்படி சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும். சளி, இருமல் குணமாக இந்தசெடியை முழுமையாக உலர்த்திப் பொடி செய்து, சம அளவு சர்க்கரை கலந்து, அரை தேக்கரண்டி அளவு, 1 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டுவர வேண்டும். காலை மாலை வேளைகளில், 7 நாட்கள் இப்படி சாப்பிட வேண்டும்.
உடல் பலம்பெற, இலைகளைச் சமைத்துச் சாப்பிடலாம், கூட்டு, பொரியல் செய்தும் சாப்பிடலாம், பச்சையாக மென்று சாப்பிட வாய்ப்புண் உடனடியாகக் குணமாகும்.