முக அழகைத் தரும் முல்தானி மட்டி

Spread the love

முல்தானி மட்டி என்பது ஏதோ ஒரு மூலிகைச் செடியிலிருந்து உருவாக்கிய பவுடர் என்று தான் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். முல்தானி மட்டி என்பது களி மண்ணில் ஒரு வகை என்று கேள்விப் பட்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். களிமண், பாறைகளின் சிதைவினால் ஏற்படும் தாதுப் பொருட்களின் கலவை. நீண்ட காலம் பாவைகள் அதுவும் சிலிகேட் நிறைந்த பாறைகள் கார்பானிக் அமிலம் போன்றவற்றால் ரசாயனம் மற்றும் கால நிலை மாறுபாட்டாலும், ஹைட்ரோதெர்மல் ( நீர்உஷ்ணம் ) செயல்களாலும் சிதைவடைந்து களிமண் தாதுப் பொருட்கள் படிந்து விடுகின்றன. இதனால் களிமண் படிவங்களை ஏரிகளின் அருகாமையில், கடல் கரை ஓரங்களில் காணலாம்.

பெரிய அளவில் தாதுப் பொருட்களின் குவியல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், உண்டான இடத்திலிருந்து வேறு இடங்களுக்கும் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக சேர்ந்து விடுகிறது.

களிமண்ணில் கிட்டதட்ட 30 வகைகள் உள்ளன. சுத்தமான களிமண் கிடைப்பது அரிது. சர்ம நோய்களுக்கு சிலவகை களிமண்கள் மருந்தாகின்றன. உண்டாகும் இடத்திலேயே நிலை கொண்டிருக்கும் களிமண் படிவங்கள் முதல்தர படிவங்கள் அல்லது கயோலின் (Kaolin) களிமண் படிவங்கள் என்கிறோம். . பிறந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு நீர், ஐஸ், காற்று இவற்றால் கடத்தப்பட்ட களிமண் படிவங்களை இரண்டாம் படிவங்கள் (Secondary clay deposit) அல்லது அடுக்கு (வீழ்) படிவு‘ (Sedimentary clays) என்பார்கள்.முல்தானி மட்டி, கயோலின் போன்ற களிமண்கள் முகத்தின் அழகை, பளபளப்பை அதிகரிக்கும். இந்த களிமண்கள் சருமத்திலிருந்து அழுக்கை, நச்சுகளை காந்தம் இரும்பை இழுப்பது போல இழுத்து விடும். களிமண் முக மாஸ்க் என்று கூறலாம். அதிக எண்ணெய்ச் சுரப்பினால் முகம் பொலிவின்றி பருக்களால் பாதிக்கப்படுவதை முல்தானி மட்டி தடுக்கும். முல்தானி மட்டி ஆங்கிலத்தில் Fuller’s Earth  என அழைக்கப்படுகிறது. இது சர்மத்தைச் சுத்திகரிக்கும் இயற்கையான பொருள். ஈரமான முல்தானி மட்டி பச்சை நிறமாக காணும். இதை Montmorillonite – Braring Clay  பிரிவைச் சார்ந்தது. இந்த பிரிவிலுள்ள களிமண்கள் தண்ணீரை அதிகமாக உறிஞ்சி, உப்பும் திறமையுடையவை. பிரான்ச் நாட்டிலுள்ள Montonarillon  என்ற இடத்தில் இருந்து முதலில் எடுக்கப்பட்டதால் இந்த பெயர் வந்தது.

களிமண்ணின் குணாதிசயங்கள்

களிமண் தண்ணீருடன் சேர்ந்தால் இஷ்டப்படி உருவம் அமைக்க இணக்கமான பொருளாகிறது. உலர்ந்தால் கடினமாகிறது. நெருப்பில் சுட்டால் ரசாயன, பௌதிக மாற்றங்களை அடையும். சுட்ட களிமண் கடினமாகிறது. (உதாரணங்கள் – மண் பாண்டங்கள், செங்கல், பீங்கான் போன்றவை). களிமண்ணில் நீர் ஊடுருவி பரவாது.

கற்காலத்துக்கு முன்பேயே மனிதனுக்கு களிமண்ணின் உபயோகம் தெரிந்திருந்தது. எழுதுவதற்கு களிமண் பலகைகள் பயன்படுத்தப்பட்டன்.

களிமண்ணின் பயன்கள் ஏராளமானவை. நீர் தேக்கங்களில் நீர் கசியாமல் இருக்க, காகித தயாரிப்பில், தண்ணீரை வடிகட்டி சுத்திகரிக்க, கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள் தயாரிக்க – என்று களிமண்ணின் பல பயன்களை கூறலாம்.

மருத்துவத்தில் வயிறு கோளாறுகளுக்கு களிமண் நல்லது. தென் அமெரிக்காவில் கிளிகள் உணவிற்கு பின் களிமண்ணை தின்பதை கவனித்த பின் மனிதனின் வயிற்று பாதிப்புக்களுக்கும் களிமண் மருந்துகள் தயாரிக்கப்பட்டன

சர்ம நோய்களுக்கு சில வகை களிமண்கள் மருந்தாகின்றன. களிமண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரே (Spray) மருந்துகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்பட்டால், பூச்சிகளின் தொல்லையை தவிர்க்கலாம். இந்தியாவில் முல்தானி மட்டி தொன்று தொட்டு, அழகு சாதனமாக பயன்பட்டு வருகிறது. இந்தியாலின் வடமேற்கு பிரதேசங்களில் கிடைக்கிறது.

பொதுவாக முல்தானி மட்டி, கயோலின் போன்ற களிமண்கள் முகத்தின் பளபளப்பை, சர்ம அழகை அதிகரிக்கும். இந்த களிமண்கள் சருமத்திலிருந்து அழுக்கை, நச்சுகளை, காந்தம் இரும்பை இழுப்பது போல், இழுத்து விடும். தவிர இரும்பு, களிமண்களை முக பினிக் என்று கூறலாம். ஆரோக்கியமான சர்மம் உடழகை எடுத்துக்காட்டும். அதுவும் அதிக எண்ணை சுரப்பினால் முகம் பொலிவின்றி பருக்களால் பாதிக்கப்படுவதை முல்தானி மட்டி தடுக்கும்.

முல்தானி மட்டி உபயோகிக்கும் முறை:

1. தண்ணீரில் குழைத்து முகம், கழுத்து, முடி ஆகியவற்றில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். உடல் முழுவதும் கூடப் பூசிக் கொள்ளலாம்.

2. நார்மலான, உலர்ந்த சருமத்திற்கு முல்தானி மட்டி 6 பாகம் கற்றாழைச் சாறு, முட்டை வெள்ளை அல்லது சுத்தமான நீர், ஒரு பாகம் தேன் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம்.

3. எண்ணெய்ப் பசை மிகுந்த சருமத்திற்கு 5 பாகம் முல்தானி மட்டியுடன் தேன், கற்றாழைச் சாறு, எலுமிச்சைச் சாறு இவைகள் தலா ஒரு பாகம் கலந்து பயன்படுத்தினால் நல்ல நிவாரணம் பெறலாம்.

அழகுக்கு வால்நட்ஸ் உதவும்:

உலர் பழங்கள் (Dry Fruits) என்று சொல்லப்படும் நட்ஸ் நமது உடலுக்குக் குறிப்பாக வால்நட்ஸ் ஆரோக்கியத்தை அளிப்பது மட்டுமல்லாமல், வெளிப்புறத்திற்கு அழகையும் அள்ளித் தெளிக்கிறது.

வால் நட்ஸில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி அணுக்களை சீர்படுத்துகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ள சருமம் சிறப்பாக இருக்கும். மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், வயதாகும் அறிகுறிகள் தெரியாது. உங்களுக்கு வயதானதே வெளியில் தெரியாது. வால் நட்ஸை சாப்பிடுவதன் மூலம் அல்லது வால் நட்ஸ் எண்ணெயை முகத்தில் தேய்ப்பதின் மூலம் கோடுகள் மற்றும் சுருக்கங்களுக்கு விடை கூறலாம். வால் நட்ஸ் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும். வால் நட்ஸ் எண்ணெய்  பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணம் கொண்டது. ஒமேகா 3 கொழுப்புகள் வால்நட்ஸில் அதிகமாக உள்ளது. இதனால் சரும அணுக்களை வலுவாக்கவும், சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும், நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love